விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (5)

13. காந்திஜியும் கர்ம யோகமும்

இதெல்லாம் நடைமுறை சாத்தியமா என்று கேட்கலாம். சாத்தியமே என்று வாழ்ந்து காட்டியிருக்கிறார் காந்திஜி. "என் வாழ்க்கையே என் செய்தி" என்றவர். ஆங்கில அரசுடன் அகிம்சைப் போர், தீண்டாமை ஒழிப்பு இயக்கம், நிர்மாணத் திட்டங்கள், இந்து-முஸ்லிம் இனவெறிக் கலவரம், இறுதிக் காலத்தில் ஆட்சிக்கு வந்தவர்களின் தடுமாற்றம், காங்கிரசுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இத்தனை பரபரப்புக்கு நடுவிலே வாழ்ந்தவர், பிரச்சினைகளைச் சந்தித்தவர் – என்றாலும் அந்தப் பொக்கை வாய்ச் சிரிப்பு மாறவில்லேயே? இவ்வளவு கடுமையாக உழைக்கிறீர்களே, vacation எடுத்துக் கொள்ளக்கூடாதா என்று அன்பர் ஒருவர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், "நான் எப்போதுமே vacation-ல்தானே இருக்கிறேன்?" இந்த மனோபாவத்துக்குக் காரணம் அவரது அத்தனை உழைப்பிலும் இம்மி அளவும் சுயநல நோக்கம் இல்லை. இதுதான் கர்ம யோகம்.

14. கர்ம யோகத்தினால் என்ன பலன்?

ஏற்கெனவே சிந்தித்தவற்றின் மூலம் கர்ம யோகத்தின் பலன்களாக இரண்டு பலன்கள் நமக்குப் புலனாகின்றன.

முதலாவது, கர்ம யோகம் பயில்வதனால் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்காது என்பது இல்லை. சம்சாரத் துயரங்கள், மன அமைதி குலையச் செய்யும் நிகழ்ச்சிகள் எல்லாம் வராது என்பது இல்லை. ஆனால் அத்தனைக்கும் மத்தியில் – தெளிவான சிந்தனைகள், பிரச்சினைகளைச் சமாளிக்கும் ஆற்றல், உறுதி இவை கிடைக்கும். மாபெரும் சபைதனில் நாம் நடந்தால் நமக்கு மாலைகள் விழலாம்; அழுகிய முட்டைகள் கூட விழலாம். ஆனால் மாற்றுக் குறையாத தலைவன் என்று நம்மை நாமே தன்னம்பிக்கையுடன் தட்டிக் கொடுத்துக் கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும்.

அடுத்தபடியாக நெறிப்படுத்தப்பட்ட முயற்சியால், வினைகளால் அபரிமிதமான ஆற்றல் உண்டாகும். அது நம்மை மாமனிதனாக்கும். இயேசுநாதரும், புத்தரும், காந்தி மஹானும் அத்தகைய ஆதரிச ஆற்றல்கள் இதுவரை கண்டுள்ள உச்ச நிலை.

15. என்னால் முடியுமா?

கர்ம யோகப் பயிற்சியினால் நம் விதியை நாமே நிர்ணயித்துக்கொள்ள முடியும் என்று பார்த்தோம். என்றாலும் துரியோதனக் குழப்பத்துக்கு வழி கண்ட பாடில்லை. எல்லாம் தெரிகிறது. ஆனால் மனம் கேட்க மாட்டேன் என்கிறதே என்ற அங்கலாய்ப்பு இருக்கவே இருக்கிறது. இதற்கு கீதை சொல்லும் வழி அப்பியாசம் (பயிற்சி) மற்றும் சிரத்தையின் மூலம் சம்ஸ்காரத்தை வெல்லலாம் என்பதே. அதனால்தான் "ஊழிற் பெரு வலி யாவுள?" என்ற வள்ளுவரும் கூடவே சொல்லி வைத்தார், "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்" என்று. பக்தி யோக மார்க்கமாக ஆண்டாள் நாச்சியார் சொல்லி வைத்ததும் இதுவே: "போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!"

16. கர்ம யோகத்தின் நிறைநிலை

கர்ம யோகத்தின் அடிப்படைகளைப் பற்றிய இந்தப் பகுதியை நிறைவு செய்வதற்கு முன்னால், இந்த யோகத்தின் அறுதிக் குறிக்கோளைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அதுதான், விட்டு விடுதலையாகி நிற்கும் நிலை. ‘மோட்சம்’ என்ற சரியான வார்த்தையைச் சொல்லி விட்டால் பயமாய் இருக்குமோ என்னவோ? இது பற்றி தமது கர்ம யோகச் சொற்பொழிவுகளின் நிறைவுரையில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் சுவாமிஜி. அந்தக் கட்டத்துக்கு வரும்போது அதைப் புரிந்து உணர்ந்து கொள்ளும் நிலைக்கு நாம் பக்குவப்பட்டிருப்போம்.

இப்போதைக்கு இதைத் தெரிந்து கொள்வோம். வாழ்க்கையின் மெய்யான குறிக்கோளை அடைவதற்கு வேதாந்தம் வேறு வேறு வழிகளைச் சொல்கிறது. சுவாமிஜி அவற்றை நான்கு வழிகளாகத் தொகுத்திருக்கிறார். செயல், அன்பு, உளவியல், அறிவு என்று. அவர் பயன்படுத்தும் தலைப்புகள்: கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம், ஞான யோகம்.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த யோகங்கள் ஒன்றொன்றும் சம்பந்தமேயில்லாமல் காற்றுப் புகாத பெட்டிகளாக அடைத்து வைக்கப்பட்டன அல்ல. ஒன்றில் ஒன்று விரவிக் கிடப்பனவே. எது மேலோங்கி இருக்கிறதோ, அந்தத் தலைப்பில் அந்த யோகத்தைக் குறிப்பிடுகிறோம். வேலையைத் தவிர வேறெந்தத் திறமையுமே அற்ற நபர்கள் என்று யாரும் இல்லை. பக்தி பண்ணுவதைத் தவிர ஒன்றுமே செய்யாதவர்கள் என்று யாரும் கிடையாது. அதுபோலத்தான் அறிவுக்குடுக்கைகள், வேறொன்றும் இல்லை என்பது போல யாரும் இல்லை. அவரவது குணங்களை ஒட்டி இந்த யோகங்கள் ஒவ்வொருவருக்கும் பொதுவாகப் பொருந்தும். நிறை நிலையில் இந்த நான்கு பாதைகளுமே ஒன்றாய்ச் சங்கமித்து ஒரே குறிக்கோளை நோக்கி இட்டுச் செல்லும். அனைத்து சமயங்களும், அனைத்து வினைகளும், அனைத்து வழிபாட்டு முறைகளும் நம்மை அழைத்துச் செல்வது ஒரே நிறை நிலையையே.

17. எப்படித் தொடங்குவது கர்ம யோகப் பயிற்சியை?

ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வப்போது வருகிற வேலையைச் செய்வோம். ஒவ்வொரு நாளும், கொஞ்சம் கொஞ்சமாக தன்னலம் அற்றவராக ஆகப் பயில்வோம். வேலையைச் செய்வோம். நம்மை வேலை செய்யத் தூண்டும் உந்துதல் எது என்று கண்டறிவோம். ஆரம்ப வருஷங்களில், விதிவிலக்கில்லாமல், நமது நோக்கங்கள் எல்லாமே தன்னலமாகவே இருப்பதைக் காண்போம். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக, விடாமுயற்சியினால், இந்த தன்னலம் கரைந்து போகும். நிறைவாக, உண்மையில் தன்னலக் கலப்பே இல்லாமல் நாம் பணி புரியக்கூடிய அந்த நாள் வரும். ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள், வாழ்க்கைப் பாதையில் முட்டி மோதிக் கொண்டு செல்கையில், நாம் துளிக்கூட சுயநலம் இல்லாதவராக மாறும் அந்த நாள் வரும் என்று நம்புவோம். அந்த நிலை வரும் தருணம், நமது அத்தனை ஆற்றல்களும் ஒருமுகப்படும். நமக்கே உரிய ஞானமும் வெளிப்படும்.

(தொடரும்)

About The Author