விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (8)

2.4. கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?

தமிழகத்தில் மேற்சொன்ன தலைப்பில் கர்ண பரம்பரைக் கதை ஒன்று வழங்கி வருகிறது. சுவாமிஜி ஒரு சிறந்த கதை சொல்லி. இந்தக் கதையைச் சொல்லி அவரவர் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதன் சிறப்பை விளக்குகிறார். ஸ்வதர்மம் என்பது அவரவர்களுக்கு இயல்பாய் வாய்த்த கடமை என்று பொதுப்படையாக விளங்கிக் கொள்வோம்.

ஒரு காட்டில் ஒரு சந்நியாசி வாழ்ந்து வந்தார். அவர் தீவிரமாக ஆன்மிகச் சாதனைகள் செய்து வந்தார். ஒருநாள் அவர் மரத்தடியில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்திருந்தபோது திடும் என்று அவர் தலை மீது உலர்ந்த சருகுகள் வந்து விழுந்தன. அவர் தலையைத் தூக்கிப் பார்த்தார். மரக்கிளையில் ஒரு கொக்கும் காகமும் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. கோபமாக அவற்றை அவர் முறைத்து ஒரு பார்வை பார்த்தார். அந்த வினாடியே அவை இரண்டும் சாம்பலாய்ப் போயின. சந்நியாசிக்கு ரொம்பச் சந்தோஷம்! தனக்கு இவ்வளவு தவ வலிமை வந்து விட்டதே என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.

கொஞ்ச நேரம் கழித்து அருகில் உள்ள ஊருக்குப் பிக்‌ஷைக்காகப் புறப்பட்டார். ஒரு வீட்டு வாயிலில் நின்று "பவதி பிக்‌ஷாம் தேஹி!" என்று குரல் கொடுத்தார். உள்ளிருந்து ஒரு பெண் குரல் வந்தது. "கொஞ்சம் பொறுத்திருங்கள்!" என்று. சந்நியாசியின் மனத்தில் கோபம் திகு திகு என்று எழுந்தது. ‘என்னைக் காக்க வைக்கிறாயா?, கேடு கெட்டவளே! என் சக்தி உனக்குத் தெரியாது போல இருக்கிறது’ என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டார். அப்போது உள்ளிருந்து மீண்டும் பெண்குரல் வந்தது, "சகோதரரே! உங்களைப் பற்றி ஒன்றும் பிரமாதமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! இங்கு கொக்கும் இல்லை; காக்காயும் இல்லை!"

சந்நியாசிக்கு ஆச்சரியமாகப் போயிற்று. இவளுக்கு எப்படி இந்த சமாச்சாரம் தெரிந்தது? கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குள் இருந்து அந்தப் பெண்மணி அன்னத்துடன் வந்து பாத்திரத்தில் இட்டாள். சந்நியாசி அவள் காலில் விழுந்து விட்டுக் கேட்டார், "அம்மணி! உங்களுக்கு எப்படி அந்த விஷயம் தெரிந்தது?" என்று. அவள் சொன்னாள், "சந்நியாசியே! உங்கள் தியானம், யோகம், தவம் எல்லாம் ஒன்றும் எனக்குத் தெரியாது. நான் சராசரிக் குடும்பப் பெண் . என் கணவருக்கு உடல் நலம் குன்றியிருக்கிறது. அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் உங்களைக் காக்க வைக்க வேண்டியதாயிற்று. வாழ்நாள் முழுவதும் என் கடமையை நான் ஒழுங்காகச் செய்து வருகிறேன். திருமணத்துக்கு முன் என் பெற்றோருக்குப் பணிவிடை செய்து வந்தேன். இப்போது என் கணவருக்கு. எனக்கென்று ஏற்பட்டுள்ள கடமையை ஒழுங்காகச் செய்து வருவதனால் எனக்கு ஞானம் கிடைத்துள்ளது. இதை விட இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அடுத்த ஊருக்குப் போங்கள்! அங்கே ஒரு வியாதன் இருப்பான். (வியாதர்கள் என்பவர்கள் வேட்டையாடி இறைச்சி வெட்டி விற்பவர்கள்.இழிந்த குலத்தினர் எனக் கருதப்படுபவர்கள்). அவனைக்கண்டு பேசினால் உங்கக்கு நல்ல உபதேசம் கிடைக்கும்" என்றாள்.

சந்நியாசிக்கு அதிர்ச்சி! ‘என்னடா இவள்! நம்மைப் போய் ஒரு வியாதனிடம் சென்று ஞானம் பெறச் சொல்லுகிறாள்’ என்று. இருந்தாலும் ஆவல் காரணமாக அந்த ஊருக்குச் என்று அந்த வியாதனைச் சந்தித்தார். அவன் இறைச்சியை வெட்டுவதிலும், வாடிக்கையாளரிடம் விலை பேசுவதிலும், காசை வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொள்ளுவதிலும் மும்முரமாக இருந்தான். சன்னியாசியைப் பார்த்து விட்டு, "அந்தப் பெண்மணி உங்களை அனுப்பினாளா? தயவு செய்து சற்றுப் பொறுத்திருங்கள்!" என்று சொல்லி விட்டுக் காரியத்தில் ஈடுபடலானான். கடையைக் கட்டியபின் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். பெற்றோர்களின் கால்களை அலம்பி வணங்கி விட்டு, அவர்களுக்கு உணவு பரிமாறி ஆசுவாசப்படுத்தி விட்டு சந்நியாசியிடம் வந்தான் "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? சுவாமி!" என்று விசாரித்தான். சந்நியாசி ஆன்மிக சம்பந்தமான சில கேள்விகளை அவனிடம் கேட்டார். அத்தனைக்கும் அவன் தெளிவாகப் பதில் சொன்னான். அதற்குப் பிறகு அவருக்கு அந்த வியாதன் முக்கியமான சில உபதேசங்களைச் செய்தான். அது வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளது.

சந்நியாசிக்கு ஒரே ஆச்சரியம்! "இவ்வளவு ஞானம் பெற்றுள்ள நீங்கள் ஏன் இந்த உடலில் இருக்கிறீர்கள்? இந்தத் தொழிலைச் செய்கிறீர்கள்?" என்று வினவினார். அதற்கு அந்த வியாதன் சொன்னது,

"எந்தத் தொழிலும் அசிங்கமானதோ தூய்மையற்றதோ இல்லை. எனது பிறப்பினால் எனக்கு இந்தச் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் அமைந்தன. சின்ன வயதிலேயே இந்தத் தொழிலைக் கற்றுக் கொண்டு விட்டேன். இதில் பற்றில்லாமல் செய்கிறேன். என் பணியைச் சிறப்பாகச் செய்ய முயல்கிறேன். இல்லறத்தானாக எனக்குள்ள கடமைகளைக் கருத்துடன் செய்து வருகிறேன். என் தாய், தந்தையரை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள முயன்று வருகிறேன். எனக்கு யோகம் தெரியாது. காட்டுக்குச் சென்று தவம் செய்ததில்லை. என்றாலும் நான் இதுவரை உங்களுக்குச் சொன்ன அத்தனை அறிவுரைகளும் ஞானமும், எனக்குக் கிடைத்த காரணம் எனக்கு வாழ்க்கையில் அமைந்த இட்த்தின் காரணமாக எனக்கு ஏற்பட்ட கடமைக்ளைப் பற்றின்றியும் பொறுப்புடனும் செய்து வருவதுதான்!"

ஸ்வதர்மம் பேணுவது என்பது இதுதான். நமக்கென்று ஏற்பட்ட கடமைகளைப் பற்றின்றியும் பொறுப்புடனும் செய்வது.

‘பற்றில்லாமல் வேலை செய்வதா? அது எப்படி? ஏனோ தானோ என்று வேலை செய்யச் சொல்கிறீர்களா?’ – நல்ல கேள்வி.

இதற்குப் பதில், இந்தக் கட்டுரைத் தொடரில் உரிய இட்த்தில் பின்பு வரும்.

–பிறக்கும்…

About The Author