விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (2)

4. வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

ஜேம்ஸ் ஆலன் என்ற தத்துவஞானி 1864ல் பிறந்து (சுவாமிஜி பிறந்ததற்கு ஒரு வருஷம் முந்தி) பிறந்து 1912 வரை வாழ்ந்தார். அவர் எழுதிய "As a Man Thinketh" என்ற நூல் பிரபலமான வாழ்வியல் நூல். இதனை டாக்டர் உதயமூர்த்தி ‘வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

ஜேம்ஸ் ஆலன் எழுதிய தத்துவத்தின் மையக் கருத்து, ‘இன்று நாம் இருக்கும் நிலைக்கு நம் எண்ணங்களே காரணம் என்பதும், நமது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் சிற்பி நாமே என்பதுவும்தான்’. அவர் சொல்வது, நமது செயல்கள் திட்டமிட்டுச் செய்பவை ஆனாலும் தன்னிச்சையாகச் செய்பவை ஆனாலும், அவை நமது எண்ணங்களின் விளைவே ஆகும் என்பதாகும்.

அவரது கருத்துப்படி, எண்ணங்கள் செயல்களாக ஆகின்றன. செயல்கள் பழக்கமாக உருவெடுக்கின்றன. பழக்கம் நமது குணத்தை நிர்ணயிக்கிறது. குணங்களின் விளைவே நமது சூழ்நிலையாக அமைகிறது. இன்னும் திட்டவட்டமாக அவர் சொல்லுவார். ‘நமது எண்ணங்களைக் கவனிப்பதன் மூலமும் மாற்றியமைத்துக் கொள்வதன் மூலமும் நமது சூழ்நிலையை, நமது விதியை நாம் விரும்பும் வண்ணம் அமைத்துக் கொள்ளலாம்’ என்பார் அவர்.

இந்த-இந்த சூழ்நிலைகள் வேண்டுமானால் இந்த மாதிரி எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், இந்த-இந்த சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டுமானால் இன்னின்ன எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுக் கூறுகிறார் அவர். இதை ஓர் அட்டவணையாகவே போட்டுக் கொடுத்துள்ளார் உதயமூர்த்தி. இந்த சிந்தனைக்கும் கர்மயோகத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

5. துரியோதனக் குழப்பம்

ரொம்ப சுலபம் போல் தெரிகிறது நம் விதியை, எண்ணங்களை, செயல்களை, பழக்கத்தை ஒழுங்காக நிர்வகிப்பதன் மூலம் நமது சூழ்நிலையையும் விதியையும் அமைத்துக்கொள்வது என்பது. என்றாலும் இது ஒரு மாயச் சுழல். அனுபவங்களும் சூழ்நிலைகளும் தரும் அடிகள் நமது எண்ணங்களையும் செயல்களையும் குணத்தையும் உருவாக்குகின்றன. இந்தச் செயல்களும், குணங்களும் மீளவும் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தி நமது விதியாக அமைகிறது. இந்தச் சுழலிலிருந்து மீளவே முடியாதா?

இந்த வட்டம் இப்படி அமைகிறது:
எண்ணங்கள் பதிவுகள்-> செயல்கள்-> மீண்டும் மீண்டும் அதே செயல்கள்-> பழக்கம்-> சூழ்நிலை; அனுபவங்கள்-> பதிவுகள்-> எண்ணங்கள்

துரியோதனனுக்கு இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டது: நல்லது எது, கெட்டது எது என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. என்றாலும் என்னால் தீமை செய்யாமல் இருக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?

இத்தகைய நிலைக்குக் காரணம் ‘ஸம்ஸ்காரம்’ என்பார்கள். இது பழைய வினை என்பதாகும். முன்பு எண்ணிய எண்ணங்கள், செய்த செயல்கள், பெற்ற அனுபவம் இத்தனையும் ஸம்ஸ்காரம் ஆகும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த ஸம்ஸ்காரம் பிறவி பிறவியாகத் தொடர்ந்து வருவது.

இப்போது நாம் சுவாமிஜிக்குத் திரும்புவோம். கர்ம யோகத்தின் மூலம் இந்த மாயச் சுழலிலிருந்து எப்படி மீள்வது, நமது ‘விதி’யை நல்ல வண்ணம் வடிவமைத்துக்கொள்வது என்பதைப் பற்றி எல்லாம் காண்போம்.

6. மனிதன் ஓர் ஆற்றல் மையம்

சுவாமிஜி சொல்கிறார் :

குணங்களை உருவாக்குவதில் செயலின் பங்கு மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. மனிதனை ஒரு மையம் என்று கொள்வோம். பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை ஆற்றலையும் தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்கிறான். அவற்றை ஒன்றாய் உருக்கி வார்த்தது போல் பிணைத்து பேரலையாய் வெளியே அனுப்புகிறான். அந்த மையமே நிஜ மனிதன். சர்வ வல்லபன். சர்வ ஞானி. நல்லதும் கெட்டதும், துன்பமும் இன்பமும் அவனை நோக்கி ஓடி அவனுள் ஒட்டிக் கொள்கின்றன. அவற்றை வைத்துக்கொண்டு குணம் என்னும் பேராற்றலை வடிவமைத்து வெளியே அனுப்புகிறான். அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் அவனுள் இருப்பதுபோல் அனைத்தையும் வெளியே அனுப்பும் ஆற்றலும் அவனுக்கு உண்டு.

7. கொஞ்சம் சின்மயா..

இது தொடர்பான சுவாமி சின்மயானந்தாவின் கருத்தொன்றை வாங்கிப் போட்டு வைத்துக்கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.

அறிவுக்கு அனுபவ வாசல்கள் ஐந்து. நா, விழிகள், மேனி, செவிகள், நாசி. இவற்றின் மூலமாக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய உணர்வுகள் நமது புற மனதுக்கு (objective mind) செல்கின்றன. இந்த உணர்வுகள் மனிதனின் ‘தான்’ என்ற மையத்தின் மூலம் சென்று வடிகட்டி, அவனது அக மனத்துக்குள் புகுகின்றன. ஏற்கெனவே பதிவாகியிருக்கும் ‘வாசனை’களுடன் கலந்து கட்டியாகி, செயல்களாக ஐம்புலன்கள் மூலம் வெளியுலகுக்கு வெளிவிடப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் மனிதனுக்கு இத்தகைய புறத் தூண்டுதல்கள் அமைகின்றன. உள்மனதில் தொடர்ந்து படிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பதிவுகள், ஏற்கெனவே உள்ள வாசனைகளைக் கூட்டுவதோடு நில்லாமல், அந்த வாசனைப் பதிவுகளின் தன்மையால் பாதிக்கப்படவும் செய்கின்றன. இவை செயல்களாக மாறும்போது, செயல்கள் மனதில் பதிந்துள்ள வாசனைகளைப் பிரதிபலிக்கின்றன.

சரி, இவற்றுக்கும் கர்ம யோகத்துக்கும் என்ன சம்பந்தம்? தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

About The Author