விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (10)

2.6. செய்க பொருளை!

"அத்தனைக்கும் ஆசைப்படு!" என்கிறார்கள் புதுயுக ஆன்மிகவாதிகள். புத்தபிரான் உட்பட நம் முன்னோர்களின் அறவுரையோ "ஆசையே துன்பத்துக்குக் காரணம்" என்பது. சுவாமி விவேகானந்தர் நமது பாரம்பரிய ஆன்மிகத்தில் ஊறித் திளைத்தவர். நவீனச் சிந்தனையாளரும் கூட. அவர் என்ன சொல்கிறார் இந்த விஷயத்தில்?

சுவாமிஜியைப் பரிச்சயமான ஒருவர் வந்து சந்தித்தார். சுற்றி வளைக்காமல் சொல்வதானால் அவர் ஓர் உதவாக்கரை. சோம்பேறி. எதிலும் ஆர்வம் இல்லாதவர். இந்த நபர் சுவாமிஜியிடம் திடும் என்று வந்து "சுவாமிஜீ! நான் ஆத்ம ஞானம் அடைய வேண்டும். வழிகாட்டுங்கள்!" என்று கேட்டுக் கொண்டார். சுவாமிஜி அவரிடம் கேட்ட கேள்வி: "உனக்குப் பொய் சொல்லத் தெரியுமா?" "தெரியாது" என்று பதிலிறுத்தார் வந்தவர். சுவாமிஜி சொன்ன அறிவுரை: "அப்படியானால் பொய் சொல்லக் கற்றுக்கொள்! ஜடமாக, விலங்கு போல இருப்பதை விடப் பொய் சொல்வது உயர்ந்தது. நீ ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கிறாய். நிச்சயமாகச் செயல் கடந்து சும்மா இருக்கும் ஆன்மிகப் பெருநிலையை நீ அடையவில்லை என்பது உறுதி. கெட்டதாக ஏதாவது கூடச் செய்யாத மந்தனாக இருக்கிறாயே!"

சுவாமிஜி நகைச்சுவைக்காக இப்படிச் சொல்லியிருந்தாலும் அவரது உள்ளார்ந்த கருத்தை இந்த நிகழ்ச்சி புலப்படுத்துகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் செயலின்மை கூடாது என்ற சிந்தனைத் தெளிவு நமக்கு வேண்டும்.

நமக்குச் செல்வம் வேண்டும். ஆனால், உலகம் பணத்தை நோக்கிச் செல்பவனை இழிந்தவனாகச் சித்தரிக்கிறது. "பணம் வேண்டும்! பணம் வேண்டும்!" என்று மனது கிடந்து அடித்துக் கொண்டாலும், இந்த வேட்டையில் கலந்து கொள்ள நமக்குத் துணிச்சல் இல்லை. இதுதான் பொய்யொழுக்கம் என்பது. இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. உலகாயத நடவடிக்கைகளில் முழு மூச்சாய் ஈடுபடுங்கள்! ஆரவாரங்களெல்லாம் அடங்கிய பின், ஒரு நேரத்தில் உங்களுக்கே தெரிய வரும் இவற்றிலெல்லாம் சாரம் ஒன்றும் இல்லை என! இன்ப துன்பங்களையெல்லாம் ஆண்டு அனுபவித்தபின் துறவு மனப்பான்மை தானாக வரும்! மனம் அமைதியில் லயிக்கும்! பணத்துக்கு, பதவிக்கு, அதிகாரத்துக்கு எல்லாவற்றுக்கும் ஆசைப்படுங்கள்! முழு மூச்சாக உழையுங்கள்!

செயலில் ஈடுபடாமல், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளாமல், உங்களுக்கு அமைதி, ஞானம், வீடுபேறு ஒன்றும் கிடைக்காது! துறவு, ஞானம், பற்றின்மை இவை பற்றியெல்லாம் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களாகச் சிறு வயதிலிருந்தே போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிலையை அடைந்தவர்கள் மிகச் சொற்பம். சுவாமிஜி சொல்கிறார் -அவர் இந்த உலகத்தில் பாதியைச் சுற்றி வந்திருக்கிறார். அதில் குறைந்தபட்சம் இந்த நிலை அடைந்த 20 பேரையாவது சந்தித்திருப்பேனா என்பது சந்தேகம் என்கிறார்!

வாழ்க்கையில் பல நிலைகளில் உள்ளவர்களின் கடமை பற்றி சுவாமிஜி விரிவாகவே சொல்லியிருக்கிறார். இல்லறத்தாரின் கடமை பற்றி அவர் சொல்லுகையில், அவர்கள்தான் சமுதாயம் முழுமைக்கும் அடிப்படை ஆதரவு என்கிறார். சமுதாயத்தில் ஏழை எளியவர்கள், பொருளீட்ட இயலாதவர்கள் அனைவருக்காகவும் அவர்கள் பொருளீட்ட வேண்டும். அறிவும் செல்வமும் பெற அவர்கள் பாடுபட்டே ஆக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவது நூற்றுக்கணக்கானவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையிலிருந்து வழுவுவது ஆகும். இது ஒழுக்கஹீனம் என்று அவர் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார்.

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.
 
நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சுமரம் பழுத்தற்று.
 
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு

என்பன போன்ற தமிழ் மூதுரைகளின் கருத்து சுவாமிஜியின் சிந்தனையில் வெளிப்படுகிறது.

சுவாமிஜி மேலும் கேட்கிறார், நாட்டில் பாடுபட்டுப் பணம் சேகரிக்கும் பலர் இல்லையென்றால் நமது நாகரிகம், ஆதரவற்றோர் இல்லங்கள், தொழில் நிறுவனங்கள் எல்லாம் எங்கிருந்து வரும்?

இல்லறத்தான், சமுதாய வாழ்வின் ஆதார மையம். நல்ல வழியில் பொருள் ஈட்டி நல்ல வழியில் செலவிடுவது என்பது இறை வழிபாடே ஆகும். இவன் செயல் ஆலயத்துக்குச் சென்று மெய்யுருகப் பிரார்த்தனை செய்வதற்கு ஒப்பாகும். பக்தனின் ஆத்ம சமர்ப்பணமும், தன்னலத் தியாகமும் முழுமையாக இவனிடமும் இருக்கின்றன.

ஆக, தயக்கமில்லாமல் செய்க பொருள்! பிறர் நலத்துக்காக நல்ல வழியில் செலவிடுக!

—பிறக்கும்…

About The Author

2 Comments

  1. Sundar

    பணம், பதவி, அதிகாரம் அனைத்துக்கும் ஆசைப்படு என்று கீதையோ, விவேகானந்தரோ சொன்னதில்லை. தயவு செய்து இது போன்ற தவறான தகவல்களைத் தர வேண்டாம். கர்மயோகம் பற்றி நிலாச்சாரலின் என்.கணேசன் கூட யூத்ஃபுல் விகடனிலும், அவர் வலைப்பூவிலும் கீதை காட்டும் பாதை என்ற தலைப்பில் மிக அருமையாக எழுதி வருவதில் ஆசையில் இருந்து அழிவு வரை செல்லும் பயணம் நன்றாகவே விளக்கப்பட்டுள்ளது.

  2. T.S.Venkataramani

    தி கம்ப்ளீட் ஒர்க்ஸ் ஆப் ஸ்வாமி விவேகானந்தா வால்யூம் 1 பக்கம்40 மற்றும்45,46 பார்க்கவும்.-வேணி

Comments are closed.