விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (25)

4. யோகம் என்பது செயலில் திறமை

4.9. பாண்டவர்களும் கீரிப்பிள்ளையும் தன்னல மறுப்பும்

திறமையாகச் செயலாற்றுவதற்கான மனோபாவங்களைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கர்ம யோகத்துக்குத் தேவையான முக்கியமான மனப்பாங்கு தன்னல மறுப்பேயாகும். உச்சக்கட்டத் தன்னல மறுப்பை விளக்க சுவாமிஜி ஒரு கதை சொல்கிறார். சுவாமிஜி சிறந்த கதைசொல்லி என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

குருக்ஷேத்ர யுத்தம் முடிந்ததும் பாண்டவர்கள் மிகப் பெரியதொரு யாகத்தை நடத்தினார்கள். ஏழை எளியவர்களுக்குத் தானங்களை வாரி வழங்கினார்கள். அந்த யாகத்தின் சிறப்பைப் பற்றி ஊர் உலகமெல்லாம் வியந்து பாராட்டியது. இதுவரை யாருமே இந்த மாதிரித் தான தர்மங்கள் செய்ததில்லை என்று எல்லாரும் பாராட்டினார்கள்.

இந்த நிலையில், யாக சாலைக்கு ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் உடலில் ஒரு பாதி தங்கமயமாக தகதகவென்று ஜொலித்தது. மற்ற பகுதி பழுப்பாக இருந்தது. அது யாக சாலையில் நன்கு புரண்டு விட்டுச் சொன்னது, "நீங்களெல்லாம் பொய்யர்கள்! நீங்கள் செய்தது பெரிய தானமே இல்லை". சுற்றியிருந்தவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். எப்படிச் சொல்கிறது இந்தக் கீரிப்பிள்ளை?

கீரிப்பிள்ளை விளக்கியது. ஒரு சின்ன கிராமம். அங்கு ஏழை அந்தணர் ஒருவர், அவர் மனைவி, மகன், மருமகள் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு மிகச் சொற்ப வருமானமே. ஒரு சமயம், நாட்கணக்கில் அந்தக் குடும்பம் பட்டினியில் இருந்தது. அப்போது குடும்பத்தலைவர், எங்கிருந்தோ சேகரித்துக் கொஞ்சம் தானியங்களைக் கொண்டு வந்தார். அதை உணவு சமைத்து நான்கு பங்காகப் பிரித்து, ஆளுக்கு ஒரு பங்காக எடுத்துக் கொள்ள இருந்தார்கள். அந்தச் சமயம் பார்த்து வாயில் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. திறந்து பார்த்தால், அதிதி ஒருவர் வந்திருந்தார். இந்தியப் பாரம்பரியப்படி, அதிதி என்பவர் கடவுளுக்குச் சமம். நமது வாழ்க்கை நெறிகளில் விருந்தோம்பல் என்பது முக்கியமானதொன்று. குடும்பத்தலைவர், வந்த விருந்தினரை வரவேற்று, தன் பங்கு உணவைக் கொடுத்தார். விருந்தினர் அதைப் புசித்து விட்டுச் சொன்னார், "நீங்கள் கொடுத்த சிறு உணவு என் பசியைக் கிளப்பிவிட்டது. பசி தாங்காமல் நான் செத்தே விடுவேன்!" மனைவி, "ஏழை ஒருவர் பசியோடு வந்திருக்கிறார். அவரது பசியை ஆற்ற வேண்டியது இல்லறத்தாராகிய நமது கடமை" என்று சொல்லித் தன் பங்கு உணவையும் அவருக்குக் கொடுத்தார். அப்படியும் அதிதியின் பசி தீரவில்லை. மகன் தன் பங்கு உணவையும் கொடுத்து விட்டுச் சொன்னான், "தந்தையின் கடமைகளுக்கு உதவ வேண்டியது மகனின் கடமை அல்லவா?" இன்னமும் பசி தீராத விருந்தினருக்கு மருமகளும் தன் பங்கு உணவைக் கொடுத்தாள். பசியாறி, அதிதி அவர்களை வாழ்த்திவிட்டுத் திருப்தியுடன் சென்றார். அன்று அந்தக் குடும்பமே முழுப்பட்டினி! அவர்கள் கொடுத்த உணவின் சில பருக்கைகள் தரையில் சிதறிக் கிடந்தன. அவற்றின் மீது நான் புரண்டேன். அந்தப் பருக்கைகள் பட்ட என் உடம்பின் பகுதி தங்க மயமாகிவிட்டது. அதிலிருந்து, மற்ற பகுதியும் தங்கமயமாக வேண்டுமென்று தான தர்மங்கள் நடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று தரையில் புரண்டு பார்க்கிறேன். பலனேதும் இல்லை! என் உடம்பின் மற்ற பகுதி தங்கமயமாக ஆகவே இல்லை!"

இந்தக் கதையைத் தன்னல மறுப்பின் உச்சக்கட்டத்தை விளக்குவதற்காக சுவாமி விவேகானந்தர் சொன்னார்.

— பிறக்கும்

About The Author