விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (17)

பகுதி 4: யோகம் என்பது செயலில் திறமை!
 
4.1: விவேகமே யோகம்

கர்ம யோகம் என்பது இடையறாது செயல்புரிவது,இயல்பாய் அமைந்த கடமைகளைச் செய்வது,தன்னலம் இன்றிச் செயல் புரிவது, ஊருக்கு நல்லது செய்வது என்றெல்லாம் பார்த்தோம். நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் மற்றொன்று உண்டு. திறம்படச் செயல் புரிவது! நல்ல நோக்கங்கள் இருந்தும், செயலாற்றும் திறமை இல்லையென்றால் நமது அத்தனை பிரயத்தனங்களும் வீணாவது மட்டுமல்லாமல், வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும். நரகத்தின் வழி கூட நல்லெண்ணத்தில்தான் அமைந்திருக்கிறது என்று சொல்வதுண்டு! கீதா வாசகம்: யோக:கர்மஸு கெளஸலம்!(யோகம் என்பது செயலில் திறமை!).

இந்தக் கீதா வாசகம் பற்றிச் சற்று வித்தியாசமான ஒரு கருத்தையும் தெரிந்து வைத்துக் கொள்வோம். சுவாமி தயானந்தாவின் கருத்து இது. ஒரு திருடன், திட்டமிட்டுச் சிறப்பாகப் பணியாற்றுவானானால் அவன் கர்ம யோகி ஆவானா? ஆக மாட்டானே? இந்த ஐயம் நம் எல்லோருக்கும் எழுவது இயல்பே. தயானந்தா அவர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என விவேகத்துடன் தெளிந்து செயல்படுவதுதான் கெளஸலம் என்பதன் பொருள் என்கிறார். ஏற்றுக் கொள்ள வேண்டிய நல்ல கருத்தே. என்றாலும் நம்மைப் பொறுத்த வரையில், செய்யத் தக்கது எது செய்யத் தகாதது என அறிந்து செயல்படுவது கர்ம யோகத்தின் ஒரு பகுதி என்று ஏற்கெனவே நமக்கு சுவாமி விவேகானந்தர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனவே நாம் மேற்கொண்டு, திறம்படச் செயல்படும் வழிவகைகளைப் பற்றிச் சிந்திப்போம்!

(Reference: Swami Dayananda-Talks on Emotional Maturity Ch.5: Page 49-57).

— பிறக்கும் “

About The Author