விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (18)

4. யோகம் என்பது செயலில் திறமை
4.2: குறிக்கோளும் வழிமுறையும்

‘இலக்கு நிர்ணயம்’ பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். நவீன நிர்வாக இயல் கண்ணோட்டத்தில் சுவாமிஜியின் சிந்தனையைப் பொருத்திப் பார்த்தோம். இலக்கை நிர்ணயித்த பிறகு, அதை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் சுவாமிஜி சொல்கிறார்.

இலட்சியம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதனை அடைவதற்கான வழிமுறைகளும்! நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தவறான வழிமுறைகளை நியாயப்படுத்தி விடக்கூடாது! உள்ளபடியே வழிமுறைகள் சரியாக இருந்தால், முடிவும் சரியாகவே அமையும் என்பார் சுவாமிஜி.

இங்கு நாம் பேச வந்த விஷயம், இலக்கு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை அடைவதற்குச் சின்னச் சின்ன அடிகளாகவே எடுத்து வைக்க வேண்டும். அந்தச் சின்ன step-களில் கருத்தும் கவனமும் தேவை! ஒரு குதிரைக்கு லாடம் சரியாக அடிக்காததால் ஒரு ராஜ்யமே பறி போனதாகச் சொல்லும் ஒரு வழக்கு உண்டு.

நம்மில் பெரும்பாலானோரிடம் இருக்கும் கோளாறு, மகத்தான இலட்சியக் கனவின் பரவசத்தில் ஆழ்ந்து போய், அதை அடைவதற்கான சின்னச் சின்ன வழிமுறைகளில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். 99 விழுக்காட்டு இலட்சியத் தோல்விகளுக்கான காரணம் என்ன என ஆராய்ந்து பார்த்தால், வழிமுறைகளைக் கோட்டை விட்டிருப்பது தெரிய வரும்.இலக்கை நிர்ணயித்தவுடன், அதை அடைவதற்கான steps, Activities ஆகியவற்றைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அவ்வப்போது, அவை சரியாக நடைபெறுகின்றனவா எனச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி, அனுபவ அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளத் தயங்கக் கூடாது. செயல்தான் விளைவை உருவாக்குகிறது என்பதை மறந்து விடக் கூடாது.விளைவு என்பது எங்கிருந்தோ தானாக வந்து குதிப்பதில்லை.செய்யும் காரியம்,சரியாகவும்,ஒழுங்காகவும், ஆற்றலுடனும் அமைந்தாலொழிய ஏற்ற முடிவை அடைய முடியாது.

இலட்சியத்தை நிர்ணயித்துக் கொண்டு,செயல்படும் வழிமுறைகளைக் கவனித்துக் கொண்டே வந்தோமானால், இலட்சியத்தை மறந்தே விடலாம்! சரியான வழிமுறையைச் செவ்வனே பின்பற்றி வந்தால் முடிவு எப்படி வராமல் போகும்? வழி சரியாகப் போட்டால் கணக்குக்குச் சரியான விடை வந்துதானே ஆக வேண்டும்? கிரிக்கெட் வீரர் மட்டையை ஏந்தியிருக்கையில் வருகின்ற பந்தைக் கவனிக்க வேண்டுமா, ஸ்கோர்-போர்டைப் பார்க்க வேண்டுமா?

பகவத்கீதை இதைத்தான் சொல்கிறது.செய்யும் காரியத்தில் மனம் முழுவதையும் ஈடுபடுத்திச் செய்ய வேண்டும். முழுத் திறமையையும் பயன்படுத்திச் செயல்புரிய வேண்டும். வேறு எந்த விஷயமும் நாம் செய்கின்ற வேலையிலிருந்து திசை திருப்பக் கூடாது. இப்படிச் சொல்லும் சுவாமிஜி, விசித்திரமாக ஒரு விஷயத்தையும் சொல்கிறார். அதாவது, நாம் நினைத்தபோது அந்த வேலையை விட்டுவிடவும் தெரிய வேண்டுமாம்!

அவர் சொல்கிறார், நாம் ஒரு காரியத்தை எடுத்துச் செய்கிறோம். முழுத் திறமையையும் பயன்படுத்தியே செய்கிறோம். என்றாலும் ஒரு சிக்கல் ஏற்பட்டு அதனால் துன்பமே விளைகிறது. ஆனால், நம்மால் அதை விட்டு விட முடிவதில்லை. காரணம், அந்த வேலையில் நாம் சிக்கிக் கொண்டு விட்டோம். தேன் குடிக்க மலருக்குச் செல்லும் தேனீ, பிசுக்கு ஒட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் இருப்பது போன்ற ஒரு நிலை. பற்றோடு வேலை செய்வது நம்மை மீள முடியாதபடி பந்தப்படுத்தி விடுகிறது!

சுவாமிஜி சொல்வதன் மையக்கருத்து,ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும்தான்; ஆனால், அந்த வேலையே நம்மை அடிமைப்படுத்தி விடக்கூடாது!

(Ref:C.W-Volume 2: Chapter 1-Pages 1&2).

(— பிறக்கும்)

About The Author