விவேகானந்தர் பார்வையில் கர்மயோகம்(13)

3. ஊருக்குழைத்திடல் யோகம்
 
3.3. நாம் ஏன் நல்லது செய்ய வேண்டும்?

உலகம், நம்மை எதிர்பார்த்து இல்லை என்கிறார் சுவாமிஜி. பின், நாம் ஏன் நல்லது செய்ய வேண்டும்? நாம் பாட்டுக்கு நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாமே?

நாம் பிறருக்கு நன்மை செய்யத்தான் வேண்டும் என்கிறார் சுவாமிஜி. ஏன் செய்ய வேண்டுமாம்? அறம் செய்ய விரும்புவது -நல்லது செய்ய விழைவது- நமக்குள்ள மிகச் சிறந்த ஊக்க சக்தி! எப்போது?… பிறருக்கு உதவுவது, நமக்குக் கிடைத்த பிரத்யேகச் சிறப்புரிமை என்பதை உணரும்போது!

தந்தக் கோபுரத்தில் அமர்ந்து கொண்டு, "ஏய் பரதேசி! இந்தா, எடுத்துக் கொள் பிச்சை!" எனக் காசை வீசி எறிவது அறம் இல்லை. வறுமை இல்லையேல் வண்மை இல்லாததாகி விடும். இரப்பார் இல்லாவிட்டால் ஈவதற்கு எங்கே வாய்ப்பு? நம்மிடம் உதவி பெற்றுக் கொள்வதற்கு அந்த வறியவன் இருக்கிறானே என அவனுக்கு நன்றி செலுத்துவோம்! நம்மை உயர்த்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்புத் தந்து நமக்கு அவன் உதவுகிறான் என்பதே உண்மை! ஆசீர்வதிக்கப்பட்டவன் ஏற்பவன் அல்லன்; இடுபவனே! நம்மிடம் உள்ள தயாள குணத்தை – கருணையை – வெளிப்படுத்துவதற்கு, அதன் மூலம் தூய்மையும் செம்மையும் அடைவதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறதே என நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது; செம்மைப்படுத்துகிறது.

நம்மால் என்ன செய்ய முடியும்? மருத்துவமனை கட்டலாம். சாலைகள் போடலாம். தர்ம சாலைகள் நிறுவலாம். நிகழ்ச்சி ஒன்று நடத்தி ஒரு கோடி ரூபாய் திரட்டலாம். விழலுக்குப் பொசிந்தது போக மிச்சம் தர்ம காரியத்துக்குப் போய்ச் சேரலாம். ஒரு புயல் காற்று, பூகம்பம் என வந்தால் இந்தக் கட்டடங்கள் மண்ணோடு மண்ணாகச் சரிந்து விடக்கூடும்! உலகத்துக்கு, நாம் ஏதோ நன்மை செய்கிறோம் என முட்டாள்தனமாக உளறுவதை நிறுத்திக் கொள்வோம்! இந்த உலகம், நீங்களோ நானோ உதவ வேண்டும் என்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை…

என்றாலும் –

நாம் இடைவிடாது நல்ல காரியங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும்!

ஏனெனில் –

நன்மை புரிவது நமக்கோர் ஆன்மிகப் பயிற்சி.

அது நம்மைச் செம்மைப்படுத்துகிறது. நமக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பு; வரம். நாம் உதவி புரிந்த எந்தப் பிச்சைக்காரனும் நமக்குப் பைசா கூடக் கடன்பட்டவன் இல்லை. நாம்தான் அவனுக்குக் கடன்பட்டிருக்கிறோம், நமது தயாள குணத்தைப் பயன்படுத்த அவன் வாய்ப்பளித்தான் என்கிற வகையில். நாம் உலகுக்கு நன்மை செய்கிறோம் என்றோ, அல்லது நம்மால் செய்ய முடியும் என்றோ, அல்லது நாம் இன்னின்னாருக்கு உதவி செய்திருக்கிறோம் என்றோ நினைத்துக் கொள்வது தவறான கருத்தாகும். அப்படி நினைப்பது மூடத்தனம்! மூடத்தனமான நினைப்புகள் நமக்குத் துன்பத்தையே விளைவிக்கும். ஒருவருக்கு உதவி செய்து விட்டு, அவர் நமக்கு நன்றி சொல்வார் என எதிர்பார்க்கிறோம். அவர் நன்றி சொல்லவில்லை என்றால் மன வருத்தம் ஏற்படுகிறது. நாம் செய்யும் காரியத்துக்குப் பிரதியாக ஏன் ஒன்றை எதிர்பார்க்க வேண்டும்? நாம் உதவி செய்யும் மனிதனுக்கு நாம் நன்றி செலுத்துவோம். அவனைக் கடவுளாகப் பாவிப்போம்! சக மனிதனுக்கு உதவுவதன் மூலம் கடவுளை வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய சிறப்புரிமை! உண்மையிலேயே பற்றற்று இருந்தோமானால் வீண் எதிர்பார்ப்புகள், வேதனைகள் அத்தனையிலிருந்தும் தப்பி விடுவோம். உற்சாகமாக நல்ல காரியங்கள் செய்து கொண்டே போகலாம். எதிர்பார்ப்பின்றிப் பணிபுரிபவனைத் துன்பமோ வேதனையோ அணுகாது.

சுவாமிஜியின் இந்தச் சிந்தனையை வெளிப்படுத்திய நிகழ்ச்சி ஒன்று அவரது வரலாற்றில் வருகிறது. அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!

ஆதாரம்:The Complete works of Swami Vivekananda – chapter V – pages 76 &77.

About The Author

1 Comment

  1. A.Ravi

    வேணி,

    அருமையான கருத்துக்கள். நல்ல முறையில் எடுத்துக் கூறியிருக்கிறீர்கள். நல்லது செய்து கொண்டே இருப்பது ஆன்மீகப் பயிற்சி என்பது அற்புதமான வரி. நிறைய எழுதுங்கள்.

    ரவி

Comments are closed.