விவேகானந்தர் பார்வையில் கர்மயோகம் (14)

3.4. கோடீஸ்வரருக்கு ஒரு குட்டு!

ஜான் ராக்ஃபெல்லர் என்பவர், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். சுவாமிஜி சிக்காகோவில் இருந்தபோது, பரஸ்பர நண்பர் ஒருவர் ராக்ஃபெல்லரை, சுவாமிஜியைச் சந்திக்க வருமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லருக்கு, அந்த ஹிந்து சன்னியாசியைச் சந்திக்க வேண்டும் என்று அப்படி ஒன்றும் பெரிய நாட்டமில்லை. நண்பர் விடுத்த அழைப்புகளையெல்லாம் புறக்கணித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர், செல்வச் சிகரத்தில் இல்லை என்றாலும் செல்வாக்கு மிக்கவர்; தீர்மானமான கருத்துகள் உள்ளவர். அவரை இணங்க வைப்பது என்பது சுலபமில்லை.

ஒருநாள், ஏதோ ஒரு வேகத்தில், அவர் சுவாமிஜி இருந்த இல்லத்துக்குள் கிடுகிடுவென்று நுழைந்தார். அங்கிருந்த பணியாளரை உரசித் தள்ளி விட்டு, உள் அறைக்குள் நேரே பிரவேசித்து விட்டார். சுவாமிஜி ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லரை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

சிறிது நேரத்துக்குப் பின் அவருடன் உரையாடத் தொடங்கிய சுவாமிஜி, அவருக்குச் சில அறிவுரைகள் சொன்னார். சேமித்து வைத்துள்ள அத்தனை சொத்தும் ராக்ஃபெல்லருக்கே சொந்தமானதில்லை. அவர் ஒரு கருவி மாத்திரமே. இறைவன் அவருக்கு அத்தனை செல்வமும் கொடுத்திருப்பது, பிறருக்கு உதவுவதற்காகவே. அவருக்கு அது ஒரு வாய்ப்பு என்றெல்லாம்.
"எனக்கு ஒருவர் புத்தி சொல்வதா? நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இவர் யார்?" என்றெல்லாம் குமுறிக் கொண்டே போனார் ராக்ஃபெல்லர். போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளக் கூட இல்லை.

என்றாலும் ஒரு வாரம் கழித்து, மீண்டும் அவர் சுவாமிஜியின் அறைக்குள் திடும்பிரவேசம் செய்தார். சுவாமிஜி அப்பொழுதும், தலை நிமிராமல் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர், அவரது மேசை மீது ஓர் ஆவணத்தை விசிறி எறிந்தார். மிகப்பெரிய தொகை ஒன்றை, ஓர் அற நிறுவனத்துக்கு நன்கொடையாகக் கொடுப்பது பற்றிய விரிவான திட்டம் அது. "பார்த்துக் கொள்ளுங்கள்! இப்பொழுது திருப்திதானே? நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்!" என்று முழங்கினார் அவர்.

சுவாமிஜி, விழிகளை உயர்த்தக் கூட இல்லை. அந்த ஆவணத்தை எடுத்துப் படித்தார். நிதானமாகச் சொன்னார், "நீங்கள் அல்லவா எனக்கு நன்றி சொல்ல வேண்டும்?" என்று.

பொது நலத்துக்காக ராக்ஃபெல்லர் வழங்கிய முதல் பெரிய நன்கொடை அது. அதற்குப் பிறகு அவர் மாபெரும் கொடை வள்ளலாகப் பெயர் பெற்றது நமக்கெல்லாம் தெரிந்ததே.

ஆதாரம்:- The Life of Swami Vivekananda by his Eastern and Western Disciples – Vol – I, November 2004 edition – Chapter 23 – Pages 451 – 452.

— பிறக்கும் 

About The Author