வெஜிடபிள் கிரேவி

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 2
பட்டாணி – ½ கோப்பை
காலிபிளவர் (அரிந்தது) – ¼ கோப்பை
காரட் – 1
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 5
இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கெட்டித் தேங்காய்ப் பால் – 1½ கோப்பை
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க:

பட்டை -1
கிராம்பு -1

அரைக்க:

சிவப்பு மிளகாய் – 6
சீரகம் – 1½ தேக்கரண்டி
மல்லி – 1½ தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 8

செய்முறை:

முதலில், உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலுரித்து நறுக்கிக் கொள்ளுங்கள்.

பட்டாணி, காலிபிளவர், காரட் ஆகியவற்றையும் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சிறிது எண்ணெய் விட்டு இலேசாக வறுத்து, சன்னமாக (நைசாக) அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியில், தேவையான எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி பட்டை, கிராம்பு போட்டுத் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி – பூண்டு விழுது ஆகியவை போட்டு வதக்குங்கள். பச்சை வாசனை போனவுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு மேலும் வதக்குங்கள்.

பின்பு, வேகவைத்துள்ள உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிபிளவர், காரட் ஆகியவற்றைப் போட்டுச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.

பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால், சுவையான வெஜிடபிள் கிரேவி தயார். கொத்துமல்லி தூவிப் பரிமாறுங்கள். இதை தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

About The Author