வெஜிடபிள் ரவா கிச்சடி

தேவையான பொருட்கள்:

ரவை – 2 கோப்பை
பட்டாணி – சிறிதளவு
கேரட் – 1
பீன்ஸ் – 5
குடைமிளகாய் – 1
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – ½ தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
வெங்காயம் – 2
மஞ்சள் – ½ தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி – ¼ தேக்கரண்டி
மல்லிப்பொடி – ½ தேக்கரண்டி
துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழச் சாறு – 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

கேரட், பீன்ஸ், குடைமிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

பட்டாணியை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

துவரம் பருப்பைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கனமான பாத்திரத்தில் தேவையான எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, அதில் ரவையை மணம் வரும் வரை வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் மீண்டும் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி அதில் சீரகம், வெந்தயம் போட்டுத் தாளித்து, பின் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள்.

பின்பு, நறுக்கிய காய்களையும் வேக வைக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும் பட்டாணியையும் போட்டு 5 முதல் 10 நிமிடம் வரை வதக்க வேண்டும். பிறகு பட்டாணி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, உப்பு போட்டு நன்கு கிளற வேண்டும்.

பின்னர், அதில் 4 கோப்பை தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதித்த பின் ரவை, ஊற வைத்த துவரம் பருப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறி வாணலியை மூடி வேக விடுங்கள்.

இடையே திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றி எல்லாம் நன்கு வெந்தவுடன் கொத்துமல்லி, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக் கிளறினால், சுவையான வெஜிடபிள் ரவா கிச்சடி தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author