வெற்றிக்கலை-இரண்டாம் பாகம் (3)

பாரதியாரின் அற்புதக் கவிதை

மகத்தான கவிஞரான மஹாகவி பாரதியார் அற்புதமான அறிவுரையைத் தன் பாடல் ஒன்றில் கூறியுள்ளார் இப்படி:

பகைவனுக் கருள்வாய் – நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் – நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே!

இப்படி பகைவனுக்கு அருள முடியுமா என்ன? வரலாற்று ஏடுகளைப் புரட்டுவோம்!

சத்ரபதி சிவாஜியின் மாண்பு

முகலாயரின் ஆட்சிக் காலத்தில் ஆங்காங்கே ஊர்களைச் சூறையாடுவதோடு கன்னிப் பெண்களையும் இதர மாதரையும் கற்பழிப்பதும் அவர்களுக்கு வழக்கமான ஒன்று. ஒரு முறை நடந்த போரில் சத்ரபதி சிவாஜியின் படைத் தலைவர்கள் முகலாயப் பெண்களைக் கூண்டோடு சிறைப்பிடித்து சத்ரபதி சிவாஜியின் முன் கொண்டு வந்து நிறுத்தினர்." இவர்களை என்ன செய்ய வேண்டும்?" என்பதே படை வீரர்கள் உள்ளிட்ட அனைவரது கேள்வியாகவும் இருந்தது.

அமைதியாக அவர்களைப் பார்த்த சிவாஜி, "இவர்களை பத்திரமாக மரியாதையோடு அவரவர்கள் இருப்பிடத்திற்குத் திருப்பி அனுப்பி விடுங்கள்" என்றார்.

அந்தப் பெண்கள் கண்ணீர் வடித்து நன்றி செலுத்தினர். அனைவரின் முன்னரும் மனித நிலையிலிருந்து தெய்வீக நிலைக்கு உயர்ந்தார் அவர். மனிதனை தெய்வீக நிலைக்கு உயர்த்துவது மன்னிக்கும் பண்பு!

அலெக்ஸாண்டர் போப்பின் அமர வரி

An Essay on Criticism என்ற தனது கட்டுரை வடிவிலான கவிதையில் 525ஆவது வரியாக அலெக்ஸாண்டர் போப் (1688-1744) வடித்துள்ள அமர வார்த்தைகள் இவை:

"To err is human; to forgive, divine"

தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பதோ தெய்வீக குணம்!

பதினான்காம் லூயி மன்னரின் மகன் தந்த பதில்

ஒரு முறை பதினான்காம் லூயி மன்னரின் மகனை எதிரிகள் சிறைப்பிடித்தனர். சிறையில் ராஜ குமாரனை அடிக்க ஆரம்பித்த ஜெயில் அதிகாரி முதல் நாள் ஓர் அடி வைத்தான். அடுத்த நாள் இரண்டு அடிகள். இப்படியே வன்முறைக் கொடுமை நாளுக்கு நாள் அதிகமானது. ஒரு நாள் அன்றைய சித்திரவதையை முடித்த அவன், அரச குமாரனைப் பார்த்து, "என்ன, என்னைப் பிடிக்கலாம் என்று தோன்றுகிறதா? ஒருவேளை நீ வெற்றி பெற்று என்னைப் பிடித்து விட்டால் என்ன செய்வாய்?" என்று கேட்டான். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அரசனின் மகனோ, மெதுவாக அமைதியான குரலில், "உன்னை மன்னித்து விடுவேன்!" என்றான். வெட்கித் தலைகுனிந்த அவன் அன்றிலிருந்து மாறி விட்டான்!

லிங்கன் தரும் அறிவுரை

மகத்தான பண்புகளைக் கொண்டிருந்த ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க ஜனாதிபதியாக உயரப் பல அரும் குணங்களைத் தன்னுள் இளமையிலிருந்தே வளர்க்க ஆரம்பித்தார்.

அதனால்தான் அவரால் "from log house to White House"க்கு – மரக் குடிசையிலிருந்து வெள்ளை மாளிகைக்குச் செல்ல முடிந்தது.
அவர் தன் இளமைக் காலத்தில் ஒரு ஸ்டோரில் பணியாளராக இருந்தபோது நடந்த சம்பவம் இது:

ஒரு நாள் வம்புக்காரன் ஒருவன் ஆபிரஹாம் லிங்கனை வம்புக்கிழுத்து அடிப்பது என்ற முடிவுடன் கடைக்கு வந்தான். அவனது இடக்கான கேள்விகள் லிங்கன் மீது சரமாரியாக விழவே, லிங்கன் அவனை நோக்கி, "நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறேன்; அமைதியாக இருங்கள்! இங்கு பெண்கள் இருக்கிறார்கள்" என்றார்.

ஆனால் அவனோ, இன்னும் வக்கிரமாகப் பேச ஆரம்பித்தான். கடைக்கு வந்திருந்த பெண்களை வழியனுப்பி வைத்த லிங்கன், வம்பனை நோக்கி, "நான் என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்டாய் போலும்! அடிதடி வழிதான் உனக்குப் பிடிக்குமா? அப்படியானால் சரி, அதற்கும் நான் தயார்தான்!" என்றார்.

உடனே அவரை இழுத்துச் சென்ற வம்பன் கடைக்கு வெளியில் இருந்த புல்வெளியில் அவரை அடிக்க யத்தனித்தான்.
ஆபிரஹாம் லிங்கனோ ஆறடி நான்கு அங்குலம் உயரம் உடையவர். வம்பனைத் தூக்கிப் பிடித்துச் சரியான அடி கொடுத்தார். வலியால் அலறினான் அவன்.

பின்னர் தலை குனிந்து நின்ற அவனைப் பார்த்து, “உன்னை மன்னித்து விட்டேன். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே!” என்றார்.

அன்றிலிருந்து லிங்கனின் வாழ்நாள் இறுதி வரை அவரது ஆதரவாளனாக அவன் திகழ்ந்தான். "மன்னித்து விடுங்கள்" என்பதே லிங்கனின் அறிவுரை; அன்புரை!

மன்னிப்பது ஒரு ரசாயன மாற்றம் போல. ஸ்பரிசவேதி என்னும் கல், தொட்டதை எல்லாம் தங்கம் ஆக்குவதைப் போல, மன்னிக்கும் பண்பு அதனுடன் உரசியவர்களையெல்லாம் மேல் நிலைக்கு இட்டுச் செல்லும்.

இதை வளர்க்க மனம்தான் வேண்டும். பணமோ, பட்டமோ, அந்தஸ்தோ, வயதோ, ஆண், பெண் என்ற பாலியல் முக்கியத்துவமோ இதற்குத் தேவையில்லை.

தவறுவது மனித சுபாவம்; மன்னிப்பது தெய்வீக குணம்.
மன்னித்து விடுங்கள்; மகத்தான வெற்றி வாழ்க்கை அமையும்!

–வெல்வோம்...

About The Author