வெளிச்சம்

ஒரு சாவி தொலைந்து போனது.

புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலைக்குப் போகிற வீட்டில், வாசல் கதவுக்கு ரெண்டு சாவி அவசியம்.

ரெண்டு சாவி இருந்தது. என்னிடம் ஒண்ணு அவளிடம் ஒண்ணு.

அதில் ஒரு சாவி தொலைந்து போனது.

தொலைந்து போனது இவளுடைய சாவியாயிருந்திருந்தால், இவளுடைய பொறுப்பின்மையையும் அஜாக்கிரதையையும் சுட்டிக்காட்டித் திட்டித் தீர்த்திருப்பேன்.

தொலைந்து போனது என் கைவசமிருந்த சாவி.

ராத்திரி மெல்ல இவளிடம் விஷயத்தைச் சொன்ன போது, ‘சரி, அதுக்கென்ன, வேற டியூப்ளிக்கேட் சாவி செஞ்சிருவோம்’ என்றாள், முகத்துப் புன்னகை கொஞ்சமும் தணியாமல்.

"சாவி செய்றவங்க ஒரு அஞ்சாறு பேர் வரிசையா ஒக்காந்துருப்பாங்க. அமஞ்சிக்கர மார்கெட் ரோடுல. சரி, அதுவா இப்ப முக்கியம்? நா காலிஃப்ளவர் வதக்கி வச்சிருந்தேனே எப்படியிருந்ததுன்னு நீங்க சொல்லவேயில்லியே?"

காலையில் ரெண்டு பேரும் அமஞ்சிக்கரைக்குப் போனோம்.

இவள் சொன்னமாதிரியே, சாவி செய்யும் தொழிலாளிகள் ஏழெட்டுப் பேர் நியாயமான இடைவெளி விட்டு உட்கார்ந்து, தொழில் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓய்வாயிருந்த சாவிக் கலைஞன் ஒருவரை சமீபித்து, ஒரிஜினல் சாவியைக் கொடுத்து விட்டு, மாற்றுச் சாவிக்குக் காத்திருந்தோம்.

ரெண்டு மூணு சாவிக் கலைஞர்கள், நிழலுக்காக ஆளுக்கொரு குடையை நட்டுவைத்திருந்தார்கள்.
நம்ம ஆளிடம் குடை இல்லை.

நல்ல வெயில் (அல்லது மோசமான வெயில்!).

வெயிலிலிருந்து பாதுகாப்புத்தர ஒரு மரமோ, வேறு அம்சமான இடமோ அருகாமையில் இல்லாததால், இந்த ஆள் சாவி செய்யும் நேர்த்தியைப் பாத்தவாறே நின்றிருந்தோம், வெயிலில், இந்தப்பக்கம் நானும் அந்தப்பக்கம் அவளும்.

"அங்க ஏன் போய் நிக்கற, இந்தப்பக்கம் வாயேன்" என்று அழைப்பு விடுத்தேன்.

"நீங்க இந்தப்பக்கம் வாங்க" என்றாள்.

முஹம்மது மலைக்கு வராவிட்டால், மலை முஹம்மதிடம் போகுந்தானே?

போனேன்.

என்னோடு இவளும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது மனசுக்குக் கஷ்டமாயிருந்தது.

"நா சாவியத் தொலச்சது ஒனக்கு எவ்ளவு சங்கடம் பார், வெட்டியா வெயில்ல வந்து நிக்கற" என்று என் அனுதாபத்துக்குக் குரல் வடிவம் கொடுத்தேன்.

"இதென்னங்க சங்கடம், நீங்க நல்ல காரியந்தானேங்க பண்ணியிருக்கீங்க" என்று சிரித்தாள்.

"நல்ல காரியமா, எது, சாவியத் தொலச்சதா?"

"சனிக்கிழம தொலச்சது. இதுவே ஒரு வீக்டேயா இருந்திருந்தா, இப்படி ஜாலியா சூரிய வெளிச்சத்துல வந்து நின்னுட்டிருக்க முடியுமா? இன்னிக்கி ஸண்டேயாப் போனது எவ்வளவு வசதி."

தன்னுடைய பாஸிட்டிவ் மனோபாவத்தால் என்னைத் திக்குமுக்காட வைத்தவள், என் கையைப் பற்றி வெடுக்ன தன்னை நோக்கி என்னை இழுத்து மூச்சு முட்ட வைத்தாள்.

"எதுக்கு இவ்வளவு gap விட்டு நிக்கிறீங்க. we are not just lovers anymore. இப்ப புருஷன் பொண்டாட்டி. கொஞ்சம் ஒட்டித்தான் நில்லுங்களேன்."

இவளுடைய கட்டளையை ஏற்று ஒட்டினேன், ரோட்டில் எல்லோரும் பார்க்கிற மாதிரி உரசிக் கொண்டு நிற்க சங்கோஜமாயிருந்தாலும்.

சாவி வேலை முடிந்த பின்னால், ஸ்கூட்டரில் போகிற போது பக்கவாட்டில் கழுத்தைத் திருப்பி, இவளிடம் கேட்டேன்.

"ஏம்மா, இன்னிக்கி ஸண்டே தான, இந்த ஒட்டல் ஒரசல் எல்லாம் வீட்லபோய் வச்சுக்கலாம்ல, ரோட்ல நிக்கிறபோது ஒரசிக்கிட்டு நிக்கிறது அவசியந்தானா?"

"அது ட்டூ இன் ஒன்ங்க" என்று இவள் சிரித்தாள்.

"அப்டீன்னா?"

"ஒண்ணு, ஒங்களோட இரண்டறக் கலந்திருக்கிறதுல உள்ள சொகம். இன்னொண்ணு…"

"இன்னொண்ணு?"

"பாவம் அந்த சாவி செய்யற ஆள், வேகாத வெயில்ல ஒக்காந்து வேல செய்யறான். நாம ரெண்டு பேரும் வெய்யில்ல நிக்கிறது தான் நிக்கிறோம், கொஞ்சம் நெருங்கி நின்னோம்னா, சூரியன மறச்சிக்கிட்டு நின்னோம்னா, அந்த நேரத்துக்காவது அந்த ஆளுக்குக் கொஞ்சம் நெழல் கெடக்யும்ல?"

கல்கி, 27.07.2003
(கொஞ்சம் நெருங்கி)

About The Author

2 Comments

  1. Shree

    அருமையான, எளிமையான கதை! சாதாரண ‘சாவி தொலைக்கும் படலத்தில்’ ஆரம்பித்து, மனிதாபிமானத்தை அழகாக எடுத்துக் கூறிய விதம் நன்று! சே! என்ன மனது இந்தப் பெண்மணிக்கு!” என்று வியக்காமலிருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்!”

  2. Anwar

    எனக்கு சுத்தமா இந்த கதைய புடிகலை சார். இந்த பகுதியில் உள்ள எல்லா கதைகலும் ஒரே மாதிரி இருகுதுன்க. மாறுதல் இருந்தா நல்லா இருக்கும்.

Comments are closed.