வேங்கூவர் – கனடா (1)

அடடா பருவம் தொட்டு நிற்கும் இளமொட்டு மங்கையைப்போல் மதர்ப்புகளால் சூழப்பட்ட அற்புத நகரம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள வேங்கூவர். 2002 மே மாதம் டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் அங்கு சென்று, அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன். ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல் விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.

வசந்தத்தில்
வசந்தம் கேட்டுத்
தவமிருக்கும் உலகில்
வருடமெல்லாம் வசந்தம் காணும்
வேங்கூவர் ஓர் அதிசயம்

எங்கும் இங்கே
புல்லும் மரமும் பூத்துப்
பூரண சுயாட்சி நடத்தும்
பொற்பருவத் தாண்டவங்கள்

பேரெழிற் பொற்சிலையாய்
சுற்றிக்கட்டிய
நீர்ப்பட்டுச் சேலைக்குள்
நிமிர்ந்து நாணி நிற்கும்
நிலமகள் இந்த வேங்கூவர்

இயற்கையின்
எழில்வண்ணப் பளபளப்பு
காணும் கண்களிலெல்லாம்
மின்னல்கள் கொளுத்தி
மின்னல்கள் கொளுத்தி
மிடுக்கோடு விளையாடுகிறது

ஆசையின் உந்துதலில்
நடப்பதைக் கைவிட்டு
ஓர்
அங்கப்பிரதட்சணம் செய்தால்

இந்த
அழகு வீதி அழுக்காகும்
நம் தேகமோ தூய்மையாகும்
அப்படியோரு சுத்தம்

O

அடிக்கடி கொட்டும்
அந்த அமுத மழையும்
விடுப்பெடுத்துவிட்டால்

வானமே கூரையாக
பூமியே கம்பளமாக
ஓர் ஐந்து நட்சத்திர
விடுதியாகிப்போகும்
இந்த வேங்கூவர்

பாருங்களேன்
இந்தச் சூரியனை

இங்கு வந்ததும்
நானும் ஒரு நிலவுதான்
என்று
மஞ்சள் பூசிய
மணப்பெண்ணைப் போல
அழகு காட்டிச் சிரிக்கிறது

மயிலிறகு ஒத்தடம் போல்
நம் மேனியில் பதிக்கிறது
தன் முத்து முத்தங்களை

இங்கே
இரத்த அழுத்தக்காரனுக்கும்
வியர்வை என்பது
விளங்காத புதிர்தான் என்றால்
தாராளமாக நீங்கள் நம்பலாம்

O
‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author