ஹாய் டா! – இசை விமர்சனம்

தலைப்பை வைத்தே படத்தில் இளமை ததும்பும் பாடல்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். விஷால் சந்திரசேகரின் இசையமைப்பில் மொத்தம் ஏழு பாடல்கள். அவற்றில் இரண்டு கரோக்கி.

ஜனவரி மழையில்

ஆல்பத்தின் முதல் பாடல். எதிர்பார்ப்புகள் இன்றிதான் கேட்கத் தொடங்கினேன். இருப்பினும் ஈர்த்தது. பாடலை நரேஷ் ஐயர், விஜய் யேசுதாஸ், சௌமியா மஹாதேவன், ரம்யா என நால்வர் இணைந்து பாடியுள்ளனர். முதல் வரியை வைத்து இது காதல் பாடல் என முடிவு செய்தால்… தவறு! பாடல் நட்பைப் பாடுகிறது. உங்களுக்கு நட்பு பிடிக்குமா? அப்படியானால் இந்தப் பாடலும் நிச்சயம் பிடிக்கும். இதில் இடம்பெற்றுள்ள விசில் ஒலி செவி வருடுகிறது. நட்பைப் போற்றும் பாடல்களின் பட்டியலில் இதற்கும் ஓர் இடம் உண்டு.

"ஏமாற்றம் ஒருபுறம், தள்ளாட்டம் மறுபுறம்
கைதூக்கி விட்ட உன்னை என்னவென்று சொல்ல!" – நண்பனின் பெருமை பாடும் வரிகள்.

ஃபேஸ்புக்

இதுவும் நட்பைப் பாடும் பாடல்தான். நட்பு மலர்ந்த விதம் சொல்கிறது. மேற்கத்திய இசையின் புரியாத ஒலிகள் அவ்வப்போது வருகின்றன. தேவன், ஜார்ஜினா ஆகியோர் இசையமைப்பாளருடன் சேர்ந்து பாடியிருக்கும் பாடல்.

"விண்ணில் வண்ணம் தீட்ட
உன் தோள்கள் எனைத்
தூக்கிக் கொள்ளப் புதிதாய் அனுபவம்" – புருவம் உயர்த்த வைக்கும் வரிகள்.

ஐந்து படிகள்

தவிப்பைச் சொல்லும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் கே.ஜி.ரஞ்சித். பாடலின் தன்மைக்கு இவரது குரல் சரியான பொருத்தம். பின்னணியில் ஒலிக்கும் வயலினின் இசை கூடுதல் வலி சேர்க்கிறது. நடுவில் வரும் கோரஸ் குரல்களும் கவனம் பெறுகின்றன.

"பகலெல்லாம் இரவென இருளினைக் கண்டேனே!
உனை அற்ற திசைகளும் மூன்றாகிப் போக" – வலியின் வரிகள்.

மழலைப் பேச்சு

ஸ்ரீநிவாஸ், சிந்தூரி ஆகியோருடன் சூப்பர் சிங்கர் புகழ் ஆஜீத், யாழினி இணைந்து பாடியுள்ள பெண்ணை வர்ணிக்கும் பாடல். அழகாகவே வர்ணித்திருக்கிறார்கள். கேட்கும்போது உங்கள் காதலியை நினைத்துக் கொள்ளுங்கள். அவருக்காகவே எழுதப்பட்டது போல் தோன்றும்.

"கைகள் தீண்டி ஸ்பரிசமிடும் பொழுது கடவுள் எங்கென்று கூறும் மனது" – உங்களுக்குப் பிடித்தமானவளைக் கண்முன் கொண்டு வரும் பாடல்.

ஹாய் தீம்

படத்தின் தலைப்பை விளம்பரம் செய்யும் பாடல். ஷில்பா நடராஜன் பாடியிருக்கிறார். குரலில் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. "ஹாய்" என்னும் சொல்லின் வலிமை இங்கே பாடலாக்கப்பட்டிருக்கிறது.

"விட்டுப்போன உறவுகள், முட்டிக்கொள்ள, திட்டிக்கொள்ள, கட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள ஹாய்." – வலிமை சொல்லும் வரிகள்.

இவை தவிர, "ஜனவரி மழையில்", "மழலைப் பேச்சு" ஆகியவற்றின் கரோக்கி வடிவங்களும் உள்ளன. இரவு நேர இனிமைக்கு இவற்றைக் கேட்கலாம்.

ஹாய் டா! – தோழமைப் புன்னகை.

About The Author