காளித்தம்பியின் கதை (2)

துறவியின் கைத்தடி நாகமாணிக்கத்தின் தலையைப் பிளந்திருக்கும். அதற்குள் பழனி, துறவிக்கும் நாகனுக்கும் இடையில் புகுந்து நின்றான்.

"பெரியவரே, பெரியவரே" என்று கதறினான்.

நாகனை நோக்கிச் சென்ற தடி அப்படியே நின்றது. பெரியவரின் ஓங்கிய கை பழனியைக் கண்டதும் தாழ்ந்தது. ஆனாலும் அவர் கோபம் தீர்ந்ததாகத் தெரியவில்லை. தன் தலை சுக்கு நூறாகச் சிதறி விடுமோ என்று பயந்த நாகன் அவ்வாறு நடக்காததைக் கண்டான். என்றாலும் அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

"பெரியவரே! நாகன் தெரியாமல் ஏதோ பேசிவிட்டான். தயவு செய்து, அவனை மன்னித்துவிடுங்கள்" என்று வேண்டினான் பழனி.

துறவி ஒரு கையால் பழனியை இழுத்து அணைத்துக் கொண்டார்.

"தம்பீ! என்னை இழிவாகப் பேசியதைக்கூட நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால், உன்னைப் பற்றி என்ன வார்த்தை பேசிவிட்டான்! அதை என்னால் பொறுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட துஷ்டர்களுக்குத் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன்னைப் போல நல்லவர்களின் உள்ளத்தைப் புண்படுத்திக்கொண்டேயிருப்பார்கள். உம்… இன்று உன்னால் இந்தப் பயல் தப்பி விட்டான். தம்பீ! இவன் சொன்ன இழி சொல்லை எண்ணிக் கவலையடையாதே! மீனாட்சியருளால் நீ நீடித்த ஆயுளும் நிலைத்த புகழும் பெறுவாய்" என்றார் துறவி.

பிறகு, "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.

"பழனி."

"பழனி, பழனி… அழகான பெயர்! நான் வருகிறேன் பழனி" என்று கூறிவிட்டு, துறவி படிகளில் ஏறிக் குளத்தை விட்டுச் சென்றார்.

பழனி துறவி சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு நாகனைப் பார்த்தான். படியோடு படியாய் ஒட்டிக் கொண்டிருந்த நாகன் மெல்ல எழுந்தான். பழனியைப் பார்க்கவே கூசியவனைப்போல அந்த இடத்தை விட்டுச் சென்றான். அவனுடன் நண்பர்களும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.

பழனி படியில் உட்கார்ந்தான். அவன் மனம் நாகனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது. அழகனும் அவன் அருகே உட்கார்ந்தான். பழனி அந்த இடத்தை விட்டு எழுவதாகத் தெரியவில்லை. அதனால் அழகன் "பழனி! நேரமாகிறது, போகலாமா" என்று அழைத்தான். சிந்தனையிலிருந்து விடுபட்டான் பழனி. படியிலிருந்து எழுந்தான். அவனும் அழகனும் குளத்தில் கைகால்களைக் கழுவிக் கொண்டனர். கோவிலுக்குள் சென்றனர். மீனாட்சி அம்மையை வணங்கியபோது பழனி, "தாயே! நான் யாரையும் பகைவனாக நினைப்பதில்லை. என்னை மற்றவர்கள் பகைவனாகக் கருதாத நிலையை எனக்குத் தந்தருள்" என்று வேண்டிக்கொண்டான்.

அழகனும் பழனியும் கோவிலை விட்டு வெளியே வந்தனர். வீடு நோக்கி நடந்தனர். வழியில் பழனி ஏதோ யோசித்தான். பிறகு, "அழகா! நான் என் தந்தையால் புகழ் பெறுவதாக நாகன் கூறி வருகிறான். அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான்.

"பழனி! ரேடியம் இருட்டிலும் ஒளிவிடுமாம். அதன் பக்கத்திலே ஒரு சிறு விளக்கு இருந்துவிட்டால், ரேடியத்தின் ஒளியே விளக்கிலிருந்து பெற்றதுதான் என்று கூறமுடியுமா? அப்படிச் சொல்பவர்கள் ரேடியத்தின் தன்மையினை அறியாதவர்கள். பழனி! நீ ஒரு ரேடியம். இருளிலும் ஒளிவிடும் ஒப்பற்ற ரேடியம்! உன்னைப்போலத் தன்னால் இருக்க முடியவில்லையே என்ற பொறாமையால் நாகமாணிக்கம் பொய் கூறிவருகிறான். அதை நினைத்து வருந்தாதே" என்று சொன்னான் அழகன்.

பழனியின் மனம் திருப்தி அடையவில்லை. "அழகா! நீ சொல்வதை என்னால் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்றான்.

அழகன் சிரித்தான். "அப்படியானால், நாகன் சொல்வதைத்தான் நீ ஏற்றுக்கொள்கிறாயா? உனக்கென்று எந்தத் திறமையும் கிடையாது என்று எண்ணுகிறாயா? உன் புகழெல்லாம் உன் அப்பாவால் வந்த புகழென்றே நீயும் முடிவு செய்துவிட்டாயா?" என்று கேட்டான்.

"அழகா! என் அப்பாவின் பொருளும் புகழும் ஓரளவு எனக்குப் புகழைத் தருகின்றன. என்னை யாரிடமாவது அறிமுகப்படுத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்? இவன்தான் பழனி; படிப்பில் புலி; சொற்பொழிவாற்றுவதில் சிங்கம்; விளையாட்டில் வேங்கை என்றா சொல்கிறார்கள்? முதலில் இவன் சுந்தரேசர் மகன் என்று சொல்கிறார்கள். பிறகு, படிப்பைப் பற்றி ஏதோ சொல்கிறார்கள். கேட்பவர்களின் காதுகளில் என் சொந்தத் திறமையைப் பற்றிச் சொன்ன சொற்கள் விழுந்ததாகத் தெரிவதில்லை. அவர்கள், ‘ஓ! நீ பாசுவின் மகனா?’ என்று வாயைப் பிளக்கிறார்கள். உடனே எனக்கு ராஜோபசாரம் நடக்கிறது. இதை எத்தனை முறை நான் அனுபவித்திருக்கிறேன்! என் தந்தையின் புகழ்முன் என் திறமை மங்கிவிடுகிறது. அதனால் மற்றவர்கள் நான் அப்பாவால் புகழ் பெறுகிறேன் என்று நினைக்கிறார்கள்."

பழனி பேசி முடிக்கவில்லை. அழகன் குறுக்கிட்டான். "இவ்வளவுதானா? இன்னும் சொல்லவேண்டியது இருக்கிறதா? பள்ளிக்கூடத்தில் நீ நிறைய மார்க்கு வாங்குவதற்கு உன் அப்பாதான் காரணம் என்று நாகன் சொல்வதைக்கூட ஒப்புக்கொள்வாய் போலிருக்கிறதே" என்றான்.

உடனே பழனி, "அதை ஒப்புக்கொள்வதில் தப்பு இருப்பதாக நினைக்கவில்லை. அழகா! உனக்குச் சென்ற மாதம் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி நினைவிருக்கிறதா? தமிழாசிரியர், முன்நாள் நடந்த செய்யுளில் கேள்வி கேட்டார். சிலர் சொல்லவில்லை.

அவர்களையெல்லாம் ‘மக்கு, மண்டு’ என்று திட்டினார். பிறகு, நாகனைக் கேட்டார். அவனும் பதில் சொல்லாமல் நின்றான். ‘மரம் போல் நிற்கிறாயே! உம்… மரமாவது பொய்சொல்லாது. உனக்கு அதுதானே பிழைப்பு’ என்று வைதார். பிறகு, என்னைக் கேட்டார். வழக்கமாக முன்நாள் நடந்த பாடத்தை நன்றாகப் படித்துவிட்டே வகுப்புக்கு வருபவன் நான். ஆனால், அன்று ஏதோ வேலையின் காரணமாகப் படிக்கவில்லை என்று சொன்னேன். அதற்கு ஆசிரியர் என்ன சொன்னார் என்று நினைவிருக்கிறதா?" என்று கேட்டான்.

"இவ்வளவையும் சொன்ன நீயே அதையும் சொல்லிவிடு" எனச் சொன்னான் அழகன்.

"சொல்கிறேன். அது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆசிரியர் என்ன சொன்னார் தெரியுமா? ‘நேற்று படிக்கவில்லையா பழனி? பரவாயில்லை உட்கார்! உன் அறிவு எனக்குத் தெரியாதா?’ என்று சொன்னார். நான் உட்கார்ந்தேன். எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த நாகன், ‘பாசுவின் மகனைப் பார்த்தாயா? படித்தாலும் அவனை ஆசிரியர் புகழ்கிறார். படிக்காவிட்டாலும் அவனை ஆசிரியர் புகழ்கிறார்’ என்று மெல்லச் சொன்னான். அதையும் கேட்டேன்…"
பழனி சற்று நிறுத்தினான்.

"அதனால் ஆசிரியர் நீ பணக்காரனின் மகன் என்பதற்காக உன்னைப் புகழ்ந்தார் என்கிறாயா? நீ பணக்காரனின் மகன் என்பதற்காகத்தான் உனக்கு அதிக மார்க்கு தருகிறார்கள் என்றும் சொல்கிறாயா?" என்று கோபத்துடன் கேட்டான் அழகன். பழனியே "அப்படியே சொன்னாலும் தப்பில்லை. பதில் சொல்லவில்லை என்றால் என்னையும் மற்றவர்களைப் போல ஆசிரியர் திட்டுவதுதானே? ஏன் திட்டவில்லை? ஆசிரியர் கண்ணுக்கு நான் வெறும் பழனியல்ல; பாசுவின் மகன் பழனி! அதே காரணத்திற்காக எனக்குக் கொஞ்சம் அதிக மார்க்கும் தரலாம் இல்லையா?" என்று கேட்டான்.

"பழனி! போதும் நிறுத்து! எவனோ ஏதோ உளறினால் நீ ஆசிரியர்களையே சந்தேகிக்கும் அளவு வந்துவிட்டாயே! நாகன் சொல்வதைக்கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். நீ சொன்னதை எப்படிப் பொறுப்பது? வழக்கமாக நன்றாகப் பதில் சொல்லும் மாணவன் ஒரு நாள் பதில் சொல்லவில்லை என்றால் எந்த ஆசிரியரும் திட்டமாட்டார். வழக்கமாக நல்ல மார்க்கு எடுப்பவன், ஒரு பரீட்சைக்கு வரவில்லை என்றால்கூட அவனைப் பாசாக்குகிறார்களே, அதைப் போல. நாகன் சொன்ன விஷ வார்த்தைகளை மனத்தில் கொண்டு விபரீத எண்ணங்களை வளர்த்துக்கொள்ளாதே! பழனி! உன் திறமையை நீ ஒப்புக்கொள்ளாமலிருக்கலாம். ஆனால், நானும் என்னைப்போன்ற பலரும் அதை மதிக்கிறோம்" என்று அழகன் சொன்னான்.

பழனி அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. இருவரும் நடந்தனர். அழகன் தன் வீட்டுக்குச் சென்றான். பழனி நடந்தே தன் வீட்டிற்குப் போனான்.

மதுரையில் உள்ள சொக்கி குளத்தைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பணக்காரர்கள் பலர் குடியிருக்கும் பெருமை பெற்றது சொக்கிகுளம். அங்கேதான் சுந்தரேசரின் மாபெரும் மாளிகை இருந்தது. மாளிகைக்கு முன்னும் பின்னும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்காக்கள் இருந்தன. பூங்காவின் இடையில் விண்ணைத்தொடும் உயரமான மாளிகை. மாளிகையின் ஒரு பகுதி ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்தது.

பழனி அந்த மாளிகைக்குள் நுழைந்தான். போர்டிகோவை அடுத்துப் பெரிய வரவேற்பு அறை இருந்தது. அதற்குள் பழனியின் தந்தை- பாசு ஆலையின் உரிமையாளர் உயர்திரு. சுந்தரேசர் ஒரு சோபாவில் சாய்ந்து கொண்டிருந்தார். எதிரே இருந்த சோபாக்களில் சிலர் அமர்ந்திருந்தனர். அவர்கள் மதுரையில் உள்ள இளங்கோ இலக்கிய மன்றத்தைச் சார்ந்தவர்கள். மன்றத்தின் ஆண்டுவிழாவிற்காக நன்கொடை கேட்பதற்கு வந்திருந்தனர்.

மன்றத் தலைவர் "தங்கள் மகன் வீட்டில் இல்லையா?" என்று கேட்டார்.

"இல்லை. வெளியே போயிருக்கிறான்" என்று சொன்ன சுந்தரேசரின் பார்வை வரவேற்பு அறையின் வாயிலை அடைந்தது. பழனி வாயிலைக் கடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டார். உடனே "பழனி! பழனி!" என்று அழைத்தார்.

பழனி வரவேற்பு அறையின் வாயிலில் நின்று, "என்னப்பா?" என்று கேட்டான். "சற்று உள்ளே வருகிறாயா?" என்று கேட்டார் சுந்தரேசர். பழனி அறைக்குள் சென்றான். அப்பாவின் அருகிலே நின்றான். அப்பா உட்காரச் சொல்லவே பழனி அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.

"பழனி! இவர்கள் இளங்கோ இலக்கிய மன்றத்தைச் சேர்ந்தவர்கள். இவர் மன்றத் தலைவர்" என்று மன்றத் தலைவரைச் சுட்டிக் காட்டினார்.

பழனி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தான்.

மன்றத் தலைவர், சுந்தரேசரிடம், "ஐயா! உங்கள் மகனின் அறிவும் திறமையும் எங்களுக்குத் தெரியும். பழனி மிக நன்றாகப் பேசுகிறான். இவனால் தமிழ் இலக்கியம் பெருமை பெறப் போகிறது. இவனால் நம் மதுரைக்கே பெரும் புகழ் வரப்போகிறது" என்று சொன்னார்.

சொன்னவர் அத்துடன் நிற்கவில்லை.

"தம்பீ! எங்கள் மன்றத்தின் ஆண்டு விழாவில் நீயும் சொற்பொழிவாற்ற வேண்டும்! இளமைத் துடிப்பும் புதுமை வேகமும் கொண்ட உனது பேச்சை எங்கள் மன்றத்தினர் கேட்டுப் பயன்பெற வேண்டும்!"

மன்றத் தலைவர் இவ்வாறு சொல்லிவிட்டுச் சுந்தரேசரைப் பார்த்தார். அவர் தம் மகனைச் சான்றோன் என்று மன்றத் தலைவர் சொன்னதைக் கேட்ட மகிழ்ச்சியிலே திளைத்திருந்தார். அதையே எதிர்பார்த்த மன்றத்தலைவர் திருப்தி அடைந்தார். பிறகு, பழனியைப் பார்த்தார். பழனியின் முகமும் அப்போது மலர்ந்த சொந்தாமரை மலரைப்போல மலர்ந்து, வெட்கத்தால் கொஞ்சம் சிவந்திருக்கும் என்று எதிர்பார்த்தார். என்ன ஏமாற்றம்!

பழனியின் முகம் கோபத்தால் கொதித்துக்கொண்டிருந்தது. அவன் கண்கள் மன்றத் தலைவரைச் சுட்டு விடுவதுபோல் நோக்கின. இதைக் கண்டு மன்றத் தலைவர் திகைத்தார். "தவறுதலாக நாம் தகாத வார்த்தை ஏதாவது சொல்லிவிட்டோமோ?" என்று சந்தேகித்தார்.

பழனி கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான். பிறகு, "ஐயா மன்றத் தலைவரே! உங்கள் ஆண்டு விழாவில் என்னைப் பேசுமாறு அழைத்தீர்கள். நன்றி! முதலில், பழனி நன்றாகப் பேசுவான் என்று சொன்னீர்கள். அதனால் என் பேச்சை இதற்குமுன் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரிதானே?" என்று கேட்டான்.

மன்றத் தலைவர் சற்றும் தயங்காமல், "ஓ! பலமுறை கேட்டிருக்கிறேனே!" என்று சொன்னார்.

"மகிழ்ச்சி! எங்கே என் பேச்சைக் கேட்டீர்கள்? தயவு செய்துசொல்கிறீர்களா?"

பழனி கேட்டதும் மன்றத் தலைவர் திகைத்தார். பழனி நன்றாகப் பேசுவான் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், ஒருமுறை கூடப் பழனியின் பேச்சைக் கேட்டதில்லை. ஏதோ பேச்சுக்குச் சொல்லி வைத்தார். இவன் இப்படி மடக்குவான் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர் திணறினார். திடீரென்று அவர் ஒன்றை நினைத்துக் கொண்டார். சில மாதங்களுக்குமுன் பசுமலைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து ஓர் அழைப்பிதழ் வந்தது. அதில் மாணவன் பா.சு.பழனி பேசப் போவதாகக் குறித்திருந்தது. அதுதான் மன்றத் தலைவரின் கவனத்துக்கு வந்தது. உடனே திகைப்பு மாறியது.

"தம்பீ! பசுமலைத் தமிழ்ச் சங்கத்தில் நீ பேசவில்லையா? அதைக் கேட்டேன். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை" என்று புளுகினார் மன்றத் தலைவர்.

பழனியின் அடங்கிய கோபம் பீறிட்டு எழுந்தது. அவன் உதடுகள் துடித்தன. சுந்தரேசரும் பிறரும் அவன் முகத்தைக் கண்டே ஓரளவு கலங்கினர்.

பழனி, "ஓகோ! அந்தப் பேச்சைக் கேட்டீர்களா? அதுதான் இளமையின் துடிப்பும் புதுமையின் வேகமும் நிறைந்தது என் பேச்சு என்கிறீர்களா? சபாஷ்! நீர்தான் சாட்சாத் அரிச்சந்திரன். மகாத்மா காந்தி உம்மிடம் வந்து உண்மை எப்படிப் பேசவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும்" என்று சொல்லி உரக்கச் சிரித்தான்.

மன்றத் தலைவருக்கு ஒன்றுமே புரியவில்லை. சுந்தரேசர் மகனின் இந்தப் புதிய போக்கைக் கண்டு வியந்தார். மற்றவர்களோ திகைப்புற்றனர்.

பழனி தொடர்ந்து பேசினான்:

"ஐயா மன்றத் தலைவரே! பொய்யும் புரட்டும் நெருங்காத பெருமை பெற்றது இந்த மதுரை மாநகரம். நக்கீரர் என்ற புலவர் இங்கே வாழ்ந்தாராமே, அவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே! கடவுளே எதிரே வந்து நின்று தம் நெற்றிக்கண்ணைக் காட்டினார். அவரோ, ‘நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என்று அஞ்சாது கூறினார். அப்படிப்பட்ட மண்ணிலே, தமிழ் வளர்க்கும் மன்றத்திற்குத் தலைவராக இருக்கும் நீங்கள் கேவலம் என்னையும் என் தந்தையையும் திருப்திப்படுத்துவதற்காகப் பொய் சொல்லித் திரியலாமா?"

பழனி கேட்டதும், மன்றத் தலைவர், "நானா? பொய் சொன்னேனா?" என்று நாக்குழறக் கேட்டார்.

பழனி உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். தன் கையால் மன்றத் தலைவரைச் சுட்டிக் காட்டினான். "ஆமாம் ஐயா, நீங்களேதான்! பசுமலையில் நான் பேசியதைக் கேட்டதாகச் சொல்கிறீர்களே, அதை நானும் உண்மை என்றுதான் நம்பியிருப்பேன். ஆனால் பாருங்கள், அன்று எனக்குக் காய்ச்சல் வந்து தொலைந்தது. அதனால் அந்தக் கூட்டத்திற்கே நான் போகவில்லை" என்றான்.

மற்றவர்கள் சிலை ஆனார்கள். மன்றத் தலைவரின் உடல் வேர்வையால் நனைந்தது.

"எதற்காக வீணே என்னைப் புகழ்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது தேவையானால் கேளுங்கள்! அதை என் தந்தை கொடுப்பார். அதற்காகப் பொய்களைக் கொண்டு புகழத் தேவையில்லை" என்று மன்றத் தலைவரிடம் கூறிவிட்டு அப்பாவின் பக்கம் திரும்பினான் பழனி. "அப்பா! இவர்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்தனுப்புங்கள்" என்று கூறிவிட்டுப் புயல் வேகத்தில் அந்த இடத்தை விட்டுப் போனான்.

தன்னுடைய அறையில் போய் உட்கார்ந்தான் பழனி. அவன் கண்களில் நீர் துளிர்த்தது. "நாகமாணிக்கம் சொல்வது மெய்தான் போலிருக்கிறது. என் பேச்சையே கேட்டறியாத அந்த மன்றத் தலைவர் என்னவெல்லாம் அளந்தார்? ஏன்? சுந்தரேசரின் மகன் என்பதற்காகத்தானே? தந்தையின் புகழால்தானா நான் புகழப்படுகிறேன்? எனக்கென்று தனிப்புகழ் இல்லையா? நான் புகழற்றவனா? சூரியனிடம் பெற்ற இரவல் ஒளியில் பிரகாசிக்கிறது சந்திரன். என் நிலையும் சந்திரனின் நிலைதானா?" என்று குழம்பினான்.

"பழனி" என்ற குரல் கேட்டது. அன்பு ஆறாகப் பாயும் அந்தக் குரலைக் கேட்டு நிமிர்ந்தான் பழனி. எதிரே பழனியின் அம்மா இருந்தாள். பழனி, ‘அம்மா’ என்று அழைத்துக் கொண்டே அம்மாவை அணைத்துக் கொண்டான்.

"அம்மா எனக்கு ஒரு திறமையும் இல்லையாம்மா? எனக்கென்று தனியே புகழ் இல்லையாம்மா? அப்பாவின் பிள்ளை என்பதால் என்னை இந்திரன், சந்திரன், குபேரன் என்று சொல்லும்போதெல்லாம் எனக்குக் கோபம் கோபமாக வருகிறது" என்றான்.

"பழனி! உன்னை மேலுக்குச் சிலர் புகழ்ந்தால் அது அவர்கள் செய்யும் தவறு. அதற்காக நீ வருத்தப்படாதே! இந்த உலகம் அப்படிப்பட்டது. பணம் இருப்பவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பாராட்டும். அதற்காக உன்னை உண்மையாக யாரும் புகழ்வதில்லை என்று எண்ணாதே" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

சுந்தரேசர் அப்போது உள்ளே வந்தார். மகன் இப்போதெல்லாம் அடிக்கடி பணக்காரன் மகனாகப் பிறந்தோமே என்று வருந்துகிறான் என்பதை அறிந்திருந்தார். அவர்தான் தாயை அனுப்பித் தேற்றச் செய்தார். அவரும் பழனியின் அருகே சென்றார்.

"பழனி! இன்று நீ ஏன் இவ்வளவு ஆத்திரத்தோடு நடந்துகொண்டாய்? வெளியே சென்ற இடத்தில் ஏதாவது நடந்ததா?" என்று கேட்டார் அப்பா.

பழனி கோவிலில் நடந்ததைச் சொன்னான். துறவியின் ஆசிமொழிகளையும், நாகன் பேசியவற்றையும் சொன்னான்.

"பழனி! துறவியின் வாக்கு பலிக்கும். நீ நிச்சயம் நிலைத்த புகழையும் நீடித்த ஆயுளையும் பெறுவாய்" என்று முகமும் அகமும் மலரச் சொன்னாள் பழனியின் அம்மா.

"ஆமாம் பழனி. துறவிபோன்ற பெரியோர்கள் சொன்னதை எடுத்துக்கொள்! பொறாமையோடு பேசிய நாகமாணிக்கத்தின் சொற்களையும், பொருளுக்காகப் பேசிய இளங்கோ இலக்கிய மன்றத் தலைவரின் பேச்சையும் பொருளில்லாத வெறும் சொற்கள் என்று தள்ளி விடு" என்றார் அப்பா.

பழனி அவர் சொன்னதைக் கேட்டு அதன்படி நடக்க முயன்றான்.

நாட்கள் பறந்தன.

அன்று ஏப்ரல் மாதம் கடைசிநாள். அன்றுதான் சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியில் ரிசல்ட். சுந்தரேசர் பள்ளியில், யார் யார் தேர்ச்சி பெற்றார்கள் என்பதுடன், ஒவ்வொரு வகுப்பிலும் யார் முதல் மார்க்கு வாங்கினார்கள் என்பதையும் அன்று அறிவிப்பார்கள்.

பழனி தேர்வின் முடிவைப் பார்க்கப் புறப்பட்டான். வெளியே செல்லும் முன் பூசை அறைக்குச் சென்றான். மீனாட்சியம்மை படத்தின் முன் நின்றான்.

"தாயே! இந்த முறை எனக்கு முதல்மார்க்கு வேண்டாம்! முதல் மார்க்கை நாகமாணிக்கம் பெற அருள் செய்யம்மா" என்று வேண்டினான்.

விசித்திரமான வேண்டுகோள்! அதற்காகவே அவன் தெரிந்த கேள்விகளுக்கும் பதில் எழுதாமல் விட்டுவிட்டானல்லவா? அதனால் நாகமாணிக்கம்தான் முதல் மார்க்கு வாங்குவான் என்று நம்பினான் பழனி.

பழனி வெளியே வந்தான். பள்ளிக்கு எதில் செல்வது? வீட்டில் கார் இருக்கிறது. ‘டிரைவர்’ என்று அழைத்தால் போதும். கார் முன்னே நிற்கும். அவனுடைய ஸ்கூட்டரும் இருந்தது. பழனி அவற்றில் செல்ல விரும்பவில்லை. பணக்காரரின் மகன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் வெளிப்படுத்த வேண்டுமா? பழனி சைக்கிளில் ஏறிப் பள்ளிக்குச் சென்றான்.

பள்ளியை நெருங்கிவிட்டான். அடுத்த தெருவில் சைக்கிளைத் திருப்பினான். யாரோ ஒருவன் சைக்கிள் மணிச் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் சைக்கிளின் எதிரே வந்தான். பழனி பிரேக் போட்டான். அப்படியும் சைக்கிள் எதிரே வந்தவனைத் தொட்டு நின்றது.

பழனி சைக்கிளிலிருந்து இறங்கியவாறு, கண்ணை மூடிக்கொண்டு சைக்கிளின் குறுக்கே வந்தவனைப் பார்த்தான். மறுநிமிடம், "அழகா!… அழகா!…" என்று அலறினான். சைக்கிளை அப்படியே கீழே போட்டுவிட்டு அழகனிடம் சென்றான்.

அழகனின் சட்டை கிழிந்திருந்தது. நெற்றியிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடம்பெல்லாம் தூசி. அந்த நிலையில் அவனைப் பார்த்த பழனி துடித்தான்.

"அழகா! என்ன நடந்தது? ஏன் இந்த நிலை? சொல்! சொல்!" என்று அழகனைப் பிடித்து உலுக்கிக் கேட்டான் பழனி.

—தொடரும்—

About The Author