உழைப்பின் உயர்வு

கோதாவரி ஆற்றங்கரையில் நாகய்யா என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர் நல்ல உழைப்பாளி. ஒருபொழுதும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார். அதிகாலையில் ஆரம்பித்தால் இரவு நெடுநேரம் வரை வேலை செய்தாலும் அலுத்துக் கொள்ளவே மாட்டார். எதையும் காலம் தவறாமல் செய்ய வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார்.

அவருடைய மூன்று மகன்களும் உயரமாகவும் வலிமையுடையவர்களாகவும் அழகாகவும் இருந்தனர். ஆனால், அவர்கள் மூவருக்குமே வேலை செய்வது என்பதே பிடிக்காது.

வயதான தந்தை வயலிலும், தோட்டத்திலும், அவர்கள் தாய் இறந்து விட்டதால் அவரே வீட்டிலும் வேலை செய்து கொண்டிருக்க, இவர்கள் மூவரும் மரங்களின் நிழலில் உட்கார்ந்து அரட்டையடிப்பார்கள் அல்லது பக்கத்தில் கோதாவரி ஆற்றில் மீன் பிடிக்கச் செல்வார்கள்.

அக்கம்பக்கத்திலிருப்பவர்கள், நாகய்யா இப்படி வயதான காலத்தில் கஷ்டப்பட்டு உழைப்பதைப் பார்த்து விட்டு மனம் பொறுக்காமல், அவர்கள் மூவரையும் பார்த்து, “நீங்கள் ஏன் வேலையே செய்வதில்லை? வீணாகப் பொழுதைக் கழிக்கிறீர்களே! வயதான காலத்தில் உங்கள் தந்தைக்கு உதவக் கூடாதா?” என்று கேட்டால், "நாங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்? எங்கள் தந்தை எங்களை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார். எல்லா வேலைகளையும் அவரே செய்து விடுகிறார்" என்று அவர்கள் பதிலளிப்பார்கள்.

பல ஆண்டுகள் இப்படியே கடந்தன. மூவரும் மாறாமல் அப்படியே இருந்தனர். நாகய்யாவும், வயதாகிப் பலமிழந்து, முன்பு போல வேலை செய்ய முடியாதவரானார். வீட்டுத் தோட்டம் கவனிக்கப்படாமல் புதர் மண்டியது. வயலும் பயிரிடப்படாமல் தரிசாக மாறிப் போனது. மூன்று பேரும் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தார்கள். வேலை செய்ய அப்படி அவர்களுக்குக் கசப்பாய் இருந்தது.

நாகய்யா தன் மகன்களைப் பார்த்து, "நீங்கள் ஏன் இப்படி வீண்பொழுது போக்குகிறீர்கள்? என் உடம்பில் தெம்பு இருந்த வரை நான் வேலை செய்து விட்டேன். இனிமேல் நீங்கள்தான் பாடுபட வேண்டும், எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

உடனே அவர்கள் மூவரும், "ஒன்றும் அவசரமில்லை அப்பா! நிறையக் காலம் இருக்கிறது" என்று பதிலளிப்பார்கள்.
தன் மகன்கள் இப்படிச் சோம்பேறிகளாய் இருக்கிறார்களே என்று நாகய்யா வருந்தினார். இந்த வருத்தத்தாலேயே அவர் நோயுற்றுப் படுத்த படுக்கையாகிவிட்டார்.

இதற்குள் குடும்பத்தில் நிலைமை மோசமாகிவிட்டது. ஒருவேளை உணவு சாப்பிடுவதே கஷ்டமாகிவிட்டது. வீடே வெளியே தெரியாதபடி சுற்றிலும் தோட்டத்தில் முட்புதர்களும், பூண்டுகளும் வளர்ந்து விட்டன.

ஒருநாள் நாகய்யா தம் மூன்று மகன்களையும் பக்கத்தில் அழைத்தார். "மகன்களே! எனக்கு முடிவு நெருங்கி விட்டது. நான் இல்லாமல் நீங்கள் எப்படி வாழப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு வேலை செய்யவும் பிடிக்கவில்லை. செய்யத் தெரிந்து கொள்ளவும் இல்லை" என்றார்.

மூவரும் துயரம் தாங்காமல் அழுது புலம்பினர். தந்தையில்லாமல் தாங்கள் மூவரும் எப்படி வாழப் போகிறோமோ என்று நினைத்து வருந்தினர்.

"அப்பா! எங்களுக்கு உங்களுடைய இறுதிப் புத்திமதியைக் கூறுங்கள்" என்று மூத்த மகன் வேண்டினான்.

"சரி! உங்களுக்குக் கடைசியாக நான் ஒரு ரகசியம் சொல்கிறேன்" என்ற நாகய்யா அவர்களைப் பார்த்து, "உங்களுடைய தாயும் நானும் ஓயாது உழைத்து வேலை செய்தது உங்கள் மூவருக்கும் தெரியும் அல்லவா? அப்படிப் பல ஆண்டுகளாய் அரும்பாடுபட்டுப் பணத்தைச் சிறிது சிறிதாய்ச் சேர்த்து வைத்தோம். அந்தப் பானையை நம் வீட்டுக்கு அருகேதான் தோட்டத்தில் புதைத்து வைத்தேன். ஆனால், எந்த இடத்தில் புதைத்தேன் என்பது எனக்கு இப்போது நினைவில்லை" என்றார் நாகய்யா.

பின்பு, "இந்தப் புதையலை மட்டும் நீங்கள் தேடிக் கண்டெடுத்து விட்டீர்களானால், நீங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படாமல் வாழலாம்" என்று சொல்லி முடிக்கும் முன்பே அவர் உயிர் பிரிந்தது.

மூவரும் தங்கள் தந்தையின் மறைவுக்காக வருந்தினர். பிறகு, தகுந்த முறையில் அடக்கம் செய்தனர்.

பிறகு, மூத்த சகோதரன் ஒருநாள் தன் தம்பிகளை அழைத்து, "தம்பிகளே! நாம் இப்போது பரம ஏழைகளாகி விட்டோம். அடுத்த வேளை சாப்பிடுவதற்குக் கூட இப்பொழுது ஒரு சல்லிக்காசு நம் கையில் இல்லை. நம் தந்தை இறக்கும் முன் நம்மிடம் கூறியது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அவர் புதைத்து வைத்த பானையை நாம் மூவரும் சேர்ந்து முதலில் தேடி எடுப்போம்" என்று கூறினான். மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்.

மூவரும் மண்வெட்டிகளை எடுத்து வீட்டுக்கு அருகே சிறு சிறு குழிகள் ஆங்காங்கே தோண்டினர். பல இடங்களில் குழி தோண்டிப் பார்த்தனர். ஆனால், தந்தையின் புதையல் கிடைக்கவில்லை. அவ்வாறு தோட்டம் முழுவதும் தோண்டினர்.

"இந்த மாதிரி தோண்டினால் கிடைக்காது. வயலையும் தோட்டத்துடன் சேர்த்துத் தோண்டிப் பார்க்க வேண்டும். நமது தந்தைக்கு வயதாகி விட்டதால் மறந்து இருக்கலாம்" என்று நடு சகோதரன் கூறினான்.

மற்ற இருவரும் ஒத்துக் கொண்டனர். மீண்டும் மண்வெட்டிகளை எடுத்து வீட்டைச் சுற்றிலும் தோட்டத்திலும், வயலிலும் ஒரு சிறு இடம் விடாமல் மண்ணை வெட்டிப் புரட்டிப் போட்டனர். அப்பொழுதும் புதையல் அகப்படவில்லை.

"திரும்பவும் ஒரு தரம் இன்னும் ஆழமாய் வெட்டிப் பார்ப்போம். பானையை நம் தந்தை ஆழமாய்ப் புதைத்து வைத்திருக்கக்கூடும்" என்று கடைசி சகோதரன் கூறினான்.

எப்படியாவது புதையலைத் தேடியெடுக்க வேண்டுமென்று விரும்பிய சகோதரர்கள் மீண்டும் ஒப்புக் கொண்டனர். அதை மட்டும் அடைந்து விட்டால், பிறகு வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டியதில்லை அல்லவா என்று எண்ணினர்.

மறுபடியும் கடுமையாக வேலை செய்தனர். நெடுநேரம் வெட்டிய பின், மூத்த சகோதரன் திடீரென்று தன் மண்வெட்டி கெட்டியான ஏதோ ஒன்றில் இடித்ததை உணர்ந்தான். பரபரப்பால் அவனுக்கு ‘திக்திக்’ என்று அடித்துக் கொண்டது.

"தம்பிகளே! தந்தையின் புதையலைக் கண்டுபிடித்து விட்டேன். சீக்கிரமாய் வாருங்கள் இங்கே!” என்று கத்தினான்.
நடு சகோதரனும் கடைசிச் சகோதரனும் ஓடி வந்து மூத்தவனுக்கு உதவினர்.

மூவரும் மும்முரமாய் அங்கு தோண்டினர். ஆனால், அவர்கள் மண்ணுக்கு அடியிலிருந்து தோண்டி எடுத்தது புதையலை இல்லை. ஒரு பெரிய கல்லைத்தான்.

அவர்களுக்குப் பெரும் ஏமாற்றமாய் இருந்தது.

பிறகு, பழையபடி மீண்டும் தோண்ட முற்பட்டனர். அவர்கள் சாப்பிடவில்லை, ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை. நாள் முழுவதும் ஓயாது வேலை செய்தனர். தோட்டம் முழுதும் ஆழமாய்த் தோண்டி விட்டனர். மண்ணும் நன்கு பண்பட்டு விட்டது. ஆனால், புதையல்தான் கடைசி வரை கிடைக்கவில்லை.

"ஆழமாய் வெட்டித் தோட்டம் முழுவதையும் பண்படுத்தி விட்டோம். புதையல்தான் கிடைக்கவில்லை; பேசாமல், வயலில் நெல்லையும் தோட்டத்தில் காய்கறிகளையும் பயிரிடவாவது செய்யலாம்" என்று மூத்த சகோதரன் கூறினான்.

"நல்ல ஆலோசனை. அப்படியே செய்வோம்!" என்று இளைய சகோதரர்கள் இருவரும் உடன்பாடு தெரிவித்தனர். "இவ்வளவு பாடுபட்டு நாம் செய்த வேலை விரயமாகி விடக்கூடாது" என்றனர்.

நெல்லையும் காய்கறிகளையும் பயிரிட்டு அவற்றைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணிக் காத்தனர்.

சிறிது காலத்தில் அவை யாவும் செழித்து வளரத் தொடங்கின. உரிய காலத்தில் நெல்லை அறுவடை செய்தனர்.
சகோதரர்களுக்கு அமோகமான அறுவடை கிடைத்தது. தமக்கு வேண்டிய நெல்லையும் காய்கறிகளையும் வைத்துக் கொண்டு மீதியை விற்றனர். நல்ல லாபம் சேர்த்தனர்.

"நமது தோட்டத்திலும், வயலிலும் நாம் செய்த வேலை வீணாகி விடவில்லை. நம் தந்தை இறக்குமுன் கூறிய புதையல் வேறொன்றுமில்லை, இந்த உழைப்புதான். அந்தப் புதையலை நாம் தோண்டி எடுத்துவிட்டோம்" என்று மூன்று சகோதரர்களும் மகிழ்ந்தனர். அது முதல் மூவரும் நல்ல உழைப்பாளிகளாயினர்.

About The Author

1 Comment

  1. வெற்றிய்ரசன்

    புதையல் = உழைப்பு
    அருமையான கதை ,அறிவூட்டக்கூடிய செய்தி ஹேமா. உழைப்பை புதைத்தால் புதையல் மிளிருது. வாழ்த்துக்கள் ஹேமா

Comments are closed.