ஒரு பூனை புலியாகிறது (10.1)

ஒருவிதத் தயக்கத்துக்குப் பிறகு, "சார்! மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள் என்பதால் நம் அலுவலகம் விடியற்காலை ஐந்து மணியிலிருந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நேற்றிரவு நேரம் கழித்தே வீட்டுக்குப் போனார்கள். அதனால் சில மணி நேரம் பிரேக் கொடுக்கலாம் சார்" என்றார், துணைக் கமிஷனர்.

துணைக் கமிஷனர் மீது கமிஷனர் சீறி விழுவார் என்று எதிர்பார்த்தான் ஹனிமேன்! கமிஷனர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, "சேரா! இங்கே வா!" என்றார். சேரன் அருகில் வந்தான். அவனை ஒரு கையால் அணைத்துக் கொண்டு பேசினார், கமிஷனர்.

"அன்புள்ள காவல் அதிகாரியே! இவனைப் பார்! இந்தச் சிறுவனுக்கு முதல் கடமை படிப்பது! இரண்டாம் கடமை படிப்பது! மூன்றாவது கடமையும் படிப்பதுதான்! இப்படி லெனின் சொன்னார். ஆனால் நாட்டைக் காப்பாற்றுவதற்காக இந்த இளங்கன்று – இந்தக் குட்டிமான் கடந்த நாற்பதெட்டு மணி நேரமாக சரியாக உண்ணாமல், உறங்காமல் முந்நூறு மைல் தூரம் கடந்து வந்து, நம் கையில் நமக்குத் தேவையான துரோகிகளின் பட்டியலை – சமூக விரோதிகளின் பட்டியலை ஒப்படைத்திருக்கிறான்! இதற்காக இவனுக்குச் சம்பளம் இல்லை! பஞ்சப்படி இல்லை! பயணப்படி இல்லை. என்றாலும் நமது வேலையை இவன் செய்திருக்கிறான். இவனது பொறுப்புணர்ச்சியும் தியாக மனப்பான்மையும் சம்பளம் வாங்கும் நமக்கு வேண்டாமா?"

துணைக் கமிஷனர் அணுவாகக் குறுகிப் போனார்! “சாரி சார்! நீங்க சொன்னபடியே செய்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

"மிஸ்டர் ஹனிமேன்! சேரனை அழைத்துப் போங்கள். காலையில் வாருங்கள். பட்டியலில் இருக்கிற அத்தனை பேரையும் கைது செய்துவிட்டால், நாளை கொலை நடக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இல்லையென்றால் தொல்லைதான்!" என்று கூறிய கமிஷனர், இருவரையும் அனுப்பினார்.

சேரன் அன்றிரவு உறங்கும் முன், "முருகா! அனைவரும் கைதாக வழி செய்" என்று வேண்டிக் கொண்டு படுத்தான்.

காவல் துறை கண்ணுறங்காமல் பணி செய்தது! மைக்ரோ பிலிம் கொடுத்த பெயர்ப் பட்டியலையும் முகவரிகளையும் கொண்டு அந்த இரவே சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்தது!

அனைவரையுமா?

இல்லை!

ஒருவனைத் தவிர மற்ற அனைவரையும் காவல்துறை கைது செய்துவிட்டது!

ஒருவன் கிடைக்கவில்லை!

அதனால்,கமிஷனர் கவலையில் ஆழ்ந்தார்.

****

சேரன் கண் விழித்து எழுந்தபோது, "குட்மார்னிங் சேரன்" என்னும் குரல் கேட்டது. அதே அறையில் உட்கார்ந்து அன்றைய ஆங்கிலச் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்த ஹனிமேன்தான் அவ்வாறு சொன்னான் என்பதை அறிந்து கொண்டே சேரன், "குட்மார்னிங் சார்” என்றபடி எழுந்து உட்கார்ந்தான். அறைக்குள் பரவிய வெளிச்சத்தைக் கொண்டு, பொழுது விடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது என்று புரிந்து கொண்டான். அதனால் தோன்றிய நாணத்தோடு, “ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலிருக்கு" என்றபடி அறையைச் சுற்றிப் பார்வையைச் செலுத்தினான்.

ஒரு சுவரில் தொங்கிய கடிகாரம் மணி எட்டு இருபது என்று காட்டியது.

"மணி எட்டரை ஆகப் போகுதே!” என்றபடி அவசர அவசரமாகப் படுக்கையை விட்டு எழுந்தான் சேரன்.

"அதனால் என்ன? நாம் பத்து மணிக்குக் கமிஷனர் அலுவலகம் போனால் போதும். மேஜை மேல் காப்பி வைத்திருக்கிறேன். சூடு ஆறியிருக்காது. முதலில் காப்பியைக் குடி. பிறகு குளிக்கப் போகலாம்."

சேரன் மேஜை மேல் இருந்த காப்பிக் கோப்பையை எடுத்துக் கொண்டான். ஹனிமேனுக்கு அருகே இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். காப்பிக் கோப்பையைத் தன் உதட்டில் பொருத்தப் போனவன், அதை விலக்கி, "மைக்ரோ ஃபிலிம் பழுதடையவில்லையே? அது பயன்பட்டதா? அதில் குறிப்பிட்ட அனைவரையும் கைது செய்து விட்டனரா?" என்று கேட்டான்.

விடிந்ததும் விடியாததுமாக ஹனிமேன் கமிஷனருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்திகளை அறிந்திருந்தான். அதனால், "சேரா! ஃபிலிம் பழுதாகவில்லை. மிகவும் பயன்பட்டது. பெயர்ப்பட்டியலில் உள்ளவரில் ஒருவனைத் தவிர மற்ற அனைவரையும் கைது செய்து விட்டதாகக் கமிஷனர் தெரிவித்தார். நாம் அவரைச் சந்திக்கச் செல்லும்போது அந்த ஒருவனும் கைதாகியிருப்பான். நீ கவலைப்படாமல் காப்பியைக் குடி" என்றான்.

சேரன் காப்பியைக் குடிக்க முயன்றபோது காலண்டர் கண்ணில் பட்டது. அது நவம்பர், 14 என்பதைப் பெரிய எழுத்துக்களில் காட்டியது. உடனே அவன் முகம் குவிந்ததை ஹனிமேன் கவனித்தான்.

நவம்பர் 14.

பாரதத்தின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள். சின்னஞ்சிறுவரிடம் பேரன்பு கொண்ட நேரு மாமா, தம் பிறந்த நாளை, குழந்தைகள் நாளாகக் கொண்டாடக் கோரினார். இந்தியா முழுவதும் அந்த நாள் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளின் மாபெரும் திருநாளாக மாறிவிட்ட ஒரு நாள் நவம்பர் 14. அன்று குழந்தைகள் ஆடிப்பாடுவார்கள்! ஆனந்தமாக இருப்பார்கள்! சுவையான தின்பண்டமும் கிடைக்கும். அதனால் நவம்பர் 14 என்பதைக் கேட்டால் அழுத பிள்ளை சிரிக்க வேண்டும்! சோம்பிக் கிடப்பவரும் துள்ளிக் குதிக்க வேண்டும்! அந்தக் குதூகல நாளைக் கொலைக்காகத் தேர்ந்தெடுத்த கொடியவர்கள், இரக்கமற்ற அரக்கர்கள்! பாசமற்ற பாதகர்கள்! இதோ, நவம்பர் 14 என்பதைப் பார்த்து மலர வேண்டிய சேரனின் முகம் குவிந்து விட்டதே…!

ஹனிமேன் தன் சிந்தனையை நிறுத்தினான். "சேரா! கவலைப்படாதே! உன்னுடைய தேசபக்தி இன்றைய நாளைக் குழந்தைகள் நாளாகவே வைத்திருக்கும். கொலை நாள் ஆக்காது! காப்பியைக் குடி!" என்று கூறினான்.

சேரனின் நா காப்பியைச் சுவைத்தாலும் மனம் மட்டும் தேனீ கூறியதையே நினைத்தது!

"வரும் நவம்பர் பதினாலாம் தேதி சென்னையில் ஒரு அரசியல்வாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்."

‘முருகா! கொலை நடக்காமல் தடை செய்! தேனீயின் உயிர்த் தியாகம் பயனுடையதாக இருக்கட்டும்! குழந்தைகள் நாள் குழந்தைகள் நாளாகவே திகழட்டும்!’

சேரன் மனத்துக்குள்ளேயே வேண்டிக் கொண்டான்.

****
சரியாகப் பத்து மணிக்கு ஹனிமேனும் சேரனும் டாலருடன் கமிஷனர் அறைக்குள்ளே நுழைந்தனர். கமிஷனர் இருவரையும் வரவேற்றார். ஹனிமேனும் சேரனும் கமிஷனர் எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தனர்.

டாலர் அடக்க ஒடுக்கமாக, சேரனுக்கு அருகே உட்கார்ந்தது.

கமிஷனரின் ஆணையின்படி ‘கூல்டிரிங்க்ஸ்’ வந்தன. இருவரும் குடித்தனர்.

இதற்குச் சுமார் பத்து நிமிடம் ஆகியிருக்கும். அந்தப் பத்து நிமிடமும் கமிஷனரிடம் ஹனிமேனோ, சேரனோ எதுவும் பேச முடியாமல், அவர் தொடர்ந்து நான்கைந்து முறை தொலைபேசியில் பேசினார். மூன்று முறை, அலுவலர்கள் டெலக்ஸ் செய்திகளைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தனர்.

அப்போது துணைக் கமிஷனர் உள்ளே வந்தார். அவரிடம் தொலைபேசியைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, கமிஷனர் சேரனையும் ஹனிமேனையும் பார்த்தார்.

"சேரா! இந்தியக் குடியரசுக்கு எதிராக வெளிநாட்டார் செய்யும் சூழ்ச்சியில் ஈடுபட்ட மாபெரும் துரோகிகளின் கூட்டத்தைச் சுற்றி வளைக்கத் துணை செய்தது, துணை செய்து வருகிறது, நீ உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு வந்து கொடுத்த மைக்ரோ ஃபிலிம். அதிலிருந்த வெளி மாநிலப் பட்டியலை நேற்றிரவே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் காவல் துறைக்கு அனுப்பி விட்டோம். அப்பட்டியலில் குறிப்பிட்ட நபர்களைக் கைது செய்த செய்திகள் விடியற்காலையிலிருந்து தொலைபேசி மூலமும் டெலக்ஸ் மூலமும் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் இப்போது சிக்காமல் தப்பினாலும், மிக விரைவில் அவர்களைக் கைது செய்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது."

கமிஷனர் சொன்னார்.

"அப்படியானால் ராத்திரி முழுவதும் நீங்கள் தூங்கலையா சார்?"

கமிஷனர் சிரித்தார்.

"நான், ஒரு மணி நேரமாவது தூங்கியிருப்பேன். துணைக் கமிஷனர்தான் ஒரு நிமிஷம்கூடத் தூங்கவில்லை."

கமிஷனரின் குரலில் பெருமிதம் தொனித்தது. துணைக் கமிஷனர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாரே தவிர, கமிஷனர் பக்கம் திரும்பவே இல்லை.

"இங்கு இன்னும் ஒருவனைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே! கைது செய்து விட்டீர்களா?"ஹனிமேன் கேட்டான்.

"இல்லை."

இதைச் சொல்லும்போது கமிஷனரின் குரலில் கவலை தெரிந்தது.

"ஏன் கைது செய்யவில்லை? நீங்கள் கைது செய்யப் போவது தெரிந்து, அவன் தலைமறைவாகி விட்டானா?"
– இது சேரனின் கேள்வி.

"அப்படியும் இல்லை. இந்த ஆசாமியின் பெயர் ஆர்.சேகர். இவன் மேற்கு அண்ணா நகரில் ஒரு வீட்டில் இருக்கிறான். அந்த வீடு பூட்டியிருக்கிறது. அங்கே விசாரித்ததில் அவன் ஆறு நாளுக்கு முன்பு வெளியூருக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனானாம். திரும்பவில்லை. இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தோம். நமக்குத் தேவையான எந்தத் தடயமோ, தகவலோ கிடைக்கவில்லை. அவன் வந்தால் கைது செய்வதற்காக ஆளை நிறுத்தியிருக்கிறோம்."

இதைச் சொல்லும்போதும் கமிஷனரின் குரலில் அதே கவலை தொனித்தது.

"துரோகக் கும்பலில் ஒருவனைத் தவிர, மற்றவரைக் கைது செய்துவிட்டீர்கள். கிடைக்காத ஒருவனும், தனது வீட்டுக்கு வந்தவுடன் கைதாவான். அதனால் தேனீ குறிப்பிட்ட கொலை நடக்காது, இல்லீங்களா?"

சேரன் கேட்டான்.

கமிஷனர் உடனே பதில் சொல்லவில்லை.

–புலி வளரும்…

About The Author