ஒரு பூனை புலியாகிறது (9.1)

பிரிந்தவர் கூடினர்!

காரை ஓட்டிக் கொண்டிருந்த ஹனிமேன் அடிக்கடி சேரனைப் பார்த்துக் கொண்டே இருந்தான். ஒரு சிறுவனின் நாட்டுப் பற்றும் வீரச் செயல்களும் அவனை இன்னும் வியக்கச் செய்துகொண்டிருந்தன. "கவிஞர்கள் பிறக்கிறார்கள்! உண்டாக்கப்படுவதில்லை என்பது போல, தேச பக்தர்கள் பிறக்கிறார்கள், உண்டாக்கப்படுவதில்லை! சுயநலம் கலவாத துணிவு மிக்க வீரர்களும் பிறக்கிறார்கள், உண்டாக்கப்படுவதில்லை!"ஹனிமேன் சிந்தித்தவாறே மீண்டும் தனது பார்வையைத் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த சேரனின் முகத்தில் படியச் செய்தான்!

சேரனின் முகத்தில் ஒரு மாறுதல்! பதற்றம் படர்ந்த முகத்தின் உணர்ச்சி மாறிவிட்டது! இப்போது அந்தச் சின்ன முகத்தில் விவரிக்க முடியாத வேதனை விரிந்து வேரூன்றியது.

"சேரா! திடீரென்று உன் முகத்தில் வேதனையைப் பார்க்கிறேன். என்ன விஷயம்? உன் வீட்டு ஞாபகமா? இல்லை, ஏதோ அரசியல் சூழ்ச்சியிலே சிக்கி விட்டோமே என்கிற வேதனையா?"

ஹனிமேன் கேட்டான். என்றாலும் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

சேரன் ஹனிமேனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பேசினான்.

"இரண்டும் இல்லைங்க. இந்தச் சின்ன வயதிலே ஒருவனைச் சித்திரவதை பண்ணிட்டோமேன்னு நினைச்சேன். அதனாலே சங்கடப்பட்டுட்டேன்."

"சித்திரவதையா? யாரை?"

"நான் தப்பிச்சு வந்தேனே, அந்த வீட்டிலே இருந்தானே மாது… அவனைத்தான்! தீப்பற்றி எரியற துணியை அவன் மேலே போட்டேன். அவன் தலைமயிரும் சட்டையும் பத்தி எரிஞ்சதைப் பார்த்தேன். ஆனாலும் அறையைப் பூட்டிட்டு வந்துட்டேன். தீக்காயத்திலே அவன் துடிக்கமாட்டானா? நினைக்கிறபோதே நெஞ்சு நடுங்குதுங்க."

சொன்ன சேரனின் முகத்தை ஒரு கணம் உற்றுப் பார்த்தான், ஹனிமேன். ‘அந்த மாது சிறுவனான சேரனை மிருகமாகத் தாக்கியவன். அவனுக்காக இவன் பரிதாபப்படுகிறானே!’

"சார்! யாரும் அவனுக்கு உதவி செய்யலைன்னா தீக்காயத்திலே அவன் செத்துப் போகலாம்! அப்போ, ஒருவனை நான் கொலை செய்தவன் ஆவேன்."

வாயிலிருந்து வார்த்தைகள் வருவதற்குள், கண்ணிலிருந்து நீர்த் துளிகள் விழுந்தன!

"டேக் இட் ஈஸி" என்று கூறியபடி, ஹனிமேன் தன் இடக்கையை நீட்டி அவனை அணைத்துக் கொண்டான்.

கார் போய்க் கொண்டே இருந்தது! ஆனால் வேகம் குறைந்திருந்தது!

இந்திய ஒற்றர்களுக்கு எவ்வளவுதான் பயிற்சி கொடுத்தாலும், சமயத்தில் எங்கிருந்தோ, இரக்கம்-கருணை-பாவம் பற்றிய பயம் முதலியவற்றில் ஏதோ ஒன்று தலைகாட்டி விடுவதும், அதனால் ஏமாந்து விடுவதும் ஒரு குறை என்று பலர் கூறுவது ஹனிமேனுக்குத் தெரியும். எல்லாச் சூழ்நிலையிலும் இரக்கமற்ற அரக்கர் போல நடக்க முடியாத பண்பு, இந்தியரின் இரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று. இந்தப் பிஞ்சு நெஞ்சத்தில் அந்த மனிதப் பண்பு செழுமையாகவே வளர்ந்திருப்பதை ஹனிமேனால் உணர முடிந்தது.

"சேரா! பயிர்த் தொழிலில் களை எடுப்பது முக்கியம். பயிரை வளர விடாமல் தடுக்கும் களைகளைப் பறித்து எறிவது பாவமல்ல; பயிருக்குச் செய்யும் சேவை; ஒரு முரடனைத் தீக்காயம் பெறுமாறு நீ தாக்கியது, ஒரு தேசத் தலைவரை நாளை கொலை செய்யப் போகும் நாச வேலையைத் தடுப்பதற்காக! அதனால் வீணாக எதையோ நினைத்து வேதனையடையாதே!"

ஹனிமேன் தந்த விளக்கம் சரி என்று நினைத்தாலும் சேரனால் அமைதி அடைய முடியவில்லை. அவன், "சார்! தீக்காயத்துடன் அறைக்குள் கிடப்பவனுக்கு மருத்துவ உதவி கிடைக்கச் செய்யுங்களேன்! அதனால் என்ன தீமை நேரும்? ப்ளீஸ்!" என்று கெஞ்சினான்.

ஹனிமேன் ஒப்புக் கொண்டான். அதற்குக் காரணம், கருணையோ, இரக்கமோ அல்ல! தீக்காயம் பெற்றவனைக் கைது செய்ய வேண்டும். அவனிடமிருந்து பல தகவல்கள் பெறவேண்டும். அதை அவசரத்தில் மறந்துவிட்டான். சேரன் வேண்டியபோது, ஹனிமேன், தான் மறந்த கடமையை நினைவுபடுத்திக் கொண்டான், அவ்வளவுதான்! ஹனிமேன் உடனே காரைச் சிந்தாதிரிப்பேட்டைக்குத் திருப்பினான். சேரன் வழி காட்டினான். கார் ஊர்ந்து சென்றது.

தான் அடைபட்டுக் கிடந்த வீட்டை ஹனிமேனுக்குக் காட்டினான், சேரன். வெளிக்கதவு, அவன் தப்பி ஓடியபோது மூடியபடியே இப்போதும் இருந்தது.

ஹனிமேன் அந்த வீட்டின் எண்ணையும் வீதியின் பெயரையும் குறித்துக் கொண்டு, அங்கிருந்து காரைக் கிளப்பினான். நேப்பியர் பூங்காவின் எதிரே இருந்த காவல் நிலையத்துக்குச் சென்றான். இன்ஸ்பெக்டரிடம் ஹனிமேன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தீக்காயம் பெற்ற மாதுவைக் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கக் கோரினான். அந்த வீட்டைக் காண்பித்து, யார் அந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் கைது செய்ய வேண்டினான்.

ஹனிமேன், "சேரா, இப்போது திருப்திதானே?" என்று கேட்டான்.

சேரன் முகமலர்ச்சியுடன், "நன்றி" என்று கூறினான். கூறியபடி தன் கால்சட்டைப் பையில் கையை விட்டு ஒரு சாவியை எடுத்து ஹனிமேனிடம் கொடுத்தான். "இது அந்த முரடன் இருக்கும் அறையின் சாவி" என்றான். ஹனிமேன் அதையும் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்துவிட்டான்.

அடுத்த அரை மணியில், ஹனிமேனும், சேரனும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தனர். போலீஸ் கமிஷனர் கதைகள் எழுதும் எழுத்தாளரும் கூட! அவரே இப்போது ஹனிமேன் கூறிய சேரனின் கதையை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தார்.

ஹனிமேன் ஒருவாறு அனைத்தையும் சொல்லி முடித்தான். கேட்ட போலீஸ் கமிஷனர் உடல் சிலிர்க்க, உள்ளம் சிலிர்க்க, "சேரா! உன் சென்னைப் பயணம் சேரன் செங்குட்டுவனின் இமயப் பயணம் போல வரலாற்றில் நிலைக்கப் போகிறது. உனக்கு என் பாராட்டுக்கள்!" என்றபடி கையை நீட்டினார். சேரன் நாணத்துடன் கையைக் குலுக்கினான்.

"சேரனின் நாயைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது மாலை ஆகிவிட்டது. நாங்கள் போனால் நாய்களைப் பிடித்து வைக்கும் இடத்திலிருந்து மீட்க முடியாமல் போகலாம். மறுநாள் காலை வரச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுவார்கள். அதனால், உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறோம். நாயைக் கண்டுபிடிக்க வேண்டும். மைக்ரோ பிலிம் எடுத்து டெவலப் செய்து பார்க்க வேண்டும். அதில் உள்ள பெயர்களை அறிந்து நீங்கள் தக்க நடவடிக்கை எடுத்து நாளை நடக்கப் போகும் கொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்."

–புலி வளரும்…

About The Author