சண்டிமாடு டிரான்சிஸ்டர்

நல்ல டிரான்சிஸ்டர் செட்தான் அது. நல்லவைகளைச் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும். ரவியும் அப்படி ஒன்றும் அஜாக்கிரதையாக இருப்பவன் அல்ல. இருந்தாலும் அந்த மிக நல்ல டிரான்சிஸ்டர் கை நழுவி விழுந்து சற்றுச் சேதமாகி விட்டது. வெளிப் பார்வைக்கு அழகாக இருப்பினும் உள்ளூர இணைப்பில் ஏதோ பழுது ஏற்பட்டு, பேச, பாட அது திணறியது.

பழுது என்றால் ரொம்பவும் கோளாறாகி விடவில்லை. பாடிக் கொண்டே இருக்கும். சட்டென்று மௌனமாகி விடும். பெரிய மனிதர் எவருடைய பேச்சாவது ஒலிபரப்பாகும். திடீரென்று டிரான்சிஸ்டர் பேச்சை நிறுத்தி அந்தப் பெரிய மனிதருக்கு என்ன நேர்ந்தது என்று நம்மை எண்ணச் செய்து திகிலடைய வைக்கும். நல்ல நாடகம் ஒன்றைக் கேட்டுக் கொண்டிருப்பான் ரவி. திடீரென்று நிகழ்ச்சியை நிறுத்தி சஸ்பென்ஸை ஏற்படுத்திவிடும் டிரான்சிஸ்டர்!

ஒக்கிட்டுக் கொடுக்குமாறு தன் அப்பாவிடம் வெகு நாட்களாகவே ரவி கேட்டுக் கொண்டிருக்கிறான். ஆகட்டும், ஆகட்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, டிரான்சிஸ்டரை அவர் ரேடியோ கடைக்கு எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை. இப்படி அது இடக்குப் பண்ணுகிறதே என்பதற்காக ரவி அதைப் பயன்படுதாமலும் இருப்பதில்லை. சண்டித்தனம் பண்ணத் தொடங்கினால் அதன் தலை மீது ஆள்காட்டு விரலால் ஒரு தட்டுத் தட்டுவான். டிரான்சிஸ்டர் விழித்துக்கொண்டு செயல்படத் தொடங்கும்.

இந்த வானொலி நிலையத்தினர் இருக்கிறார்களே, அவர்களுக்கு எந்த நேரத்தில் எதை ஒலிபரப்ப வேண்டும் என்பது தெரிவதில்லை. பாருங்கள், அகில இந்திய நாடகமாம், அன்று அதை இரவு ஒன்பதரையிலிருந்து பதினொரு மணி வரை ஒலிபரப்பினார்கள். நாடகங்கள் என்றால் மிக நன்றாக ரசித்துக் கேட்பான் ரவி. ஆனால் அவன் சுத்தத் தூங்குமூஞ்சி! இரவு எட்டு மணிக்கெல்லாம் தூக்கம் வந்துவிடும்! அதுவும் பாடப்புத்தகத்தைக் கையில் எடுத்தால் என்றால் ஏழரை மணிக்கே உறக்கம் அவனுடைய கண் இமைகளை இழுத்து மூட முயலும்.

அன்று இரவு நாடகம் இருந்ததால் தூக்கத்தை விரட்டி விரட்டி அடித்தபடி அவன் டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

மணி ஒன்பது. தூக்கம் அணைக்கத் தொடங்கியது. அவன் மயங்கிவிடவில்லை. எழுந்து போய்ப் படுக்கையை எடுத்து வந்து விரித்து, அதன் மேலே உட்கார்ந்து, டிரான்சிஸ்டரை அருகில் வைத்துக் கொண்டான்.

மணி ஒன்பதே கால். ரவியின் தலை ஆடியது. அந்தப் பக்கமாக வந்த அம்மா, “படுத்துக் கொள்ளேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். அவன் எழுந்து சென்று குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவி விட்டு வந்து மீண்டும் படுக்கை மீது உட்கார்ந்தான்.

மணி ஒன்பதரை, நாடகம் தொடங்கியது. ரவி நிமிர்ந்து உட்கார்ந்தான். தூக்கம் அழுத்தியது. ட்ரான்சிஸ்டரைத் தலையணைக்கருகில் வைத்துக் கொண்டு படுத்தான். நாடகம்தான் தொடங்கி விட்டதே, கேட்டுக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்பது அவனுடைய நினைப்பு.

மணி ஒன்பதே முக்கால். நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் ரவி. டிரான்சிஸ்டரும் வழக்கம் போல் சண்டி மாடாகப் படுத்துவிட்டது.

இரவு மணி பத்து அளவில் வீட்டினுள் இருள் சூழ்ந்தது. அப்பா, அம்மா, பாட்டி, சின்னப் பாப்பா அனைவரும் படுத்து உறங்கி விட்டனர்.

மணி பத்தே முக்கால், ரவியின் வீட்டுக்குப் பின்புறத்தில் திருடன் ஒருவன் சுவர் ஏறிக் குதித்துக் கொண்டிருந்தான், அடுத்த ஐந்தாவது நிமுஷம் அவன் ஓட்டைப் பிரித்துக் கொண்டு வீட்டினுள் குதித்துவிட்டான்.

நல்ல இருட்டு, திருடன் விழித்து விழித்துப் பார்த்தபடி நிலைப்படிகளைத் தாண்டி மெள்ள மெள்ள முன்னேறினான்.

ரவி புரண்டு படுத்தான். அவனுடைய கை டிரான்சிஸ்டர் மீது விழுந்தது.

"நில்!"

திருடன் திகைத்துச் சட்டென்று நின்றான்.

"கைகளைத் தூக்கு!"

கைகளைக் கூரையை நோக்கித் திருடன் உயர்த்தினான்.

"உம், சுட்டு விடுவேன்!"

"டபார்!"

"ஐயையோ!" என்று அலறியபடி திருடன் தரையில் விழுந்தான்.

ஓசை கேட்டு, ரவியைத் தவிர அனைவரும் எழுந்து விட்டனர். சின்னப் பாப்பாகூட அழுதாள். அம்மா ஸ்விட்சைத் தட்டினாள். விளக்கு எரிந்தது. தரையில் விழுந்த திருடன் தலை உயர்த்திப் பார்த்தான். அருகில் நின்றிருந்த அப்பா அவன் முதுகில் ஒரு காலை வைத்து எழுந்திருக்க விடாமல் அழுத்தினார்.

"ஐயையோ! நான் சாகிறேனே, என்னைச் சுட்டுட்டாங்களே!" திருடன் அலறினான்.

"ஆமாம், சுட்டேன். துப்பாக்கியில் ஒரு குண்டுதான் இருந்தது. அதனால் ஒரு முறைதான் சுட்டேன். அதிக குண்டுகள் இருந்திருந்தால், சுட்டுக் கொண்டே இருந்திருப்பேன்!" என்றது டிரான்சிஸ்டர்.

திருடனின் கைகளைப் பின்புறமாக அப்பா கயிற்றினால் கட்டினார். அவனை எழுந்து நிற்கச் சொன்னார். அவன் எழுந்து நின்று தலை குனிந்துகொண்டான்.

"எங்கேப்பா துப்பாக்கி சுட்ட காயம்?" அப்பா கேட்டார்.

அம்மா சிரித்தாள். அருகில் நின்ற சின்னப் பாப்பாவும் சிரித்தாள்.

"நான்தான் ஏமாந்துட்டேன்!" என்றான் திருடன்.

இதற்குள் வீட்டு வாயிலில் கூட்டம் கூடி விட்டது. ஒருவர் போலீஸுக்குப் போன் செய்து விட்டு வந்தார். போலீஸ் வேனும் வந்து திருடனைத் தூக்கிப் போட்டு கொண்டு போயிற்று.

வீட்டினுள் திருடன் வந்ததும், அவனை டிரான்சிஸ்டர் பிடித்துக் கொடுத்த விவரமும் மறுநாள் காலையில்தான் ரவிக்குத் தெரிய வந்தது. நாடகத்தைப் புகழ்ந்து வானொலி நிலையத்தாருக்கு அவன் கடிதம் எழுதினான்.

இன்றுவரை அவனுடைய டிரான்சிஸ்டர் ஒக்கிடப் படாமல்தான் இருக்கிறது. வேலை செய்யுமாறு அதன் தலையில் ரவியும் தட்டிக் கொண்டுதான் இருக்கிறான்.

About The Author