டிராகனின் முத்து (1)

ஸியாவ் ஷெங் தன் அம்மாவுடன் ஒரு சிற்றூரில் வாழ்ந்து வந்தான். தினமும் வீட்டில் முன்னால் வளர்ந்த காட்டுப் புற்களை வெட்டுவான். அதைக் கட்டிக் கொண்டு போய் அவனுடைய அம்மா சந்தையில் விற்பாள். வழியில் வீட்டுக்குத் தேவையான அரிசி, தேயிலை, கொழுக்கட்டைக்குரிய மாவு போன்ற அத்தியாவசியங்களை வாங்கி வருவாள்.

ஒரு கோடை காலத்தில் கடுமையான வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது. புற்கள் எல்லாமே வாடி மடிந்தன.

"இப்போது என்ன தான் செய்வது?", என்று கவலைப் பட்டாள் அம்மா. "அரிசி ஜாடி கிட்டத்தட்ட காலியாகி விட்டது."

"கவலைப் படாதீங்கம்மா", என்றான் ஸியாவ். "நான் விற்பதற்கு புல் கண்டு பிடிப்பேன், அம்மா." தன் பாதணிகளை மாட்டிக் கொண்டு காட்டுக்குள் போனான். பகலெல்லாம் புற்றரையைத் தேடினான். ஆனால், கோடை வெயில் எல்லாவற்றையும் அழித்திருந்தது. எங்கு தேடியும் ஒரு சிறுபுல்லும் காணவில்லை. ஸியாவ் வீட்டுக்குப் போனான்.

"ஏதும் புல் கிடைத்ததா?", என்று சோகமாகக் கேட்டாள் அம்மா.

"இல்லை அம்மா."

"எனக்குக் கிடைத்தது", என்று சொல்லி ஒரு கூடை நிறைய புல்லை நீட்டிக் காட்டினாள் அம்மா.

"அட, எங்கயிருந்தும்மா?"

"தொழுவத்திற்குப் பின்னாலிருந்து", என்று சொல்லிக் கொண்டே அம்மா ஸியாவைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டினாள்.

"அதோ, அங்கே தான். அட மீண்டும் முளைத்து விட்டதே ! காலையில் நான் வெட்டிய சுவடே இல்லையே."

ஸியாவ் முழந்தாளிட்டு புற்களிடையே விரலை விட்டு நோண்டினான். வேரில் ஏதோ சிக்கியிருந்தது. அதை மேலும் தோண்டினான்.

"இது மிகவும் அதிசயம்!"

"அது டிராகன் முத்தாயிற்றே!", என்றாள் அம்மா. "அதன் மந்திர சக்தியால் தான் புற்கள் வளர்ந்திருக்கின்றன. இதை அரிசி ஜாடியில் ஒளித்து வைப்போம்."

இருவரும் விரைந்து போய் ஜாடிக்குள் முத்தை வைத்தனர். ஸியாவ் புல்லை வாளியில் போட்டு அலசினான். அடுத்த நாள் சந்தைக்குக் கொண்டு போய் விற்க வேண்டும். அம்மா கடைசி பிடி அரிசியை வைத்து இரவு உணவைச் சமைத்தாள்.
அடுத்த நாள் காலையில், அம்மா ஸியாவைக் கூப்பிட்டு, "ஸியா பாரேன். ஜாடி நிரம்பி வழிகிறது", என்று கூவினாள்.

ஸியாவ் ஜாடியை வெறித்துப் பார்த்தான். விளிம்பு வரை அரிசி இருந்தது. அம்மா சொன்னது சரி தான் அது மந்திர முத்து தான்! "மறுபடியும் டிராகன் முத்தின் சாகசம் தான் இது", என்ற அம்மா கொஞ்சம் அரிசியை தன் பாவாடையில் கொட்டி எடுத்துக் கொண்டு அண்டை வீட்டுக்குப் போனாள். "எங்களின் அதிருஷ்டத்தில் உங்களுக்கும் பங்கு கொடுக்கிறோம்."

அண்டை வீட்டார் மகிழ்ந்தனர். அவர்கள் நண்பர்களிடம் டிராகன் முத்தைப் பற்றியும் அரிசியைப் பற்றியும் சொன்னார்கள். ஸியாவ் வீட்டின் முன்னால் ஒரு கூட்டமே கூடி விட்டது. எல்லோருக்கும் கொஞ்சம் அரிசி கொடுத்தாள் அம்மா.
டிராகன் முத்தைப் பற்றிய செய்தி அடுத்த கிராமத்துக்கும் பரவியது. மக்கள் திரள் திரளாக வந்தார்கள். ஜாடியில் இருந்த முத்தையும் அது செய்த அதிசயத்தையும் பார்க்க ஆவல் கொண்டார்கள். ஸியாவும் அம்மாவும் எல்லோரையும் வரவேற்று அரிசி கொடுத்தனர்.

ஆனால், பரிவுக்கு எப்போதும் மக்கள் நன்றி பாராட்டுவது இல்லையே. சிலருக்கும் ஸியாவ்வையும் அம்மாவையும் பார்த்துப் பொறாமை ஏற்பட்டது. முத்தைத் தங்களின் உடமையாக்கிட நினைத்தார்கள்.

"அவர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடி விடுவோம்", என்றான் ஒருவன்.

(மீதி அடுத்த இதழில்)

(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author