துருவன் (3)

துருவனின் சிறப்பு:

உத்தானபாதனால் ஏற்கப்பட்டு, மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட துருவன் சுகமாக வசித்து வந்தான். சில வருடங்கள் கழிந்தன. வாலிப பிராயம் அடைந்த துருவனை பூமண்டலத்திற்கு அதிபதி ஆகும்படி ராஜ்யாபிஷேகத்தை உத்தானபாதன் செய்வித்தான். வயது அதிகமாவதைக் கருத்தில் கொண்டு அவன் வனத்திற்குச் சென்றான். துருவன் பிரஜாபதியின் புதல்வியான ப்ரமி என்பவளை மணம் புரிந்தான். அவனுக்குக் கல்பன் என்றும் வத்ஸரன் என்றும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். வாயுவின் புதல்வியான இடை என்பவளையும் துருவன் மணந்தான். அவளிடத்தில் உத்கலன் என்ற மகனையும் ஒரு மகளையும் பெற்றான்.
துருவனின் சகோதரனான உத்தமன் ஒரு நாள் வேட்டைக்குப் போகையில் அங்கு ஹிமவத் பர்வதத்தில் பலசாலியான ஒரு யட்சனால் அடியுண்டு மாண்டான். அவனுடைய தாயான சுருசி வேட்டையாடச் சென்ற மகன் திரும்பி வரவில்லையே என்று எண்ணி வருந்தி மரணம் அடைந்தாள். துருவன் தன் சகோதரனான உத்தமனின் மரணத்தைக் கேட்டு கோபம் கொண்டு யட்சர்களின் இருப்பிடமான லங்காபுரிக்குச் சென்றான். தனது சங்கை எடுத்து ஊதினான். அந்த ஒலியைக் கேட்ட யட்சர்கள் நடுநடுங்கினர். யுத்தத்தில் அவர்களை எதிர்கொண்ட துருவன் பாணத்தில் மேல் பாணமாக விடுத்து அவர்களை அடித்தான். மிக பயங்கரமான கோர யுத்தம் நடந்தது.

இறுதியில் துருவன் தனது வில்லில் நாராயண அஸ்திரத்தைத் தொடுத்தான். இந்த அஸ்திரத்தால் யட்சன் நிர்மாணித்த மாயைகள் அனைத்தும் நாசம் அடைந்தன.

நாராயண அஸ்திரத்தால் யட்சர்களின் சைனியத்தில் உள்ளோர் அலறியவாறே மரணம் அடைந்தனர்.

இதைக் கண்ணுற்ற துருவனின் பாட்டனாரான ஸ்வாயம்பு மனு அவர்களின் மீது இரக்கம் மிகக் கொண்டு துருவனிடம் வந்து, "குழந்தாய்! மிகுந்த ரோஷத்தோடு இவர்களை வதைத்தது போதும். நிரபராதிகளான யட்சர்களைக் கொல்லாதே. இவர்களில் ஒருவனே உன் சகோதரனைக் கொன்றவன். அதற்காகவே அவனுடன் கூட இருந்த ஏராளமானோரைக் கொன்றாய். இது சரியல்ல; பொறுமையுடன் இரு. நீ ஐந்து வயது பாலகனாக இருக்கும்போது சுருசியின் கொடிய வார்த்தைகளைக் கேட்டு மனம் கலங்கி, வனம் சென்று தவம் இயற்றி பகவானிடமிருந்து மூன்று உலகிற்கும் மேலாயிருப்பதான ஒரு மண்டலத்தைப் பெற்றாய். ஆகவே நீ அந்த பகவானையே ஆராதிப்பாயாக! இந்த யட்சர்கள் குபேரனுடைய சகோதரர்கள் ஆவார்கள். ஆகவே அவனை அவமரியாதை செய்த குற்றத்திற்கு நீ ஆளாவாய். ஆகவே அவன் கோபம் கொண்டு உன் குலத்தைப் பாழ் செய்வதற்கு முன், அவனை வணங்கி நல்வார்த்தைகளைப் பேசி அவனது அருளைப் பெறுவாயாக" என்றார்.

தனது பாட்டனாரான ஸ்வாயம்பு மனுவின் இந்தச் சொற்களைக் கேட்டுக் கோபம் தணிந்த துருவன் குபேரனை வணங்கினான். இதனால் மனம் மகிழ்ந்த குபேரன், "நீ யட்சர்களைக் கொன்ற பாவம் தீரப் பெற்றாய். உன் பாட்டனாரின் உபதேசத்தால் அடக்க முடியாத கோபத்தையும் துறந்தாய். ஆகவே உன்னிடத்தில் எனக்கு மகிழ்ச்சியே ஏற்படுகிறது. என்னிடம் என்ன வேண்டுமோ அந்த வரத்தைக் கேள், தருகிறேன்" என்றான்.

குபேரனை நோக்கிய துருவன், "இறைவனிடம் என் மனம் மாறாதிருக்கும்படி அருள் புரிவீர்களாக" என்று வேண்டினான். குபேரனும், "அப்படியே ஆகட்டும்" என்று அருள் செய்தான்.

வரத்தைப் பெற்ற துருவன் தன் பட்டணத்திற்குத் திரும்பி நெடுங்காலம் வாழ்ந்து இறைவன் மீது மாறாத பக்தி பூண்டு அவனைத் துதித்தான்.

ஒரு நாள் ஆகாயத்திலிருந்து விமானம் ஒன்று இறங்கியது. அதிலே துருவன் ஏறினான். அப்போது பூமழை பொழிந்தது. கந்தர்வர்கள் அற்புத கானம் செய்தனர்.

மூன்று உலகங்களையும் சப்த ரிஷிகளையும் தாண்டி விஷ்ணுவின் ஸ்தானத்தை துருவன் அடைந்தான்.

தனக்குத் தானே பிரகாசிக்கும் ஆற்றல் உடையது அந்த ஸ்தானம். அவன் இருக்குமிடம் துருவலோகம் எனப் பெயர் பெற்றது.

ஐந்து வயது பாலகனாக இருந்து திட விரதத்தால் மிக உன்னத பதவியை அடைந்த துருவனின் சரித்திரத்தைக் கேட்பவர்களுக்குப் பணம் பெரும். ஒளி பெருகும். ஆயுள் பெருகும். மங்களம் பொங்கும். மன வருத்தம் போகும். மேன்மை விளையும். இறைவனிடத்தில் பக்தி உண்டாகும். சீலம் முதலிய மேலான குணங்கள் உண்டாகும். சுவர்க்கம் கிடைக்கும். துருவ லோகமும் கிடைக்கும். இவ்வாறு ஸ்ரீமத் பாகவதம் உறுதியான பலன்களைக் கூறுகிறது.

(சிறுவர் புராணக் கதைகள் – மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author