நரியும் கரடியும்

முன்னொரு காலத்தில், விலங்குகளின் ராஜாவான சிங்கத்தைத் தவிர, மற்ற எந்த ஒரு விலங்குக்கும் வால் இல்லை. அதனால் விலங்குகளின் வாழ்க்கை பரிதாபகரமாக இருந்தது. குளிர்காலத்தில் எப்படியோ அவை காலம் தள்ளின. ஆனால், கோடை ஆரம்பமானதும் ஈயும், கொசுவும் அவற்றைப் பாடாய்ப் படுத்தி வைத்தன. வாலில்லாததால் விலங்குகள் அவற்றை விரட்ட முடியாமல் தவித்தன. உண்ணிகளாலும், இரத்த ஈக்களாலும் கடிபட்டுப் பல விலங்குகள் இறந்தன. கூட்டம் கூட்டமாய் வந்து அவை கடிக்கும்போது தற்காத்துக்கொள்ள வழி ஏதும் இல்லாமல் வேதனைப்பட்டன.

விலங்குகளின் அரசனான சிங்கத்துக்கு, விலங்குகளின் நிலைமை தெரிய வந்ததும், அது கஷ்டப்படும் விலங்குகளுக்கு உதவ விரும்பிற்று. அதனால், எல்லா விலங்குகளும் அரண்மனைக்கு வந்து வால் வாங்கிச் செல்லுமாறு உத்தரவிட்டது.

சிங்கத்தின் தூதர்கள் காடுகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று ராஜாவின் கட்டளையைப் பறை அறைந்தும், தண்டோராப் போட்டும் விலங்குகளுக்கு அறிவித்தனர். ஒவ்வொரு மிருகமாகப் பார்த்தும் தெரிவித்தனர். எருது, வளைக்கரடி, நரி, கீரி, முயல், மான், காட்டுப்பன்றி என்று எல்லா விலங்குகளையும் சந்தித்து விட்டனர். கரடி ஒன்றுதான் பாக்கியிருந்தது. எல்லா இடங்களிலும் சென்று அதைத் தேடினர். நீண்ட நேரம் தேடிய பின், முடிவில் கரடி தன் உறைவிடத்தில் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அதை உலுக்கி எழுப்பி சீக்கிரமாய்ப் புறப்பட்டுச் சென்று வால் வாங்கிக் கொள்ளும்படி அதனிடம் சொன்னார்கள்.

ஆனால் கரடி அவசரப்பட்டு யாரும் கண்டது இல்லை. அடிக்கு மேல் அடி வைத்து நடந்து சென்றது. தலையை நீட்டி நீட்டி எங்கிருந்தாவது காற்றில் தேனின் மணம் வீசுகிறதா என்று மூக்கால் உறிஞ்சி மோப்பம் பிடித்தவாறு சென்றது. திடீரென்று, எதிரில் இருந்த மரத்தில் தேனடை இருப்பதைக் கண்டது. அதற்கு நாவில் நீர் ஊறியது. சிறிது நேரம் யோசித்தது.

‘சிங்கத்தின் அரண்மனைக்கு நெடுந்தூரம் போயாக வேண்டும். மேலும், இப்பொழுது எதுவும் சாப்பிடாமல் என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்று தோன்றுகிறது’ என்று தனக்குள் கூறிக் கொண்டது.

அதற்குத் தேனடையை விட்டுச் செல்ல மனமில்லை. மரத்தில் ஏறிப் பார்த்தது. நிறையத் தேன் இருந்ததைக் கண்டு களிப்புற்று, உறுமிக் கொண்டும், கனைத்துக் கொண்டும் தேனடையைச் சுரண்டியெடுத்து வயிறு புடைக்கத் தேனை அள்ளியள்ளிப் பருகியது. இனி வயிற்றில் இடமில்லை என்றளவிற்குப் பருகியது. அப்புறம்தான் அதற்கு அரண்மனைக்குப் போக வேண்டுமே என்ற எண்ணம் வந்தது. அது தன் மேலெங்கும் பார்த்தது. உடம்பெல்லாம் தேனும் மெழுகுமாய்ப் பிசுபிசுவென்று இருந்தது.
இப்படியே ராஜாவின் அரண்மனைக்குள் சென்றால் மற்ற விலங்குகள் கை கொட்டிச் சிரிக்குமே என்று நினைத்த கரடி, ஆற்றுக்குப் போய் நன்றாகக் குளித்தது. பிறகு, முடியை உலர்த்திக்கொண்டு போகலாம் என்று முடிவு செய்து குன்றின் சரிவில் படுத்துக் கொண்டது. வெயில் கதகதப்பாய் இருந்ததால் அப்படியே உறங்கிப் போயிற்று.

இதற்கிடையில் சிங்க ராஜாவின் அரண்மனையை நோக்கி எல்லா மிருகங்களும் போகலாயின. எல்லோருக்கும் முதலாய் நரி அங்கே வந்தது. அரண்மனைக்கு எதிரே மலை போல் வால்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தது. அங்கே நீண்ட வால்கள், குட்டை வால்கள், முடி அடர்ந்தவை, மொட்டையானவை என்று எல்லா வகையான வால்களும் இருந்தன. அரியாசனத்தில் அமர்ந்திருந்த சிங்க ராஜாவின் முன் தலைகுனிந்து வணக்கம் தெரிவித்தது நரி.
"மேன்மை தங்கிய மன்னனே!" என்று அழைத்துப் பின்வருமாறு கூறலாயிற்று. "நான் தங்களுடைய உத்தரவைக் கேட்டவுடன் எல்லோருக்கும் முதலாய் ஓடோடி வந்திருக்கிறேன். ஆகவே, எனக்குப் பிடித்தமான வாலை நானே தேடி எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்" என்றது.

நரி தனக்கு எப்படிப்பட்ட வாலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பது பற்றி சிங்கராஜா சிறிதும் கவலைப்படாமல், "நல்லது! உனக்குப் பிடித்தமானதை எடுத்துக் கொள்!" என்று கூறியது.

தந்திரக்கார நரி, மலை போல் குவிந்திருந்த வால்களையெல்லாம் எடுத்துப் பார்த்து, மிகவும் அழகாகவும், நீளமாகவும், பொசபொசப்பாகவும் இருப்பதைத் தேடி எடுத்துக் கொண்டது. எங்கே மற்ற விலங்குகள் அதற்குப் போட்டியாக வந்துவிடுமோ என்று கலவரமடைந்து வாலை எடுத்துக்கொண்டு அரண்மனையை விட்டு விரைவாக வெளியேறியது.

நரிக்கு பிறகு அணில் அங்கே தாவிக் குதித்து வந்தது. நரியினுடையதைப் போலவே அழகான, ஆனால் சற்றுச் சிறிதான ஒரு வாலை அது எடுத்துக் கொண்டது.

அடுத்ததாக, காட்டு மான் வந்தது. இருப்பதில் நீளமான வாலாய்த் தேர்ந்தெடுத்துக் கொண்டது. உண்ணிகளையும் இரத்த ஈக்களையும் ஓட்ட அதன் நுனியில் தடித்த தூரிகைபோல் ஒன்று இருந்தது. பிறகு வந்த கீரியானது நரி, அணில் ஆகியவற்றைப் போல முடி அடர்ந்த வாலையே தானும் எடுத்துக் கொண்டது. அதைப் பார்த்த வளைக்கரடி தானும் அகலமான, தடித்த வாலை எடுத்துக் கொண்டது.

அதற்குப் பின்னால் வந்த குதிரை, அதிகமாக முடியுள்ள வாலை எடுத்துத் தன் பின்பக்கத்தில் ஒட்டிக் கொண்டு இப்படியும் அப்படியுமாக ஆட்டி, கொசுக்களைத் துரத்த முடிகிறதா என்று பார்த்தது. எல்லாவற்றையும் எளிதில் அடித்து விரட்டலாம் என்று தெரிந்தவுடன், துள்ளித் துள்ளி சந்தோஷமாகக் குதித்தவாறும், கனைத்தவாறும், புல் மேயச் சென்றது.

பிறகு எஞ்சியிருந்தது இரண்டு வால்கள் மட்டுமே. ஒன்று குமிழ் போன்று இருந்தது. இன்னொன்று வெறுமே கயிறு போல நீளமாக இருந்தது. அப்பொழுது யானையும் முயலும் வந்தன.

சிங்கராஜா அவற்றைப் பார்த்து, "நீங்கள் இருவரும், இவ்வளவு கடைசியாக வந்திருக்கிறீர்களே! என்னிடம் இப்பொழுது மீதம் இருப்பவை இந்த இரண்டு வால்கள்தாம்" என்றது.

யானை முயலைப் பார்த்து, "உனக்கு வேண்டியதை நீ எடுத்துக் கொள்" என்று பெருந்தன்மையுடன் கூறியது.

முயலும் சந்தோஷத்துடன் குமிழ் போன்ற வாலை எடுத்துக் கொண்டு, யானையையும் சிங்க ராஜாவையும் பார்த்து, "இது போதும் எனக்கு. சிறிய வால்தான் எனக்கு வேண்டும். ஓநாய் அல்லது நரி என்னைத் துரத்திக் கொண்டு வரும்போது, அவற்றிடமிருந்து நான் ஓட இந்த வால் எனக்குத் தடையாக இருக்காது" என்று கூறி, இருவருக்கும் நன்றி தெரிவித்து வீட்டிற்குச் சென்றது. மிஞ்சியதை எடுத்துக்கொண்டு யானையும் சென்றது.

சிங்க ராஜாவும் எல்லா வால்களையும் கொடுத்து முடித்தவுடன் உள்ளே சென்று விட்டது.

மாலை நேரம் கூட நெருங்கிவிட்டது. கரடிக்கு அப்பொழுதுதான் விழிப்பு வந்தது. வால் வாங்கச் செல்ல வேண்டும் என்ற நினைவும் வந்தது. வானத்தைப் பார்த்தது. தான் நெடுநேரம் தூங்கி விட்டதை உணர்ந்து உடனே அடித்துப் பிடித்துக் கொண்டு சிங்க ராஜா இருப்பிடத்திற்கு ஓடியது. கை கால்களில் இடித்துக் கொண்டும், மரங்களில் மோதிக் கீழே விழுந்தும் ஓடி அது சிங்க ராஜாவின் அரண்மனையை அடையும்போது லேசாக இருட்டத் தொடங்கி விட்டது.

–வாலின் நுனி அடுத்த இதழில்…

About The Author