பாதாள லோகத்தில் மாயசீலன் – 6

தன் நண்பர்களைத் துன்புறுத்திய மாயக் குறளிக் கிழவனைத் தேடிக்கொண்டு தன் தோழர்களுடன் புறப்பட்டான் மாயசீலன்.

கிழவன் மரத்தை இழுத்துக்கொண்டு போய், வழி நெடுகத் தடம் விட்டுச் சென்றிருந்தான். நண்பர்கள் நால்வரும், அந்தத் தடத்தைப் பின் தொடர்ந்து சென்றனர். நெடுந்தூரம் நடந்து ஆழமான ஒரு குழியை வந்தடைந்தார்கள். அதன் அடி கண்ணுக்குத் தெரியாதபடி அவ்வளவு ஆழமாய் இருந்தது.
"தடம் இந்தக் குழியுடன் முடிந்து விடுகிறது! ஆக, கிழவன் கண்டிப்பாக இதற்குள்தான் இருப்பான். மலைச்சாமி! நீ குழிக்குள் இறங்கு" என்றான் மாயசீலன்.

மலைச்சாமி உடனே "ஐயோ! நான் இறங்க மாட்டேன். பச்சையப்பா! நீ இறங்கு" என்றான். பச்சையப்பாவும் பின்வாங்கினான். மாடசாமியும் தயங்கினான்.

"சரி! நானே இறங்குகிறேன். முதலில் ஒரு கயிறு தயாரித்துக் கொள்வோம்" என்றான் மாயசீலன். செடி கொடிகளைக் கொண்டு ஒரு நீளமான கயிற்றை அவர்கள் தயாரித்துக் கொண்டார்கள். மாயசீலன் கயிற்றின் ஒரு முனையைத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டான். மற்ற மூவரையும் பார்த்து, "என்னைக் குழிக்குள் இறக்கி விடுங்கள்" என்றான். மூவருமாய்ச் சேர்ந்து மெல்ல அவனைக் குழிக்குள் இறக்கி விட்டனர்.

நெடு நேரமாகியும் அவன் அடிமட்டத்துக்குப் போய்ச் சேரவில்லை. பாதாள உலகத்துக்குப் போவது மாதிரி அவ்வளவு ஆழமாய் அந்தக் குழி கீழே கீழே கீழே போய்க் கொண்டேயிருந்தது. ஒருவழியாய், அடிமட்டத்துக்கு இறக்கி விட்டார்கள். ஆனால், என்ன அதிசயம்! குழியின் முடிவில் ஓர் ஊரே இருப்பதாகச் சொல்லக்கூடிய அளவுக்குப் பெரிய இடம் இருந்தது. மாயசீலன் முன் ஒரு பெரிய மாளிகை காணப்பட்டது. மாளிகையினுள் சென்று பார்த்தான் மாயசீலன். அங்கே யாவும் பளிச்சிட்டுப் பிரகாசித்தன. பொன்னையும், இரத்தினக் கற்களையும் இழைத்துக் கட்டிய மாளிகை அது. ஒவ்வொர் அறையாய் வியப்புடன் பார்த்துக் கொண்டு அவன் உள்ளே சுற்றி வருகையில், திடுமென ஓர் இளம்பெண் எங்கிருந்தோ ஓடி வந்தாள். அவளுடைய அழகைச் சித்தரிக்க வல்ல கவிஞனோ, ஓவியனோ இவ்வுலகில் இல்லை எனும் அளவிற்கு அவள் அழகுச் சிலையாய் இருந்தாள். அவனைக் கண்டு அவள் பதறியபடி, "வீரமிக்க இளைஞனே! நீ ஏன் இங்கு வந்தாய்?" என்று வினவினாள்.

"நீண்ட தாடியுடைய சித்திரக்குள்ளக் கிழவன் ஒருவனைத் தேடிக் கொண்டு நான் வந்திருக்கிறேன்" என்று மாயசீலன் பதிலளித்தான்.

"ஐயோ! அந்தக் கிழவன் இங்குதான் இருக்கிறான். மரத்திலிருந்து தன் தாடியை வெளியே இழுக்க முயன்று கொண்டிருக்கிறான்" என்றாள் அவள். "நீ அவனிடம் போகாதே! உன்னைக் கொன்றுவிடுவான். எத்தனையோ பேரைக் கொன்றிருக்கும் கொடியவன் அவன்" என்று சொன்னாள்.
அதற்கு மாயசீலன், "பயப்படாதே! என்னை அவனால் கொல்ல முடியாது. அவன் தாடியைப் பிடித்து மரத்தில் மாட்டியதே நான்தான்" என்றான். பிறகு, "ஆமாம், நீ யார்? இங்கே என்ன செய்கிறாய்" என்று கேட்டான்.

அதற்கு அவள், "நான் ஓர் இளவரசி. இந்தச் சித்திரக்குள்ளக் கிழவன் என்னை அரண்மனையிலிருந்து தூக்கி வந்து இங்கே அடைத்து வைத்திருக்கிறான்" என்றாள்.

"சரி! இனி நீ அஞ்ச வேண்டாம். உன்னை இங்கிருந்து நான் விடுவிக்கிறேன். முதலில், அந்தக் கிழவன் எங்கிருக்கிறான் என்பதைக் காட்டு!" என்றான் மாயசீலன்.

இளவரசி மாயசீலனை அந்தக் கிழவனிடம் அழைத்துச் சென்றாள். அங்கே பார்த்தபோது அவள் கூறியது உண்மைதான் என்று தெரிந்தது. மரத்திலிருந்து எப்படியோ ஒருவாறு தாடியை வெளியே எடுத்துவிட்டுக் கிழவன் அங்கே களைப்புடன் உட்கார்ந்திருந்தான். மாயசீலனைப் பார்த்ததும் அவன் கோபமாய்க் கூச்சலிட்டான்.

"இங்கே ஏன் வந்திருக்கிறாய்? போர் புரியவா? சமாதானம் செய்து கொள்ளவா?" என்று கேட்டான்.
அதற்கு மாயசீலன், "உன்னுடன் சமாதானம் பேச நான் வரவில்லை. போர் புரியலாம், எழுந்து வா!" என்றான்.

இருவரும் வாட்போர் புரிந்தனர். நெடுநேரம் பயங்கரப் போர் நடைபெற்றது. இறுதியில் மாயசீலனின் வாள் கிழவனுடைய நெஞ்சில் குத்திக் கொன்றது.

பிறகு, மாயசீலனும் இளவரசியும் அங்கிருந்த பொன்னையும், இரத்தினங்களையும் அள்ளிச் மூன்று சாக்குகளில் நிரப்பிக் கொண்டனர். பின்னர் இருவரும், மாயசீலன் இறங்கிய குழியின் அடியில் வந்து சேர்ந்தனர்.

கீழேயிருந்து மாயசீலன் பெருங்குரலெடுத்துக் கூவித் தன் நண்பர்களை அழைத்தான்.
"என்ன நண்பர்களே! மேலே இருக்கிறீர்களா நீங்கள்" என்று கேட்டான்.

அவ்வளவு நேரமும் மாயசீலனுக்காகக் காத்திருந்து காத்திருந்து களைத்துப் போன நண்பர்கள், அவன் குரல் கேட்டதும், "இங்கேதான் இருக்கிறோம் நண்பா!" மகிழ்ச்சியுடனும் பரபரப்புடனும் பதில் குரல் கொடுத்தனர்.

உடனே மாயசீலன், மூட்டைகளில் ஒன்றைக் கயிற்றின் நுனியில் கட்டி, அதை மேலே இழுக்குமாறு கூறும் வகையில் கயிற்றை ஆட்டினான். கூடவே, "இது உங்களுக்கு" என்றும் கூறினான்.

மூட்டையை இழுத்து மேலே எடுத்த அவர்கள் ஆவலுடன் அதைப் பிரித்துப் பார்த்து, அதில் இருந்த பொன்னையும் மணியையும் கண்டு திக்குமுக்காடிப் போயனர். பின், மீண்டும் கயிற்றைக் குழிக்குள் விட்டனர். மாயசீலன் இரண்டாவது மூட்டையைக் கயிற்று நுனியில் கட்டினான். "இதுவும் உங்களுடையதுதான்" என்று கத்தினான். மூன்றாவது மூட்டையையும் அவர்களுக்கே தந்தான். சித்திரக்குள்ளக் கிழவனிடமிருந்து எடுத்து வந்திருந்த செல்வம் அனைத்தையும் அவர்களுக்கே அளித்துவிட்டான். நண்பர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

பிறகு, இளவரசியின் இடுப்பில் கயிற்றினால் கட்டினான் மாயசீலன். தன் நண்பர்களிடம், "இப்போது வருவது என்னுடையது" என்று கூவினான்.

அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான்.

அப்பொழுது நண்பர்களின் மனம் பேதலித்தது. உயிர் நண்பர்களாக இருந்த மூவரும் இளவரசியைப் பார்த்ததும் மதிமயங்கிப் போயினர். தமக்குள் குசுகுசுவெனப் பேசிக்கொண்டனர்.

"நாம் ஏன் அவனை மேலே இழுக்க வேண்டும்? அவன் வந்து விட்டால், இளவரசி அவனைத்தான் மணந்து கொள்வாள். பெரும் பலம் கொண்ட அவனோடு நாம் போட்டியிடவும் முடியாது. அவன் மேலே வராமல் போனால், நம்மில் யாராவது ஒருவர் அரசிளங்குமரியை மணந்து கொள்ளலாம். அது யார் என்பதை நாம் மூவரும் பிறகு மோதிப் பார்த்து முடிவு செய்வோம்" என்ற தீர்மானத்துக்கு வந்தனர்.

அதே நேரம், "மாயசீலனைக் குழிக்குள்ளேயே விட்டுவிட்டால், ஒருவேளை அவன் தப்பி வந்தாலும் வந்துவிடுவான். எனவே, பாதி தூரம் அவனை இழுத்த பின் கயிற்றை விட்டுவிடுவோம். அவன் கீழே விழுந்து சாகட்டும்" என்றும் அவர்கள் திட்டம் தீட்டினர்.

-தொடரும்…

About The Author