பாதாள லோகத்தில் மாயசீலன் – 1

முன்னொரு காலத்தில் காந்தபுரி நாட்டில் வசித்து வந்த ஒரு விவசாயிக்கு ஆறு மகன்களும் லீலாவதி என்ற ஒரு மகளும் இருந்தனர்.

சகோதரர்கள் ஆறு பேரும் ஒரு நாள் வழக்கம் போல் வயலை உழுவதற்காகப் புறப்பட்டனர். அப்போது தாயிடம் அவர்கள் மதிய உணவைத் தங்கையிடம் கொடுத்து அனுப்பும்படி கூறினர்.
அதற்கு லீலாவதி, "அண்ணன்களே! நீங்கள் இன்று எந்த இடத்தில் இருப்பீர்கள் என்று சொல்லிவிட்டுப் போங்கள். இல்லையென்றால், நான் உங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்க வேண்டும்" என்றாள்.

"சரி கவலைப்படாதே! குடிசையிலிருந்து நாங்கள் உழப்போகும் வயல் வரை கோடு கிழித்துக் கொண்டே செல்கிறோம். நீ அந்தக் கோட்டு வழியே நடந்து வந்தால் எளிதில் எங்களை வந்தடைந்து விடலாம்" என்று அவர்கள் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

இதை ஒரு பூதம் கேட்டுக் கொண்டே இருந்தது. அதனுடைய வீடு அவர்கள் அன்று வேலைக்குச் சென்ற வயலுக்குப் பக்கத்தில் உள்ள காட்டில்தான் இருந்தது. உடனே அது, சகோதரர்கள் போட்டுச் சென்ற கோட்டைத் தன் வீட்டின் வாயிலுக்கு வரும்படி மாற்றி வரைந்தது.

லீலாவதியும், தன் சகோதரர்களுக்காகத் தாய் கொடுத்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு, அந்தக் கோட்டின் வழியே நடந்து, நேராக அந்த பூதத்தின் வீட்டு வாயிலுக்கு வந்து சேர்ந்தாள். உடனே பூதம் அவளைப் பிடித்துக்கொண்டு விட்டது.

மாலையில் ஆறு பேரும் வீட்டிற்குத் திரும்பி வந்தனர்.

தங்கள் தாயைப் பார்த்து, "அம்மா! பகல் முழுவதும் ஓயாமல் உழுது கொண்டிருந்தோமே! நீ ஏன் சாப்பிட எதுவும் கொடுத்தனுப்பவில்லை?" என்று கேட்டனர்.

அதைக் கேட்ட தாய் திடுக்கிட்டாள். "நான் உங்களுக்குச் சாப்பாட்டை அப்பொழுதே லீலாவதியிடம் கொடுத்தனுப்பினேனே! அவள் வரவில்லையா? அவள் உங்களுடன் சேர்ந்து வீட்டுக்குத் திரும்பி வருவாள் என்றல்லவா இருந்தேன்! வழி தவறி வேறு எங்காவது போயிருப்பாளோ? ஐயோ! இப்பொழுது என்ன செய்வது?" என்று புலம்பத் தொடங்கினாள்.

சகோதரர்கள் ஆறு பேரும் அவளைச் சமாதானப்படுத்தினர்.

"கவலைப்படாதே அம்மா! நாங்கள் போய் அவளைத் தேடி அழைத்து வருகிறோம்" என்று கூறிவிட்டுக் கிளம்பினர்.

அவர்கள் சந்தேகம் எடுத்த எடுப்பிலேயே தாங்கள் கிழித்த கோட்டின் மீதுதான் ஏற்பட்டது. அதை முதலில் சரி பார்க்க முனைந்தனர். கோட்டின் வழியே சென்ற அவர்கள் பூதத்தின் வீட்டு வாயிலை அடைந்தனர். வீட்டுக்குள் மெதுவாகச் சென்று பார்த்தபோது அங்கே லீலாவதி இருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். "லீலாவதி!" என்று அழைத்தனர்.

அதைக் கேட்டதும், திரும்பிப் பார்த்த லீலாவதி தன் ஆறு அண்ணன்களும் அங்கே நிற்பதைப் பார்த்துப் பதறினாள்.

"நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? பூதம் வந்துவிடுமே! உங்களை நான் எங்கே மறைத்து வைப்பேன்? அது உங்களைக் கொன்றுவிடுமே" என்று அழத் தொடங்கினாள்.

அதே சமயத்தில் பூதம் அங்கே தோன்றி, தன் மூக்கை அப்படியும் இப்படியும் திருப்பி முகர்ந்து பார்த்தது.

பிறகு, "மனித வாசனை மூக்கைத் துளைக்கிறதே! பல பேர் இருப்பதாகத் தெரிகிறதே" என்று கூவிற்று. அப்பொழுதுதான் புதியவர்கள் அங்கே இருப்பதைக் கவனித்தது.

"இளைஞர்களே! நீங்கள் என்னுடன் போராடப் போகிறீர்களா அல்லது அடி பணிந்து கிடக்கிறீர்களா" என்று பூதம் கேட்டது.

"போராடத்தான் வந்திருக்கிறோம். எங்கள் அருமைத் தங்கையை எப்படியும் மீட்டுச் செல்வோம்" என்று தீரத்துடன் பதிலளித்தனர் சகோதரர்கள்.

"சரி! அப்படியானால், வெளியே உள்ள போர்க் களத்துக்குப் போவோம், வாருங்கள்!" என்றது பூதம். சகோதரர்களும் பூதத்துடன் போர்க் களத்திற்குச் சென்றனர். ஆனால், போர் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஒரே அடியில் பூதம் அவர்களைத் தரையினுள் அழுத்தி விட்டது. பிறகு, பாதி உயிர் போன நிலையில் அவர்களை வெளியே இழுத்துப் பாதாள அறைக்குள் தள்ளிற்று.

மகன்களும், மகளும் வருவார்கள் என்று விவசாயியும் அவன் மனைவியும் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் திரும்பவேயில்லை.

யாரும் இல்லாததால் விவசாயியின் மனைவி தானே விறகு வெட்டக் காட்டிற்குச் சென்றாள். அப்பொழுது அவ்வழியே வந்த முனிவர் ஒருவர், அவள் கண்ணீருடன் விறகு வெட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் காரணம் என்ன என்று விசாரித்தார். தனக்கு ஏழு குழந்தைகள் இருந்தும், தாங்கள் அனாதையாக நிற்பதாகக் கூறித் தங்கள் கதை முழுவதும் அவரிடம் கூறினாள் லீலாவதியின் தாய். அதைக் கேட்ட முனிவர் அவளிடம் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து, அதைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்று ஆசி கூறிச் சென்றார்.

அவர் கூறியது போலவே, தக்க காலத்தில் லீலாவதியின் பெற்றோருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு ‘மாயசீலன்’ என்று பெயரிட்டு அவர்கள் அன்போடு வளர்க்கத் தொடங்கினர்.

–தொடரும்…

About The Author