பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் -(4.1)

சொந்தக் கையிலே சூடு போட்டுக் கொண்டவர்

அவனோ மிகவும் சிறிய பையன். அவன் கையிலிருந்த சிலந்தியோ மிகவும் பெரிதாயிருந்தது. ஏதேதோ மருந்துகள் போட்டுப் பார்த்தார்கள்; யார் யாரோ வைத்தியம் செய்து பார்த்தார்கள். சிலந்தி அமுங்கவுமில்லை; பழுத்து உடையவுமில்லை.

சிலந்தி அப்படியே இருந்தாலும் குறைவில்லை; நாளுக்கு நாள் அது  பருத்துக்   கொண்டே வந்தது. வலியும் அதிகரித்தது. ‘விண், விண்’ என்று தெறித்தது. பாவம், அந்தப் பையனால் வலியைப் பொறுக்க முடியவில்லை.

அவன் தைரியமான பையன்தான். ஆனாலும், பல்லைக் கடித்துக் கொண்டு எத்தனை நாளைக்குத்தான் இருக்க முடியும்? ஓடி ஆடி விளையாட முடியவில்லை; இரவில் கொஞ்ச நேரம் கூடத் தூங்க முடியவில்லை. எந்த நேரமும் வலி இருந்து கொண்டேயிருந்தது.

ஒரு நாள், அந்த வீதியில் இருந்த பெரியவர் ஒருவர் அந்தப் பையன் வீட்டுக்கு வந்தார். அவர் பையன் படும் துன்பத்தைக் கண்டார். "சூடு போட்டால், இது குணமாகி விடும்" என்று அவர் கூறினார்.

உடனே அப்பையன், அம்மாவைப் பார்த்து, "அம்மா, தினந்தோறும் என்னால் இப்படித் துன்பப்பட முடியாது. சூடு போட்டால் குணமாகிவிடும் என்கிறார்களே, சூடு போடம்மா" என்று கெஞ்சினான்.

"ஐயையோ! சூடு போட்டால் சுகமாகவா இருக்கும்? அப்போது என்ன வலி வலிக்கும்! வேண்டாம் கண்ணே! வேறு ஏதாவது மருந்து போடலாம்" என்றாள் அம்மா.

"போம்மா! நீதான் எத்தனையோ மருந்துகள் போட்டுப் பார்த்து விட்டாயே! இதற்குச் சூடுதான் போட வேண்டும். சூடு போடும்போது எவ்வளவு வலி இருந்தாலும் பரவாயில்லை. பிறகு, சுகமாக இருக்குமல்லவா?" என்று பிடிவாதமாகக் கூறினான்.

அம்மா இணங்கவில்லை. ‘சரி, அம்மாவிடம் சொன்னால் இப்படித்தான் யோசிப்பாள். நாமே இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று எண்ணினான் அவன்.

நேராக அந்த ஊரிலிருந்த ஒரு மருத்துவரிடம் சென்றான். அவரிடம் தன் துன்பத்தை எடுத்துரைத்துச் சூடு போடும்படி வேண்டினான்.

மருத்துவர் இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து நெருப்பிலே வைத்தார். அது நன்றாகக் காய்ந்தது. கறுப்புக் கம்பி சூடு ஏறிச் சிவப்புக் கம்பியாக மாறியது. அதை எடுத்தார் மருத்துவர்; பையனின் கைக்கு அருகில் கொண்டு போனார். அப்போது அவர் கைகள் நடுநடுங்கின. ‘இவனோ சிறு பையன்; சூடு போட்டால் தாங்குவானா? துடிதுடித்து அலறுவானே!’ என்று நினைத்தார். உடனே, அவர் தயங்கினார். பிறகு என்ன நினைத்தாரோ, காய வைத்த கம்பியைப் பேசாமல் கீழே போட்டுவிட்டார்.
இது அந்தப் பையனுக்கு ஏமாற்றமாக இருந்தது. உடனே அவன் அந்த மருத்துவரை எதுவுமே கேட்காமல் ‘சட்’டென்று கீழே குனிந்தான். ‘தக தக’ என்று ஒளி வீசிக்கொண்டு கிடந்த கம்பியை எடுத்தான். எடுத்துத் தன் கையிலிருந்த சிலந்தியில் வைத்து அழுத்தினான்! உடனே, ‘சடசட’ என்ற சத்தம் வந்தது. சிலந்தியிலிருந்த கெட்ட நாற்றமும் வெளியேறியது.

பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும், "ஐயையோ!" என்று அலறினர். ஆனால், அந்தப் பையனோ சிறிதும் அசையவில்லை; ‘ஆய் ! ஊய் !’ என்று அலறவுமில்லை; ‘உஸ்’ என்று கூடச் சத்தம் போடவில்லை! அவனுடைய தைரியத்தையும், பொறுமையையும் கண்டு அங்கிருந்தோர் வியந்தனர்.

ஆனால், இரும்புக் கம்பியால் சூடு போட்டுக்கொண்ட அதே பையன் ஒரு காலத்தில் அஞ்சா நெஞ்சம் படைத்த ‘இரும்பு மனித’ராகவும், இடையூறுகள் எத்தனை வந்தாலும் எடுத்த காரியத்தை விடாது முடிக்கும் ஒரு வெற்றி வீரராகவும் திகழ்வான் என்று அப்போது அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!

இப்போது அந்தப் பையன் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சர்தார் வல்லபாய் படேல்தான் அந்தப் பையன்!

* * *

படேல் அப்போது நாடியட் என்ற நகரத்திலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். அவருடைய வகுப்பு ஆசிரியர் படிப்புச் சொல்லிக் கொடுப்பதுடன் நோட்டுப் புத்தகம், பென்சில் முதலியவற்றையும் பையன்களிடம் விற்று வந்தார். சம்பளம் போதாததால் இப்படி வியாபாரம் செய்தாவது குடும்பத்தை நடத்தலாம் என்று அவர் நினைத்தார் போலும். இதில் தவறில்லை. ஆனால், அவர் மாணவர்களிடம், "பையன்களா! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில்தான் நோட்டுப் புத்தகம், பென்சில் முதலியவற்றை வாங்க வேண்டும். வேறிடத்தில் வாங்கக் கூடாது" என்று உத்தரவும் போட்டுவிட்டார்!

ஒருநாள் படேல் கடை வீதியில் ஒரு நோட்டுப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வந்தார். அவர் வைத்திருந்த நோட்டை ஆசிரியர் பார்த்துவிட்டார். அதைப் பார்த்ததும் அது எங்கோ ஒரு கடையில் வாங்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிந்து கொண்டார். உடனே அவர் படேலின் அருகிலே வந்தார். நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். பிறகு, "அடே, நீ இதை எங்கே வாங்கினாய்?" என்று கோபமாய்க் கேட்டார்.

"கடையிலே வாங்கினேன், ஐயா" என்று அமைதியாகப் பதிலளித்தார் படேல்.

"ஏன் கடையில் வாங்கினாய்? என்னிடத்தில்தான் வாங்க வேண்டும் என்று கூறியிருக்கிறேனல்லவா?  நீ சட்டத்தை மீறலாமா?"

"சட்டமா! அது என்ன?"

"நான் உன் ஆசிரியர். என்னை எதிர்த்தா பேசுகிறாய்?"

"நீங்கள் எங்கள் ஆசிரியர்தான், சந்தேகமில்லை. ஆனால், நாங்கள் உங்களிடம் பாடம் படிக்கத்தான் வருகிறோம்; வியாபாரம் செய்ய வரவில்லை."

"அடே, அதிகப் பிரசங்கி! போதும். நிறுத்து. இன்னொரு தடவை இப்படிச் செய்தால், உடனே உன்னைப் பள்ளிக்கூடத்தை விட்டுத் துரத்தி விடுவேன்!"

"அவ்வளவு சிரமம் உங்களுக்கு வேண்டாம், ஐயா! நாளையிலிருந்து நானே இங்கு வருவதை நிறுத்திக் கொள்கிறேன்" என்று தலைநிமிர்ந்து கூறினார் படேல்.

ஆசிரியர் அசந்து போய்விட்டார்! பேசாமல் இடத்தில் போய் உட்கார்ந்தார்.

மறுநாள், படேல் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. அவர் மட்டும் வராதிருந்தால் அந்த ஆசிரியர் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஆனால், அந்த வகுப்புப் பிள்ளைகளில் ஒருவர் கூட வரவில்லை. ஆம், எல்லோரும் படேல் செய்ததே நியாயம் என்று கருதி அவர் பக்கம் சேர்ந்து விட்டனர்.

இறுதியில், அந்த நகரிலுள்ள ஒரு பெரியவர் இந்த வழக்கில் தலையிட வேண்டி வந்தது. படேலையும், அந்த ஆசிரியரையும் அவர் சமாதானப்படுத்தி வைத்தார்.

–நிகழ்ச்சிகள் தொடரும்…

படம்: நன்றி தமிழ் இணையக் கல்விக்கழகம்

About The Author