பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் (1.1)

புலியைத் தேடிப் புறப்பட்டவர்!

அந்தத் தெருவில் ஒரு நாட்டு வைத்தியரது வீடு இருந்தது. ஒருநாள், அந்த வீட்டின் எதிரிலே பெரிய கூட்டம் ஒன்று கூடி நின்றது.

நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அக்கூட்டத்தைப் பார்த்தான். உடனே அவனும் அங்கே ஓடினான்; கூட்டத்திற்குள் நெருக்கிக்கொண்டு நுழைந்தான்; முன்னால் சென்று பார்த்தான்.

தரையிலே ஒரு மனிதன் கிடத்தப்பட்டிருந்தான். அவன் உடல் முழுவதும் பலத்த காயங்கள்! அந்தக் காயங்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நாட்டு வைத்தியர் அவனுக்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.

"என்ன விஷயம்? அவன் யார்? ஏன் அவர் உடம்பிலிருந்து இரத்தம் வழிகிறது?" என்று அந்தச் சிறுவன் பக்கத்திலிருந்த ஒருவரைத் திகிலுடன் கேட்டான்.

அதற்கு அவர், "தம்பி, ஊருக்குக் கோடியில் இருக்கிறதே கரும்புத் தோட்டம், அங்கே இந்த மனிதன் போனானாம்; அப்போது, ஒரு புலி வந்து இவன் மீது பாய்ந்ததாம்! அதன் பற்களும் நகங்களும் இவனைப் படுகாயப்படுத்தி விட்டனவாம்!" என்றார்.

“பாவம்” என்று கூறிக்கொண்டே அந்த மனிதனிடம் அனுதாபம் காட்டினான் சிறுவன்.

இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஒருநாள் அந்தச் சிறுவன், வீட்டில் ஏதோ குறும்பு செய்து விட்டான். அதற்காக அவன் அம்மா கோபம் கொண்டு சில கடுமையான வார்த்தைகளைக் கூறி விட்டாள். உடனே, அவனுக்கு அம்மா மீது கோபம் உண்டாகிவிட்டது.

"என்னைப் பார்த்து அம்மா எவ்வளவு கோபமாகப் பேசினாள்! வரட்டும், இதே அம்மா என்னைப் பார்த்து அழும்படி செய்கிறேன்!" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

முன்னே ஒருவரைப் புலி கடித்ததே, அந்தச் சம்பவம் அப்போது அவனுடைய ஞாபகத்துக்கு வந்தது. உடனே, "சரி, நாம் இப்போதே இங்கிருந்து கிளம்ப வேண்டும்; நேராகக் கரும்புத் தோட்டத்துக்குச் செல்ல வேண்டும்; அங்கே, புலி நிற்கும். புலியிடம் சென்று, ‘புலியே, உன் கூர்மையான பற்களால் என்னைக் கடி; உன் கத்தி போன்ற நகங்களால் என் உடலைக் கிழி’ என்று கூற வேண்டும். உடனே, புலி நம் மீது பாயும்; நன்றாகக் காயப்படுத்தும். இரத்தம் வழியும்! நான் வீட்டுக்குக் காயங்களுடன் கொண்டுவரப்படுவேன். அப்போது, என் அம்மா என்னைப் பார்ப்பாள். பார்த்ததும் என்ன செய்வாள்? என்ன சொல்வாள்? ‘ஆ! என் அருமை மகனே! என் கண்மணியே!’ என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டே கதறுவாள். அத்துடன், ‘என் செல்வ மகனே, உன்னை நான் தெரியாமல் திட்டிவிட்டேன்; மன்னித்து விடு. என் கண்ணே’ என்று கெஞ்சுவாள். ஆகையால், இப்போதே நான் புறப்படுகிறேன். நேராகக் கரும்புத் தோட்டத்துக்குப் போகிறேன்" என்று தீர்மானித்தான். தீர்மானித்தபடி உடனே கிளம்பிவிட்டான்; கரும்புத் தோட்டத்தை நோக்கி விரைந்து நடந்தான்.

தோட்டத்தை நெருங்கும் சமயம் காற்று பலமாக வீசியது. ‘விர்ர்… ! விர்ர்… !’ என்று காற்று வீசும் சப்தத்தைக் கேட்டதும், அந்தப் பையன் மனத்தில் அச்சம் ஏற்பட்டது; சுற்றுமுற்றும் பார்த்தான். மக்கள் நடமாட்டமே இல்லை. பயம் அதிகமாகிவிட்டது. அதே சமயத்தில் எதிரே புலி வருவது போலவும், அது தன் வாயைப் பிளந்து அப்படியே அவனைக் கடித்து விழுங்கி விடுவது போலவும் அவனுக்குத் தோன்றியது.

அவ்வளவுதான்; "ஐயோ! புலி! புலி!" என்று கதறிக்கொண்டே வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்! மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க, வீட்டை அடைந்தான்; அம்மாவிடம் நடந்ததைக் கூறி அழுதான். அம்மா அவனுக்கு ஆறுதல் கூறித் தேற்றினாள்.

‘ஒரு காரியத்தை நினைப்பது எளிது; ஆனால், அதைச் செய்து முடிப்பது எளிதன்று’ என்பதை அப்போதுதான் அந்தச் சிறுவன் உணர்ந்தான்.

–நிகழ்ச்சிகள் தொடரும்…

படம்: நன்றி தமிழ் இணையக் கல்விக்கழகம்.

About The Author