மந்திரச் சாதக்கிண்ணம் (2)

லான் துவாவும் ஸ்வா ஜோவ்வும் சிரித்தனர். "புத்தகங்களா? அதைச் சாப்பிடவும் முடியாது. அவற்றை வைத்து வேறு எதையும் வாங்கவும் முடியாது. புத்தகங்களில் சொற்கள் தவிர வேறு என்ன் இருக்கும்?", என்றனர்.

கோவ் சர் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து வாசித்தான். பள்ளிக் கூடத்துக்குப் போய்க் கொண்டும் இருந்தான். கடையில் வேலையையும் விடவில்லை. லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரும் விளையாடி, உண்டு மகிழ்ந்து சோம்பினர். எல்லாத் தங்கத்தையும் செலவு செய்து அழித்தனர்.

மூவருக்கும் பதினேழு வயதாகியிருந்தது. மறுபடியும் சாதக் கிண்ணத்தின் சக்தியைப் பயன்படுத்திடும் முறை வந்தது. அதற்காக லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரும் கோவ் சர்ரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

லான் துவா பேராசையுடன், "நான் இருக்கும் வீட்டுக்கு பதிலாக ஒரு மாளிகை வேண்டும். அதில் ஓர் அறை நிறைய தங்கம், கீழ்ப்படியும் அழகிய மனைவி, பலமும் ஆரோக்கியமும் கொண்ட மகன்களும், கிராமத்தின் அதிபுத்திசாலி கவர்னர் எனும் எனக்கு உயரிய அந்தஸ்தும்", என்றான்.

அதன் பிறகு, ஸ்வா ஜோவ்வும் பேராசையுடன், "எனக்கும் நான் இருக்கும் வீட்டுக்கு பதிலாக ஒரு மாளிகை வேண்டும். அதில் இரு அறைகள் நிறைய தங்கம், லான் துவாவின் மனைவியை விட சிறப்பாகக் கீழ்ப்படியும் மிக அழகிய மனைவி, பலமும் ஆரோக்கியமும் கொண்ட மகன்களும், கிராமத்தின் மிகப் பெரிய வியாபாரி எனும் உயரிய அந்தஸ்தும்", என்றான்.

"இப்போது உன் முறை கோவ் சர். உனக்கு என்ன வரம் வேண்டும்?"

"நான் ஏற்கனவே படித்து முடித்த நூல்களின் இடத்தில் ஏராளமான வேறு புதிய நூல்கள் வேண்டும்", என்றான் கோவ் சர் தயங்காமல்.

லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரும் சிரித்தனர். "எப்ப தாண்டா நீ புத்திசாலி ஆவாய்?"

மூன்று பேரின் ஆசைகளையும் சாதக் கிண்ணம் நிறைவேற்றியது. லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரும் புது வாழ்க்கையை மிகவும் விரும்பினர். கோவ் சர் முன்பெப்போதும் இல்லாத அளவில் வாசித்து, படித்து கடுமையாக உழைத்தான்.

அவனுக்கு இருபதாவது வயதில் அவனுக்கு ஒரு ஆசிரியர் பணி கிடைத்தது. அவன் கடை முதலாளியின் மகளையே திருமணமும் செய்து கொண்டான்.

மறுபடியும் சாதக் கிண்ணத்தின் சக்தியைப் பயன் படுத்திடும் மூவரது நான்காவது சந்தர்ப்பம் வந்தது. அதற்காக லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரும் கோவ் சர்ரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் ஆகியோருக்கு இரண்டிரண்டு மகன்கள் இருந்தன.

"கவனமாக வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்", என்றான் கோவ் சர்.

"இந்த சாதக் கிண்ணத்தை நானே எனக்கு மட்டுமே வைத்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். எனக்கு மட்டும்", என்றான் லான் துவா.

"இல்லை! அது எனக்கு மட்டுமே மூன்று வரங்களைக் கொடுக்கும். எனக்கு மட்டும்", என்றான் ஸ்வா ஜோவ். சொல்லிக் கொண்டே கையை நீட்டி சாதக் கிண்ணத்தைப் பற்றினான்.

"நான் தான் முதலில் வரம் கேட்டேன்", என்று லான் துவா ஸ்வா ஜோவ்வுடன் போட்டி போட்டு சாதக் கிண்ணத்தை இழுத்தான்.

கி-ளி-ங்! சாதக் கிண்ணம் தரையின் விழுந்தது. சுக்கு நூறாக உடைந்து விட்டது.

"என்ன செஞ்சுட்டீங்க?", கோவ் சர் கத்தினான். "ஐயோ! என்னால் பார்க்க முடியவில்லையே!"

ஒன்பது வருடங்களுக்கு முன்பு அவனுக்கு பார்வை கொடுத்த வேகத்திலேயே சாதக் கிண்ணம் கோவ் சர்ரின் பார்வையைப் பறித்து விட்டது. எல்லா நூல்களும் மறைந்து போயின.

லான் துவாவும், ஸ்வா ஜோவ்வும் ஓடிச் சென்று வெளியில் பார்த்தார்கள். மாளிகைகள் இருந்த இடத்தில் களையும் காட்டுப் புதரும் மண்டியிருந்தன. அவர்களின் அழகிய மனைவியரும் மகன்களும் மறைந்து போயிருந்தனர். ஒரு துண்டு தங்கம் கூட இல்லை. லான் துவா மற்றும் ஸ்வா ஜோவ் இருவரும் தங்களின் அந்தஸ்தையும் இழந்திருந்தனர். சமூகத்தில் அவர்களின் இடம் ஒரு சாதாரணனின் இடமாகிப் போனது. அவர்களால் எளியவற்றைக் கூட படிக்கவும் எழுதவும் முடியாது போனது. எளிய கணக்குகளைக் கூட அவர்களால் போட முடியவில்லை.

ஜோவ் சர் தன் ஆசிரியர் பணியில் இருந்தான் என்று கேள்விப் பட்ட லான் துவாவும், ஸ்வா ஜோவ்வும் அவனைப் போய்ப் பார்த்தனர். "நீ உன் பார்வையையும் நூல்களையும் இழந்த நிலையில் முன்னால் எப்படி இன்னும் படிக்கவும் எழுதவும் முடிகிறது?", என்று லான் துவா கேட்டான். "நீ உன் மனைவியையும் இழக்கவில்லையே, எப்படி?", என்று ஸ்வா ஜோவ் கேட்டான்.

"என் கண்பார்வை சாதக் கிண்ணம் கொடுத்தது. ஆகவே அதை கிண்ணம் பறித்துக் கொண்டது. ஆனால், என் கண்களால் நான் பார்த்தவற்றையும் கற்றவற்றையும் அதன் மூலம் நான் பெற்ற அறிவையும் அதனால் பறித்துக் கொள்ள முடியாதே. அதே போலத் தான் என் மனைவியும். சாதக் கிண்ணத்திடம் நான் எனக்கு மனைவி கேட்கவில்லை. உங்களையும் என்னையும் போல அவளும் முழு நிஜம்."

லான் துவாவும் ஸ்வா ஜோவ்வும் தங்களின் முட்டாள் தனத்தையும் சுயநலத்தையும் புரிந்து கொண்டனர். பழைய பள்ளியிலேயே சேர்ந்து கவனமாகப் படித்தனர். தங்களின் வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுக்க நினைத்தனர். ஒரு கண நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை.

பிற்காலத்தில் சீனாவின் முக்கிய அறிவாளியாகவும் மிகச் சிறந்த ஆசானாகவும் பெயர் எடுத்தார் கோவ் சர். அவரது மேசையில் ஒரு சாதாரண சாதக் கிண்ணம் எப்போதும் வைக்கப் பட்டிருக்கும். உடைந்து போன அதே சாதக்கிண்ணம் தான் ஒட்ட வைக்கப் பட்டிருந்தது.

(முடிந்தது)

(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author