மலையிலே… மலையிலே (3)

வயலின் வரப்பு வழியாக மற்ற சிறுமிகள் எளிதாக நடக்க, பழக்கமில்லாததால் வழுக்கி விழுந்துவிட்டாள் அக்ஷயா. அதைப் பார்த்ததும் சிறுமிகள் அனைவரும் ஒரே குரலில், "ஷேம், ஷேம். உனக்கு வரப்பில நடக்கக் கூடத் தெரியலை” என்று ஒரே குரலில் கைகொட்டிச் சிரித்தார்கள். அக்ஷயாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

"நீங்க இப்படி டீஸ் பண்ணினா நான் வீட்டுக்குப் போறேன்" என்றாள்.

"கோவிச்சுக்காதே, அச்சயா. என் கையப் பிடிச்சுக்கிட்டு மெதுவா நடந்து வா" என்று ரோகிணி அவளுக்குக் கை நீட்டினாள்.

ரோகிணியின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாய் வரப்பில் நடந்து வந்த அக்ஷயாவுக்கு வயல்வெளி மிகவும் பிடித்திருந்தது. எங்குத் திரும்பினாலும் பசுமையாய், கார்ப்பெட் விரித்தது போல இருந்தது. ஆங்காங்கே மரங்களில் பறவைகள் கூவிக் கொண்டிருந்தன. வயலில் இருந்த நீரில் வெள்ளை வெளேரென்று கொக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தது அற்புதக் காட்சியாக இருந்தது. இதை எல்லாம் ஒவ்வொன்றாக விளக்கிச் சொல்லிக் கொண்டே வந்தாள் ரோகிணி. பறவையின் குரலை வைத்தே என்ன பறவை என்று அவள் சொன்னது அக்ஷயாவுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

"ஏ புள்ளைகளா, பதினி குடிக்கீகளா?" என்று எங்கோ உயரத்திலிருந்து குரல் வந்ததைக் கேட்டு பயந்துவிட்டாள் அக்ஷயா.

ஆனால் கற்பகம் பயப்படாமல் "சரிப்பா" என்றாள், உயரமாய் வளர்ந்திருந்த பனை மரத்தின் உச்சியை நோக்கி. அப்போதுதான் பனை மரத்தின் உச்சியில் ஒரு மனிதர் தொற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள்.

"அவர் எப்படி அங்கே ஏறினாரு?" என்று கேட்டாள் அக்ஷயா.

"காலை வச்சுதான் ஏறினாரு" என்று ரோகிணி சொல்லவும் எல்லோரும் மீண்டும் ஒரே குரலில், "இது கூடத் தெரியலையா? ஷேம் ஷேம்" என்றார்கள். அக்ஷயாவுக்கு மீண்டும் கோபம் வந்தது. ஆனால் இவ்வளவு அழகான வயல்வெளியை விட்டு வீட்டுக்குப் போக விருப்பமில்லை. அதனால் பேசாமலிருந்தாள்.

கற்பகத்தின் அப்பா விறுவிறுவெனப் பனை மரத்தில் வெறும் காலுடன் லாவகமாக இறங்குவதை அதிசயமாகப் பார்த்தாள் அக்ஷயா, "அய். சர்க்கஸ் மாதிரி இருக்குது" என்றாள் கைதட்டி.

அவர் பதனீரைப் பானையில் எடுத்து வந்தார். பனை ஓலையைக் குழியாக ஆக்கி மடித்துக் கட்டி ஒரு கப் போலச் செய்து ஒவ்வொருவருக்காய்ப் பதநீரை ஊற்றிக் கொடுத்தார். பிள்ளைகள் சப்புக் கொட்டிக் குடித்தார்கள். அக்ஷயாவுக்கும் அதைச் சுவைத்துப் பார்க்க ஆசையாய் இருந்தது. அவள் முறை வந்ததும் கற்பகம், "அவளுக்கு வேண்டாம், அப்பா. அவ இதையெல்லாம் குடிக்க மாட்டா" என்றாள்.

"கொஞ்சம் குடிச்சுப் பாரு, பாப்பா" என்று அன்போடு சொன்னார் அந்த மனிதர்.

லட்சுமி அக்ஷயாவைப் பார்த்து, "உங்கப்பா ஆபீசர். இதை எல்லாம் விவசாயம் பண்ற அப்பாவாலதான் கொண்டு வர முடியும். நீ இதுக்கெல்லம் ஆசைப்படக் கூடாது" என்றதும் அனைவரும் “ஆமாமா” என்று ஆமோதித்தார்கள்.

அக்ஷயாவுக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு தன்னை வேண்டுமென்றே கேலி செய்கிறார்கள் என்று புரிந்து அழுகையாய் வந்தது. அதைப் புரிந்து கொண்டவர் போலக் கற்பகத்தின் தந்தை, "அதுக கெடக்குதுக. நீ கொஞ்சம் குடிச்சுப்பார், பாப்பா" என்று ஓலையில் பதனீர் தந்தார். அக்ஷயாவுக்கு சில்லென்று சுவையாய் வயிற்றில் இறங்கிய பதனீர் அவள் பழகியிருந்த குளிர்பானங்களை விட மிகவும் பிடித்திருந்தது.

அப்போது க்ளிங் கிளிங் என மணிச்சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது மாடு ஒன்று வெகு வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்டு அக்ஷயா அலறினாள்.

(அடுத்த வாரம் பார்க்கலாமா?)

About The Author