முல்லா விற்ற கோழி முட்டைகள்

முல்லா பக்கத்து நாட்டிற்கு சென்று முட்டை வியாபாரம் செய்து வந்தார். அந்த நாட்டு ராஜா திடீரென்று  சட்டம் ஒன்று கொண்டு வந்தார்.

அதன்படி, அந்த நாட்டின் எல்லைக்குள் யாரும் கோழி முட்டைகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்யக்கூடாது. ஆனால் கோழிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை ஒன்றும் போடவில்லை.

முல்லா அந்த நாட்டுக்கு பிறருக்கு தெரியாமல் கோழிமுட்டைகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார்.

ஒரு நாள் முல்லா வியாபாரம் செய்ய கோழி முட்டைக் கூடையுடன் அந்த நாட்டுக்குள் சென்றபோது காவலர்களிடம் மாட்டிக் கொண்டார்.

அவர் கையிலிருந்த கூடை மூடப்பட்டிருந்த விதம் பார்த்ததும் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர்.

அவரைப் பார்த்து,"கூடைக்குள் என்ன இருக்கிறது ?" என்று காவலர்கள் கேட்டனர்.

"கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன" என்றார் முல்லா.

"கோழிக்குஞ்சுகளை எடுத்துச் செல்வது குற்றமல்ல என்றாலும், அதிகாரிகள் இந்தப் பக்கம் வரும்வரை காத்திருந்து , கூடையை அவர்களிடம் காண்பிக்க வேண்டும்" என்று காவலர்கள் கூறினார்கள்.

"வயதான என்னால் அவ்வளவு நேரம் என்னால் காத்திருக்க முடியாதே இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ?" என்று பரிதாபமாகக் கேட்டார் முல்லா.

"அது எப்படி முடியும். எதிர்பாராத விதமாக சுங்க அதிகாரிகள் கண்ணில்பட்டு ,உமது கூடையைப் பரிசோதிக்கும்போது இதிலே முட்டை இருந்து விட்டால் உமக்குத் தண்டனை கிடைப்பது மட்டுமல்ல எங்கள் வேலையும் அல்லவா போய்விடும்"என்றனர் காவலர்கள்.

"என்னுடைய கஷ்டம் உங்களுக்குப் புரியவில்லையே. நான் உடனே போகாவிட்டால் எல்லாமே கெட்டுவிடும். தயவு செய்து இன்று என்னைப் போக அனுமதியுங்கள்" என்று மன்றாடினார் முல்லா.

காவலர்கள் யோசித்தனர். இருவரும் கலந்து பேசினர். பிறகு இந்தப் பெரியவர் அவசரமாக எங்கோ போக வேண்டும் என்கிறார். கூடைக்குள் என்ன இருக்கிறது என்று நாமே பரிசோதித்துப் பார்த்து விட்டு இவரை அனுப்பி விடலாம் என்று இருவரும் முடிவு செய்தனர்.

கூடையை நாங்களே பரிசோதனை செய்து பார்த்துவிடுகிறாம் என்று கூறியவாறு காவலன் ஒருவன் கூடையை திறந்தான்.

கூடைக்குள் ஏராளமான முட்டைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

"பெரியவரே, பொய் சொல்லி அல்லவா எங்களை ஏமாற்றப் பார்த்தீர்கள். இது நியாயமா? சுங்க அதிகாரிகளிடம் நீங்கள் பிடிபட்டிருந்தால் எங்கள் வேலை அல்லவா போய்விட்டிருக்கும். ராஜாவின் கோபத்திற்கு வேறு ஆளாகியிருப்போமே" என்று கோபத்துடன் கேட்டனர் காவலர்கள்.

முல்லாவும் கோபங்கொண்டவர்போலப் பாவனை செய்து , "நீங்கள் இருவரும் அடிமுட்டாள்களாக இருக்கிறீர்களே; நான் பொய் சொன்னேன் என்று, ஏன் என் மீது வேறு  அபாண்டமாகப் பழி சுமத்துகிறீர்கள் ?" என்று கேட்டார்.

"கூடைக்குள் கோழிக்குஞ்சுகள் இருப்பதாக நீங்கள்தானே சொன்னீர்கள்?", என்று கேட்டான் ஒரு காவலன்.

"ஆமாம், அப்படித்தான் சொன்னேன்", என்றார் முல்லா.

"கூடைக்குள் கோழி முட்டைகள் அல்லவா வைத்திருக்கிறீர்கள். இது பொய் அல்லவா" எனக் காவலர்கள் வினவினர்.

"மோசமான முட்டாள்களாக நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள். இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். கூடைக்குள் என்ன இருக்கின்றன ?"என்று முல்லா கேட்டார்.

"கோழி முட்டைகள் இருக்கின்றன" என்று காவலர்கள் பதில் கூறினார்கள்.

"கோழி முட்டைகளுக்குள் என்ன இருக்கின்றன ?" என்று கேட்டார் முல்லா.

காவலர்கள் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திருவென விழித்தனர்.

"என்ன முழிக்கிறீர்கள் ?சரி, வேறு மாதிரியாகக் கேட்கிறேன். கோழிக் குஞ்சுகள் எங்கிருந்து வருகின்றன ?” என்று முல்லா கேட்டார்.

"கோழி முட்டைகளுக்குள்ளிருந்து" என்றனர் காவலர்கள்.

"அப்படியானால் முட்டைகளுக்குள் கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன என்று ஆகிறதல்லலாவா ?" என்று கேட்டார் முல்லா.

"ஆமாம்!" என்று காவலர்கள் தயக்கத்துடன் பதில் கூறினர்.

"அப்படியானால் கூடைக்குள் கோழி குஞ்சுகள் தானே இருக்கின்றன? " என்று கேட்டார் முல்லா.

காவலர்கள் பதில் சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தனர்.

"இதைத்தான் நானும் சொன்னேன். ஆக நான் கோழிமுட்டைகளுக்குள் உள்ள குஞ்சுகளைத் தான் எடுத்துச் செல்லுகிறேன். ஆகவே, சட்டப்படி இது குற்றமாகாது" என்று முல்லா சொன்னார்.

காவலர்கள் ஒன்றும் கூறமுடியாமல்,முல்லாவின் சமயோசித அறிவை மெச்சியப்படி நாட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.

About The Author