அந்நிய நேரடி முதலீடு – பள்ளி மாணவர் பார்வையில்

இந்தியாவில் வாழும் இந்தியக் குடிமகனா நீங்கள்? அப்படியென்றால், நீங்கள் நிறைய காரணங்களுக்காக வருத்தம், கோபம் விரக்தி அடைய வேண்டியிருக்கும். அண்மையில், அப்படி அனைவரையும் உள்ளத்தளவில் பெரிதும் பாதித்திருப்பது ‘அந்நிய நேரடி முதலீட்டுக்கான நடுவணரசின் அனுமதி’!. நம் மக்களாட்சி அரசு, பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் மேற்கத்திய நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தையின் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.

ஏன் சுயமாக இந்தியாவால் வளரவே முடியாதா? மற்ற நாடுகளை ஏன் அண்டிப் பிழைக்க வேண்டும்? நல்லவேளையாக, இதை அமல்படுத்தும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு என்கிற பெயரில் திறக்கப்பட்டுள்ள கதவுகள் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்பது மட்டுமின்றி, நாட்டைப் பாதுகாப்பற்ற சூழலுக்கு இழுத்துச் செல்லவும் செய்கின்றன என்பதுதான் அதிர வைக்கும் உண்மை!

எடுத்துக்காட்டாக, தொலைத்தொடர்புத்துறையில் ஓர் அந்நிய நிறுவனம் முதலீடு செய்து பெரும் பகுதியைத் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளது என வைத்துக் கொள்ளுங்கள். நம் நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பிற நாடுகள், அந்த நிறுவனத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு நாம் பரிமாறிக் கொள்ளும் செய்திகளை எந்தக் கட்டுப்பாடும் இன்றிப் பார்வையிடலாம் இல்லையா?

இது வெறும் எடுத்துக்காட்டுத்தான்! இப்படியே நடந்துவிடும் எனச் சொல்லவில்லை; இப்படியும் நடக்கலாம் என்றுதான் சொல்கிறேன். இதுபோல் பல்வேறு வகைகளில் நம் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகலாம்.

இந்த அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், ஓரிரு ஆண்டுகளில், இந்தியன் என்ன உணவைச் சாப்பிட வேண்டும் என்பதைக் கூட ஒரு மேற்ககத்திய நிறுவனம்தான் முடிவு செய்யும்!

இப்படிப் பல்வேறு நிலைப்பாடுகளை ஆராயாமல் எப்படி இதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள் என்பதுதான் புரியவில்லை.

இன்னும் சில ஆண்டுகளில், நாம் இன்னொரு விடுதலைப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். சென்ற முறை ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினோம். இம்முறை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் போராட வேண்டியிருக்கும்!
தயாராய் இருங்கள்!…

About The Author