சகாப்தம் சரித்திரமாகிறது

விடாமுயற்சிக்கும் கடின உழைப்பிற்கும் இந்திய கிரிக்கெட் இலக்கியத்தில் பொருள் தேடினால் கிடைக்கும் பதில் – அனில் கும்ப்ளே. நாமும் எத்தனையோ கிரிக்கெட் வீரர்களைப் பார்த்துவிட்டோம் – உம்ரிகர், மான்கட் முதல் இன்றைய தோனி வரை. அனைவரும் நம் மனதில் நிற்பதில்லை.

கும்ப்ளேதான் உலகின் சிறந்த லெக் ஸ்பின்னர் என்று யாரேனும் சொல்லியிருக்கின்றார்களா? கிடையாது. ஏனென்றால், எக்காலத்திலும் அவர் பந்தை சுழற்றுவது பற்றாது என்று புகார் சொல்பவர்தான் அதிகம். பாகிஸ்தானின் முஷ்டாக் அஹமது, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் இவர்கட்கு முன் கண்டிப்பாக கும்ப்ளே திறமையில் தோற்றுத்தான் போவார். இருந்தும், முஷ்டாக் அஹமதைக் காட்டிலும் ஆழமாக கும்ப்ளே கிரிக்கெட்டில் பெயர் பெற்று விட்டார். அது மட்டும் அல்லாது, நம் மனதிலும் நீங்கா இடம் பெற்று விட்டார். கும்ப்ளேவின் இந்த அபார வெற்றிக்கு என்னதான் காரணம்?

வருடம் – இரண்டாயிரத்தி ஒன்று. மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய அணியினர் சென்றிருந்தனர். முதல் டெஸ்ட் போட்டி இரு தரப்பிற்கும் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. அடுத்த இரு போட்டிகளில் கும்ப்ளே விளையாடவில்லை. அவ்விரண்டில், இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றன.

நான்காம் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நாம் மிக நன்றாகவே மட்டை வீசினோம். கும்ப்ளேவிற்கு அடிபட்டு விட்டது. சாதாரண அடியல்ல, தாடை எலும்பு ஒடிந்த நிலையில் மனிதர் இருந்தார். அவர் பந்து வீச மாட்டார் என்று எதிரணி எண்ணியிருந்தால், அவர்கள் நினைப்பில் மண்ணைத்தான் தூவினார் கும்ப்ளே. தாடையில் தையல், தலை முழுக்க கட்டு போட்டுக் கொண்டு களத்தில் இறங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கும்ப்ளே! பதினான்கு ஓவர்கள் போட்டது மட்டும் அன்றி, லாராவையும் அவுட் செய்தார். இன்னும் மனக்கண்களில் தையற்கட்டுடன் நிற்கிறார் கும்ப்ளே!!

எத்தனை குறைகள், எத்தனை புகார்கள், எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றதே இந்த மனிதரின் சிறப்பு. பந்தைச் சுழற்றத் தெரியாது, நம் ஊர் பிட்ச்களில்தான் இவர் ப(ரு)ப்பு வேகும், ஆஸ்திரேலியா சென்றால் மட்டையால் அடித்தே இவர் பந்தைக் கிழித்து விடுவார்கள் -அவ்வளவுதான் கும்ப்ளே என்றென்னெல்லாமோ சொன்னார்கள். ஏன், இரண்டாயிரத்து மூன்றில், நாம் ஆஸ்திரேலியா சென்ற பொழுது, கும்ப்ளே முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை. இரண்டாம் டெஸ்ட் முதல் நாளன்று ரிக்கி பாண்டிங் நம் வேகப்பந்து வீச்சாளர்களை எல்லாம் ஒரு வழி செய்துவிட்டார். இரண்டாம் நாள், பட் பட் பட் என்று ஆஸ்திரேலிய வீரர்களை அவுட் செய்தது யார்? கும்ப்ளே!

ஒரு வருடம் கழித்து ஆஸ்திரேலிய வீரர்கள் இதே கதிக்கு உள்ளானார்கள். விக்கெட் இழப்பின்றி நூற்றி முப்பத்தாறு ஓட்டங்கள் குவித்திருந்தவர்கள், அடுத்த நூறு ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தார்கள். ஏழு வீரர்களை கும்ப்ளேதான் அவுட் செய்தார். எங்கே என்று யோசிக்கின்றீர்களா, நம் சென்னை மாநகரத்தில்தான். இரண்டாம் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள், ஆட்ட நாயகன் விருது – கும்ப்ளே!

பதினெட்டு வருடங்கள் இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சைத் தன் தோளில் சுமந்து கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம், பதினெட்டு வருடங்கள். இவர் தன் முதல் மேட்ச் விளையாடியது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறில். இவருக்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு விளையாட ஆரம்பித்த கேரி கேர்ஸ்டன், ஓய்வு பெற்று, இந்திய அணியின் பயிற்சியாளராகிய போதும் கூட இன்னும் விளையாடிக் கொண்டிருந்தார் கும்ப்ளே!

தன் முதல் டெஸ்ட் மேட்சிற்க்குப் பிறகு, இரண்டு வருடங்களுக்கு இவர் சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், இவர் திரும்பிய பொழுது, இவரின் பந்துகளுக்கு பதில் சொல்ல யாராலும் முடியவில்லை. கெப்ளர் வெஸல்ஸ் காலத்து அணி (கேரி கேர்ஸ்டனின் மூத்த அண்ணன் பீட்டர் விளையாடிய அணி) இவர் பந்துகளைக் கண்டு ‘பே-பே’ வென்று முழித்தது. பிட்ச்சின் மீது குத்தி சுருக் என்று நேராக வந்து ஸ்டம்ப்பைக் கவ்வும் பந்திற்கு பதிலைத் தேடிக்கொண்டிருந்தனர். விளைவு – ஐந்து பேர் போல்ட்! மொத்தத்தில் எட்டு விக்கெட் பெற்றார் கும்ப்ளே!

டெண்டுல்கர் எத்தனை முறை நம் வெற்றிக்கு உதவி இருக்கிறார் என்பது இன்றைய மக்கள் மனதை வாட்டும் ஒரு விஷயம். கும்ப்ளேவைப் பார்ப்போம். கும்ப்ளே விளையாடி நாம் ஜெயித்த விளையாட்டுகளில் எண்ணிக்கை நாற்பத்தி மூன்று. அவற்றில், இருநூற்றி எண்பத்தி எட்டு விக்கெட்டுகள் இவரே எடுத்துள்ளார், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு விக்கெட்டிற்கு மேல் இவரே வீழ்த்தியிருக்கிறார்!!

ஹர்பஜன் சிங் – இருபத்தியெட்டு வெற்றிபெற்ற விளையாட்டுக்கள், நூற்றி ஐம்பத்தி மூன்று விக்கெட்டுகள். ஏணி வைத்தாலும் எட்டாது. இந்தியாவிற்கு வெற்றிகளைக் குவித்தவர் என்று கும்ப்ளேவைத் தவிர யாரைச் சொல்ல முடியும் – நம் வெற்றி நாயகர், கும்ப்ளே!

ஆம், முரளிதரனுடனும் ஷேன் வார்னுடனும் ஒப்பிட்டால் கும்ப்ளே எண்ணிக்கைகளில் குறைந்துதான் போகின்றார். வாஸ், மேக்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட அணிகள் அவை. நமக்கோ, ஐந்து பௌலர்கள் கிடைக்க மாட்டார்களா என்று அலைந்த காலம் கூட உண்டு. (அதனால்தானோ என்னவோ, கங்குலி நான்கு பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டிருந்தார்.)

இப்படிப் பட்ட ஒரு அணியின் பாரத்தைச் சுமந்தது மட்டுமல்லாமல், வெற்றிகளை குவித்துத் தந்தது தான் கும்ப்ளேவின் சிறப்பு. மெக்ராத்தை சில சமயங்களில் ஒரு இயந்திரம் என்று சொல்வதுண்டு – ஒரே வேகத்தில் துல்லியமாக பந்தை வீசக் கூடியவர் அவர். இவ்விஷயத்தில் பார்த்தால்,மெக்ராத்தை போல ஒரு இயந்திரம் ஆகிறார் நம் கும்ப்ளே!

இவ்வருடத்தின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த கூத்தையெல்லாம் நினைத்துப் பார்க்கவே கசப்பாக உள்ளது. அனைத்து சச்சரவுகளையும் அமைதியான முறையில் கடந்து, பெர்த்தில் வெற்றி வாகை சூடித் தந்தது இவருக்கு பெருமையையே கூட்டும். ஒரு முறையும் தடுமாறவில்லை, தடம் மாறவில்லை. உணர்ச்சிகளை வெளியே கொட்டவில்லை. யாரையும் திட்டவில்லை, வீண்புகழ்ச்சி செய்யவில்லை – அதுதான் கும்ப்ளே!!

ஸ்ரீலங்காவிடம் தோற்றபோதும், ஏன், ஆஸ்திரேலியர்களோடு விளையாட ஆரம்பிக்கும் போதும் கூட மனிதர் தன் ஓய்வைப் பற்றிப் பேசவில்லை. மூன்றாவது போட்டியில் விரலை ஒடித்த பந்து இவரை யோசிக்க வைத்து விட்டது. இந்திய கிரிக்கெட்டிற்கு உணர்ச்சி ததும்பும் நேரம் – தன் வெற்றித் திருமகனை இழக்க நேரிடுவதால்!

ஐந்தாம் நாளின் தேனீர் இடைவெளியின் பொழுது தன் நண்பர்களிடம் தெரிவித்த கும்ப்ளே கூடிய விரைவில் இந்திய பேட்டிங்கை டிக்ளேர் செய்தார். தில்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் செய்தி மைக் மூலம் அறிவிக்கப்பட்டது. ஒரு முறை, கடைசி முறை, கும்ப்ளேவின் தலைமையில் இந்திய வீரர்கள் மைதானத்தில் நுழைந்தார்கள். ஒவ்வொரு முறை இவரால் இந்தியா ஜெயித்திருந்த போதும் முக்கியமாகக் கருதப்பட்டது இந்தியாவே தவிர, கும்ப்ளே அன்று. ஆனால், அன்றைய தினம் கதை வேறு. எப்படியும் விளையாட்டு ‘ட்ரா’ ஆகும் நிலை. இருந்தும் கும்ப்ளே மைதானத்தில் நுழையும் நேரம் ஆரவாரம்.

இரு விரல்களைச் சேர்த்த கட்டுடன், ‘ஜம்போ’ ஜம்பமாக மைதானத்தில் நடந்தார். உணர்ச்சிக் கடலில் அனைவரும் மிதக்க, புதுப் பந்தை எடுத்துக் கொண்டு வீசத் தயாரானார். அம்பயர்களும், ஏன், மேத்யூ ஹேடனும் கேடிச்சும் கூட தங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்கள். சச்சின் மெதுவாக கும்ப்ளேவிடம் நடந்து வந்து அவர் தொப்பியை வாங்கி அம்பயரிடம் தந்தார். (இதே மைதானத்தில் பாகிஸ்தானின் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியபோது ஆரம்பித்த பழக்கம்!) “மீண்டும் ஒரு முறை” என சச்சின் சொல்ல, “கடைசி முறை!” என்றார் கும்ப்ளே!

கும்ப்ளே தன் வழக்கமான தீர்க்கத்துடன் பந்து வீசினார் – நான்கு ஓவர்கள்! அதே வேகம், அதே துல்லியம், அதே உழைப்பு, அதே முயற்சி – அதுதான் கும்ப்ளே!! கடைசியில் அமித் மிஷ்ரா இவரை வந்து கட்டிக் கொள்ள “இனி சுழற்பந்து உன் பொறுப்பு” என்றார் போல!

ராகுல் ட்ராவிடும், ஜாஹீர் கானும் கும்ப்ளேவைத் தூக்கி வைத்துக் கொண்டு மைதானத்தை வலம் வர, ‘நம் பந்து வீச்சை இத்தனை காலமாக நீர் தாங்கினீர். உம்மை சிறிது நேரத்திற்கு நாம் தாங்குகிறோம்!’ என்று சொல்வது போல இருந்தது.

பின்னர், தன்னந்தனியாக தோனி அவரை தன் தோளில் தாங்கியது கண்கொள்ளாக் காட்சி. “இனி சில காலத்துக்கு இந்திய கிரிக்கெட் உன் பொறுப்பு” என்று கும்ப்ளே சொல்வது போலும், தோனி, “மிக்க மகிழ்ச்சி” என்று சொல்லிக் கொண்டே அதை ஏற்றுக்கொள்வது போலும் இருந்தது.

பின்னர், கங்குலி தோனியிடம் விளையாட்டாக சொன்னார், “என் இடம் மட்டும்தான் காலி என்று முதலில் நினைத்தேன்! இப்பொழுது நிரப்புவதற்கு இரண்டு இடங்கள் காலி! நீ சீக்கிரம் நிரப்பவேண்டும்!”

தோனி பதில் – “என்ன செய்தாலும் அவ்விரண்டு இடங்களையும் நிரப்ப முடியாது!”

About The Author