Information to readers

15ஆம் ஆண்டில் நிலாச்சாரல்

  
அன்பு நிலாச்சாரல் வாசகர்களுக்கு,

இனிய வணக்கங்கள்.

தாங்கள் நிலாச்சாரலை தொடர்ந்து வாசித்து வருவது குறித்து நிலாக்குழுவினர் மகிழ்ச்சியடைகிறோம். 2001-இல் இருந்து தமிழுக்காக தொடர்ச்சியாக இயங்கி வரும் நிலாச்சாரல் இவ்வருடத்துடன் தனது பதினான்கு ஆண்டுகள் சேவையினை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

நிலாச்சாரல் நீடித்து இயங்க இதுவரையிலும் சிறப்பாகப் பங்களித்து வந்த, பங்களித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் படைப்பாசிரியர்களுக்கும் இத்தருணத்தில் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம். நிலாச்சாரல் இதழ் வேலைகளுக்கு பெருமிதத்துடன் பங்களித்து வந்த தன்னார்வல அன்பர்களது நேரத்திற்கு எதுவும் ஈடு செய்ய இயலாது.

பல்வேறு காலகட்டங்களில் தொழில்நுட்ப வேகத்திற்கு ஈடுகொடுத்து தளத்தினை அவ்வப்போது வடிவத்திலும், அமைப்பிலும் மெருகேற்றி வந்துள்ளோம். தற்போது முற்றிலும் மாறுபட்ட விதமாக நிகழ்கால தொழில்நுட்பத்திற்கு வடிவமைப்பையும், செயல்படும் விதத்தினையும் மேம்படுத்தியிருக்கிறோம்.

முன்னை விட தள இயக்கம் விரைந்து செயல்படும் விதத்திலும், கைபேசிகளிலும், டேப்லட்களிலும் வாசிக்க ஏதுவாகவும், படைப்புகளைப் பயனர் எளிதாக அணுகும் விதமாகவும் மாற்றியிருக்கிறோம். தற்போதைய இந்த முன்னகர்வு முன்னை விட மிகுந்த சவாலானதாகவும், கடினமானதாகவும் இருந்தது.

இன்னும் அடிப்படையாக செய்ய வேண்டிய நிறைய பணிகள் முடிவு பெறாத வகையில் இருப்பதால், ஏற்கெனவே வந்து கொண்டிருந்த கட்டுரைகள் மற்றும் படைப்புகளின் தொடர்ச்சி இன்னும் ஒரு மாத காலத்திற்குப் பின்னரே வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவற்றின் முடிவுக்குப் பின்னர் ஆறு மாத கால அளவிற்கு புதிய படைப்புகள் வெளியீடு நிறுத்தப்படுகிறது என்பதையும் மிக்க வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறோம்.

நிலாச்சாரல் இதழ்களை எவ்வித இலாப நோக்கமுமின்றி வாராவாரம் தொடர்ந்து பதினான்கு ஆண்டு காலம் வெளியிட்டு வந்திருக்கிறோம். கணிசமான நிர்வாகச்செலவும், கிடைத்தற்கரிய நேரங்களையும் செலவிட்டது சற்றே ஓய்வெடுக்கத் தூண்டுகின்றன. இதற்கிடையில் நிலாச்சாரலில் முந்தைய படைப்புகள் அனைத்தையும் நீங்கள் வாசித்து மகிழலாம். அதனை எளிமைப்படுத்தும் வகையில் முகப்புப் பக்கம் மாறிக்கொண்டேயிருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்திமடலும் தங்கள் மின்னஞ்சலுக்கு வந்தவண்ணமிருக்கும்.

தங்களின் நல்லாதரவும், நிபந்தனைகளற்ற அன்பும் எங்களுக்குத் தொடர்ச்சியாகத் தேவைப்படுகிறது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். நிறைய தன்னார்வலர்கள் தன்முனைப்புடன் வந்தால் நாம் அனைவரும் இணைந்து, ஊர் கூடி தற்காலிகமாக நிலை நின்றிருக்கும் இத்தமிழ்த் தேரினை தொடர்ந்து இழுத்துச் செல்லலாம். கைகள் கூடும்போது வலிகள் தெரியாது. வாருங்கள்! கரம் கோர்ப்போம்!