தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (22)

தென்னிந்திய ஓவியம்

தென் இந்திய சித்திரங்கள் பண்டைக் காலத்தில் சிறப்புற்றிருந்தன. ஹைதராபாத்து இராச்சியத்தின் வடகோடியில் பரத்பூருக்கு அருகில் உள்ள அஜந்தா மலைக்குகை ஓவியங்களும், காஞ்சி கயிலாசநாதர் கோயில் ஓவியங்களும், பனைமலைக் கோயில் ஓவியங்களும், புதுக்கோட்டை இராச்சியத்தின் சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியங்களும், திருமலைபுரம் மலையடிப்பட்டி ஓவியங்களும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்களும், இலங்கை சிகிரியா மலைச்சுவர் ஓவியங்களும் தென்னிந்திய ஓவிய மரபைச் சேர்ந்தவை.

நமது நாட்டிலே இப்போதுள்ள சுவர்ச் சித்திரங்கள் மிகச் சிலவே. ஏனென்றால், கி.பி 600-க்கு முன்னர் இருந்த கோயிற் கட்டடங்கள் எல்லாம் செங்கல், சுண்ணாம்புகளினால் கட்டப்பட்டவை. ஆகவே, அக்கட்டடங்கள் விரைவில் அழிந்துவிட்டன. அக்கட்டடங்களோடு சுவர்ச் சித்திரங்களும் அழிந்து விட்டன. கி.பி 600-க்குப் பின் உண்டான குகைக்கோயில்கள், சுற்றளிகள் என்னும் கட்டடங்களில் எழுதப்பட்ட ஓவியங்களில் பெரும்பான்மையும் இப்போது அழிந்துவிட்டன. ஏனென்றால், நுண்கலைகளில் மிக எளிதாகவும் விரைவாகவும் அழிந்துவிடக்கூடியது ஓவியக் கலை. ஆகவே, அவை பராமரிப்புக் குறைவு காரணமாகவும், காலப் பழைமை காரணமாகவும் அழிந்துவிட்டன.

தமிழ்நாட்டிலே இப்போதுள்ள மிகப் பழைய ஓவியம் சித்தன்னவாசல் குகைக்கோயில் ஓவியமே. அதற்கடுத்தபடியாக உள்ளவை காஞ்சி கயிலாசநாதர் கோயில் சுவர் ஓவியங்களும், பனைமலைக் கோயில் ஓவியங்களுமாம். இவை சிதைந்து அழிந்துள்ளன. அதற்குப் பிற்பட்டவை தஞ்சாவூர்ப் பெரிய கோயில் ஓவியங்கள் முதலியவை. இவற்றை ஒவ்வொன்றாக விளக்குவோம்.

சித்தன்னவாசல் ஓவியம்

அன்னவாசல் என்னும் பெயருள்ள ஊர்கள் புதுக்கோட்டையில் சில உள்ளன. அப்பெயருள்ள ஊர்களில் சித்தன்னவாசல் என்பதும் ஒன்று. இது புதுக்கோட்டைக்கு வடமேற்கே பத்து மைலுக்கப்பால் இருக்கிறது. இக்கிராமத்துக்கு அருகிலே மலையின் மேலே சிறு குகைக்கோயில் ஒன்று உண்டு. இது ஜைன சமயக் கோயில். இக்கோயிலை அமைத்தவன் பல்லவ அரசனாகிய முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி 600-630) ஆவன்.1

இந்த அரசன் இசைக்கலை, நாடகக் கலை, சிற்பக் கலை முதலிய கலைகளில் வல்லவன்; அன்றியும், சித்திரக்கலையிலும் வல்லவன். இதனால் இவனுக்குச் சேதகாரி, சங்கீர்ண ஜாதி, சித்திரகாரப் புலி முதலிய சிறப்புப் பெயர்கள் உண்டு. இந்த அரசன், தக்ஷிண சித்திரம் என்னும் பழைய ஓவிய நூலுக்கு உரை எழுதினான் என்று இவன் அமைத்த மாமண்டூர் குகைக்கோயில் சாசனம் கூறுகிறது என்பர்.

இவன் உண்டாக்கிய சித்தன்னவாசல் குகைக் கோயிலிலே, இவன் காலத்தில் எழுதப்பட்ட சுவர் ஓவியங்கள் சில காணப்படுகின்றன. இவ்வோவியங்கள் காலப்பழைமையினாலும், மாட்டுக்காரப் பயல்களின் அட்டூழியத்தினாலும், இங்கு வந்து தங்கியிருந்த மனிதர்களின் கவலையின்மையினாலும் பெரிதும் அழிந்துவிட்ட போதிலும், இப்போதும் குற்றுயிராகக் காணப்படுகின்றன. இப்போது இவ்வோவியங்கள் ஒளி மழுங்கிக் காணப்படுகிறபடியால், இவற்றைப் பார்க்கச் சென்றவர்களில் சிலர் இவற்றைப் பாராமலே திரும்பிவிட்டதும் உண்டு.

சித்தன்னவாசல் சுவர் ஓவியங்கள் இடைக்காலத்திலே பொதுஜனங்களுக்குத் தெரியாமல் மறைந்திருந்தன. 1919இல் திரு. T.A.கோபிநாத ராயர் அவர்கள் தற்செயலாக இந்த ஓவியங்களைக் கண்டுபிடித்து, அதனைப் புதுச்சேரியில் இருந்த ழூவோ தூப்ராய் அவர்களுக்குத் தெரிவித்தார். பிரெஞ்சுக்காரரான ழூவோ தூப்ராய் அவர்கள், பல்லவர் சரித்திரம், பல்லவர் கலை முதலியவற்றை ஆராய்வதில் ஊக்கமுள்ளவர். அவர் உடனே சித்தன்னவாசலுக்குச் சென்று, அங்குள்ள சுவர் ஓவியங்களைக் கண்டு, அவற்றின் அருமை பெருமைகளைப் பற்றிப் பொதுமக்களுக்கு அறிவித்தார். இவ்வாறு சித்தன்ன வாசல் ஓவியம் வெளிப்படுத்தப்பட்டது.

சித்தன்னவாசல் சுவர் ஓவியங்களில் எழுதப்பட்டுள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை மகேந்திரவர்மனும் அவன் அரசியும் ஆகியவர்களின் உருவச்சித்திரங்களும், இரண்டு நடன மாதர்களின் ஓவியங்களும், காதிகா பூமி என்னும் பெயருள்ள தாமரைகள் நிறைந்த அகழியின் ஓவியமும் ஆகும்.

–கலை வளரும்..
.

________________________________________
1. இவ்வரசன் வரலாற்றைப் பற்றியும், சித்தன்ன வாசல் ஓவியங்கள் பற்றியும் இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘மகேந்திரவர்மன்’ என்னும் நூலில் காண்க.

About The Author