பல
அறிவார்ந்த விஷயங்களைப் பற்றி நரேன் சம நிலையில் அமர்ந்து
அவருடன் விவாதிப்பதுண்டு. தந்தைக்கும், படிப்பைக் கரைத்துப்
புகட்டுவதை விட, சுய சிந்தனையைத் தூண்டி விடுவதுதான் கல்வி
என்ற நம்பிக்கை இருந்தது. இது நரேனின் அறிவு வளர்ச்சிக்கு
சாதகமான சூழ்நிலையாக அமைந்தது.
1877. நரேன் மூன்றாம் படிவத்தில் (தற்போதைய எட்டாம்
வகுப்புக்குச் சமம்.) விசுவநாதர் வேலை நிமித்தம்
ரெய்ப்பூருக்கு மாற வேண்டியிருந்தது. அவர் முன்னதாகப்
புறப்பட்டுச் சென்று விட்டார். குடும்பம் சற்று காலத்துக்குப்
பிறகே அவருடன் சேர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. ரயில்
போக்குவரத்து இல்லாததால் மாட்டு வண்டியில்தான் பயணம். வன
விலங்குகள் நிறைந்த அடர்ந்த காடுகள் வழியாக 15 நாள் பயணம்.
நரேன்தான் பயணத்தை நிர்வகித்து நடத்த வேண்டியிருந்தது.
சிரமங்கள் நிறைந்த பயணம். எனினும் பாரதத்தின் வியப்பூட்டும்
இயற்கை எழிலில் ஆழ்ந்து போனதால் நரேனுக்கு எந்த சிரமமுமே
தெரியவில்லை. இந்தப் பயணம் பற்றிப் பின்னாளில் விவேகானந்தர்
சொல்வது:- விந்திய மலைகளின் அடிவாரத்தின் வழியே பயணித்துக்
கொண்டிருந்தோம். மலைத் தொடரின் உச்சிகள் வானத்தைத் தொடும்
அளவுக்கு உயர்ந்திருந்தன. கனிகள், மலர்களின் பாரம்
தாங்காமல்,செடிகளும் மரங்களும் வளைந்து கொண்டிருந்தன.
மரத்துக்கு மரம் பறந்தபடி, பலவண்ணப் பறவைகள் இனிய கீதம்
இசைத்துக் கொண்டிருந்தன. மனம் அசாதாரண அமைதியால் நிரம்பிப்
போயிருந்தது. மாட்டு வண்டி மெல்ல ஊர்ந்தபடி ஒரு குறிப்பிட்ட
இடத்துக்கு வந்தது. குறுகிய காட்டுப் பாதைக்குள் முன்னேறி
வந்து இரண்டு மலைச்சிகரங்கள் காதல் பிணைப்புப் போல ஒன்றையொன்று
தழுவிக் கொண்டிருந்தன. ஒரு மலையில் சிகரத்திலிருந்து அடி
வரையில் ஒரு பெரும் பிளவு. அந்தப் பிளவில் ராட்சச அளவிலான ஒரு
தேன் கூடு. தேனீக்களின் நெடுநாள் உழைப்பின் பலனாக உருவானது.
தேனீக்கள் சாம்ராஜ்யத்தின் அடி முடி பற்றி ஆச்சரியத்தோடு நான்
சிந்திதுக் கொண்டிருந்த வேளையில், மூவுலகையும் ஆண்டு
கொண்டிருக்கிற இறைவனின் அளப்பரிய ஆற்றலில் மனம் மூழ்கி விட்ட
போது, கொஞ்ச நேரத்துக்கு நான் புற உலகம் பற்றிய உணர்வையே
இழந்து விட்டேன். அதே நிலையில் எவ்வளவு நேரம் மாட்டு வண்டியில்
சாய்ந்து கிடந்தேன் என்பது எனக்கு நினைவில்லை. சுய நினைவை
அடைந்தபோது, வண்டி வெகு தூரம் கடந்து விட்டிருந்தது.
ரெய்ப்பூரில் பள்ளிகள் இல்லை. விசுவநாதருடன் நரேன் இந்த
நாட்களில் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. பல
அறிவார்ந்த விஷயங்களைப் பற்றி நரேன் சம நிலையில் அமர்ந்து
அவருடன் விவாதிப்பதுண்டு. தந்தைக்கும், படிப்பைக் கரைத்துப்
புகட்டுவதை விட, சுய சிந்தனையைத் தூண்டி விடுவதுதான் கல்வி
என்ற நம்பிக்கை இருந்தது. இது நரேனின் அறிவு வளர்ச்சிக்கு
சாதகமான சூழ்நிலையாக அமைந்தது. பல அறிஞர் பெருமக்கள்
விசுவநாதரின் இல்லத்துக்கு வருவதுண்டு. அவர்களுடன் சரிக்கொத்த
நிலையில் நரேன் அறிவுபூர்வமான விஷயங்களை விவாதிப்பதில்
தந்தைக்கு மகிழ்ச்சி. இப்படி ஒரு வங்காளி அறிஞருடன் தரமான
நூல்களிலிருந்து வரிக்கு வரி மேற்கோள் காட்டி நரேன்
உரையாடியபோது அந்த அறிஞர் ஆச்சரியப்பட்டுப் போனார். உலகமே
உன்னைப் பற்றிப் பேசப்போகிறது. கேட்கத்தான் போகிறோம். என்று
தீர்க்கதரிசனத்துடன் சொன்னார் அவர்.
ரெய்ப்பூரிலிருந்து திரும்பியபோது நரேனுக்கு கம்பீரமான
தோற்றமும் கண்ணியமன நடையுடை பாவனைகளும் வந்தடைந்திருந்தன.
ரெய்ப்பூரில் இருந்த காலத்தில் சதுரங்கத்திலும்
சமையற்கலையிலும் தந்தை மூலம் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான்
அவன். தந்தையிடமிருந்து அவன் பெற்ற இன்னொரு செல்வம் இசையில்
ஆர்வமும் தேர்ச்சியும். வாய்ப்பாட்டிலும் வாத்திய இசையிலும்
தக்க நிபுணர்களிடம் பயிற்சி பெற்றான். அற்புதமான குரல் வளம்
அவனுக்கு!
சிறு வயதிலிருந்தே நரேன் பேச்சுக்கலையில்
தேர்ந்தவன். ஓய்வு பெறும் ஆசிரியருக்கு வழியனுப்பு விழா.
முன்னணி தேசியத் தலைவர் சுரேந்திர பானர்ஜிதான் தலைவர். அவர்
எதிரில் பேச மாணவர்களுக்குத் தயக்கம். துணிந்து நான்
பேசுகிறேன் என்று நரேன் முன்வந்தான். சர்க்கரைப் பந்தலில்
தேன்மாரி என்று ஒரு சொலவடை உண்டே, அப்படிப் பொழிந்து தள்ளி
விட்டான், அரை மணி நேரத்துக்கு. சுரேந்திரநாத் பானர்ஜி
வெகுவாகப் பாராட்டினார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இந்தியாவின் தலை சிறந்த பேச்சாளன் என்று பின்னொரு நாளில் இதே
பானர்ஜி விவேகானந்தரைப் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்.
பள்ளி இறுதித் தேர்வில் நரேன் கணிதம், சம்ஸ்கிருதம், இந்திய
வரலாறு ஆகியவற்றில் அபாரத் தேர்ச்சி காண்பித்தான். பாடப்
புத்தகங்களில் ஒழுங்காகக் கவனம் செலுத்தியிராததால் தேர்வு
சமயங்களில் மிகக் கடினமாக உழைக்க வேண்டியதாயிற்று. பரீட்சைக்கு
மூன்று நாட்கள் முன் வரை ஜியாமெட்ரியைத் தொட்டது கூடக்
கிடையாது. விடிய விடியப் படித்து 24 மணி நேரத்தில்
ஜியாமெட்ரியில் 4 புத்தகங்களை அப்படியே ஜீரணித்துக் கொண்டு
விட்டான். புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்வதில்
நரேந்திரனுக்கு அதிசயிக்கத் தக்க ஆற்றல் இருந்தது.
விவேகானந்தரின் வார்த்தைகளிலேயே இது பற்றிக் கேட்போம்:- எந்தப்
புத்தகத்தையும் வரிக்கு வரி படிக்காமலேயே அதன் ஆசிரியர் என்ன
சொல்கிறார் என்று புரிந்து கொள்ளும் ஆற்றல் எனக்கு இருந்தது.
ஒரு பத்தியின் முதல் வரிகளையும் படித்தே அந்தப் பத்தியில்
சொல்லியுள்ள முழுக்கருத்தையும் என்னால் புரிந்து கொள்ள
முடியும். இந்த ஆற்றல் வளர வளர எனக்கு பத்திகளைப் படிப்பது கூட
அவசியமில்லை என்றாகி விட்டது. ஒரு பக்கத்தின் முதல் வரியையும்
கடைசி வரியையும் படித்தாலே அதில் கூறி உள்ளது என்ன என்று
எனக்கு விளங்கி விடும். தவிர, நூல் ஆசிரியர் ஒரு கருத்தை
விளக்க நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் எடுத்துக் கொண்டார்
என்றால் முதல் சில வரிகளைப் படித்தவுடனேயே அவரது சிந்தனைப்
போக்கை என்னால் புரிந்து கொள்ள முடியும்.
|