அமெரிக்கர்கள் பொதுவாக உலகிலேயே அதிக பணக்காரர்களாக இருந்த போதிலும் சந்தோஷமும் நிம்மதியும் இல்லாத வாழ்க்கையைக் கொண்டுள்ளதன் காரணத்தை இந்த ஆய்வு நிரூபிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சந்தோஷம் கடையில் கிடைக்கும் சரக்கு அல்ல, அதைப் பணம் கொடுத்து வாங்கவே முடியாது என்பது தொன்று தொட்டு சொல்லி வரப்படும் ஒரு மூதுரை. ஆனால் சிறிது பணம் செல்வழித்தால் சந்தோஷத்தை அடைய முடியும் என்கிறது நவீன அறிவியல் ஆராய்ச்சி ஒன்று!
ஒரு நாளைக்கு ஐம்பது முதல் நூறு ரூபாய் வரை செல்வழித்தால் போதும் நீங்கள் நிம்மதியையும் சந்தோஷத்தையும் பெறலாம் என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும் ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூல் குழுவினர் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு அறிவிக்கிறது! இதில் 630 அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். முதலில் அவர்கள் தற்போது சந்தோஷத்துடன் இருக்கிறார்களா என கேட்கப்பட்டு அவர்களது வருடாந்திர வருமானம் அவர்கள் பணத்தைச் செலவழிக்கும் விதம், பரிசுகள் அளிக்கும் முறை, அறக்கட்டளைகளுக்கு அவர்கள் நன்கொடை வழங்குகிறார்களா, தர்மம் ஏதேனும் செய்கிறார்களா என்பன போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன!
பணம் சம்பாதிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் பணத்தைச் செல்வழிக்கும் முறையை அறிவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த விவரங்களைச் சேகரித்தோம் என்று இந்த ஆய்வை நடத்திய பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழக உளவியலாளரான எலிஸபத் டன் தெரிவித்தார்!
மற்றவர்களுக்காகச் சிறிது பணத்தைச் செலவழிப்பவர்கள் அதிக சந்தோஷம் கொண்டவர்களாக இருப்பதை எங்கள் ஆய்வு கண்டுபிடித்தது என்று எலிஸபத் மேலும் கூறினார். போஸ்டனில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் எலிஸபத்தின் குழுவினர் 16 பணியாளர்களை சந்தித்து இன்னொரு ஆய்வையும் மேற்கொண்டனர். அந்த நிறுவனத்தில் அவர்களுக்கு வருடாந்திர போனஸாக ஒரு லட்சத்தி இருபதினாயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்தி இருபதினாயிரம் வரை கிடைக்குமாம். போனஸ் கிடைத்தவுடன் அதில் ஒரு பகுதியை சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தந்தவர்கள் மிகுந்த மன மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடைவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
போனஸ் எவ்வளவு பெரிய அல்லது சிறிய தொகையாக இருந்த போதிலும் அதை அவர்கள் செலவழித்த விதத்தினால் மகிழ்ச்சி அடைவதைக் காண முடிந்தது என்று சமீபத்திய ஜர்னல் ஸயின்ஸ் என்ற விஞ்ஞான பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை மூலம் உலகிற்கு அவர்கள் தங்கள் முடிவைத் தெரிவிக்கின்றனர்! தங்களது சுய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டவர்களை விட அடுத்தவர்களுக்கும் சிறிது பணம் அளித்தவர்கள் அதிக சந்தோஷம் அடைந்தனர் என்பதை மேலும் உறுதி செய்ய அவர்கள் ஒவ்வொரு தன்னார்வத் தொண்டரிடமும் சுமார் ஆயிரம் ரூபாய் தந்து அதைச் செலவழிக்குமாறும் செலவழித்த விதத்தை பின்னால் கூறுமாறும் கேட்டுக் கொண்டனர்.
இதனால் கிடைத்த புள்ளி விவரமும் அவர்கள் ஆய்வு முடிவை மேலும் உறுதி செய்தது. தங்களுக்குக் கிடைத்த ஆயிரத்தில் சுமார் இருநூறு ரூபாய் கொடுத்தவர்கள் கூட தாங்கள் பெருத்த சந்தோஷத்தை அடைந்ததாக உற்சாகத்துடனும் நிம்மதியுடனும் கூறினர். அமெரிக்கர்கள் பொதுவாக உலகிலேயே அதிக பணக்காரர்களாக இருந்த போதிலும் சந்தோஷமும் நிம்மதியும் இல்லாத வாழ்க்கையைக் கொண்டுள்ளதன் காரணத்தை இந்த ஆய்வு நிரூபிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக தர்மத்தில் அதிக பணம் செலவழிக்காமல் தங்கள் குடும்பம் அல்லது தனக்கே அனைத்தையும் செலவழிப்பவர்களுக்கு சந்தோஷமும் குறைவு தான் நிம்மதியும் குறைவு தான் என்பது முடிந்த முடிபு. அமெரிக்கர்களின் சராசரி வருமானம் கூடிக் கொண்டே போனாலும் சந்தோஷமும் நிம்மதியும் எதிர் விகிதமாகக் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்கர்களின் கண்களைத் திறப்பதோடு உலகினருக்கு ஒரு பெரிய செய்தியையும் அறிவிக்கிறது. அதாவது பிறருக்குக் கொடுத்து வாழ்ந்தால் கோடி நன்மை உண்டாகும் என்பது தான் அது.
இந்திய வாழ்க்கை முறையில் 32 அறங்களை வகுத்து, பிறருக்கு தண்ணீர்ப்பந்தல் வைத்துத் தண்ணீர் தருவது முதல் தாலியை வாங்கிக் கொடுத்து திருமணம் நடத்துவது வரை பல்வேறு அறங்களை நிர்ணயித்த முன்னோரின் பெருமையை இப்போதாவது அறிந்து நாம் போற்றினால் சரி தான்!
************
அறிவியல் அறிஞர் வாழ்வில்....
பிரபல ராக்கெட் விஞ்ஞானியான வெர்னர் வான் ப்ரௌனை ஒரு சமயம் சந்தித்த சிலர். “அடிப்படை ஆராய்ச்சி என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு வெர்னர்,” என்ன வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று எனக்கே தெரியாமல் நான் செய்து கொண்டிருக்கும் வேலை தான் அடிப்படை ஆராய்ச்சி” என்று பதிலளித்தார்! நல்ல கேள்வி நல்ல பதில்!
விண்கலத்தில் நாம் அனுப்பக் கூடிய சிறந்த கம்ப்யூட்டர் மனிதனே என்று ஒரு சமயம் கூறி நிறுத்திய அவர், “அந்த ஒருவனைத் தான் ஏராளமாக உற்பத்தி (மாஸ் புரடக்ஷன்) செய்ய முடியும் குறைந்த திறமையின் அடிப்படையில்” என்று கூறி முடித்தார்!
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X