பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகின்ற இந்தியர்களுக்குக்கு மற்ற உலக நாடுகளில் பணி புரிபவர்களை விட மிக அதிகமான ஊதிய உயர்வு 2008ல் கிடைக்குமாம். 
மகாத்மா காந்தியின் நடை உடை பாவனையோடு, அவரது சித்தாந்தத்தையும் பின்பற்றுபவரைக்
காண்பது மிகவும் அபூர்வம். அத்தகைய அபூர்வ மனிதர்தான் அமெரிக்காவில் வாஷிங்டனிலுள்ள
ஒலிம்பயாவில் வாழும் 70 வயதான மெர்னீ மேயர். காந்திஜியின் அஹிம்சையைப் பரப்பும் இவர்,
கையில் தடியுடன் காதி உடையில் காந்தி கண்ணாடி அணிந்து பார்ப்பதற்குக்கூட
காந்தியைப்போலவே இருக்கிறார். வேதாந்தம், சரித்திரம், மற்றும் சமூக மாற்றம் ஆகிய
துறைகளில் பட்டம் பெற்றுள்ள இவர் உலகில் வன்முறை பெருகிவருவதற்கான அடிப்படைக்
காரணங்களை ஆராய்கிறார். "நான் வாழ்க்கையில் நிதர்சனமான உண்மையைக் காட்டும் ஆன்மீக
வழியை நம்புகிறேன். நான் காந்தியைப் பின்பற்றி நடக்கிறேன், ஏனென்றால் காந்தியின்
பாதைதான் உலகை நடத்திச் செல்லும்" என்று சொல்கிறார்.
***
'லகேரஹோ முன்னாபாய் 'பாணியில் இன்னுமொரு மனம் திருந்திய தாதா. மகராஷ்டிர மாநிலத்தில்
கட்கோபர்டெட் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் கோலே பல மு றை தனது
ரவுடித்தனத்திற்காக சிறை சென்றவர். 2005ம் ஆண்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்ட இவர்
காந்திஜியின் சுயசரிதையைப் படித்து மனம் மாறத் துவங்கினார். இவரது நடவடிக்கைகளில்
மாற்றம் ஏற்பட்டது. சக கைதிகளோடு அன்புடன் பழகினார். "ஒருவரை நிந்திப்பதாலும்
வன்முறையில் ஈடுபடுவதாலும் ஒரு பலனும் கிடைக்காது என்பதை காந்தி புத்தகத்தின் மூலம்
தெரிந்து கொண்டேன்" எனச் சொல்லும் இவர் சிறை வாழ்க்கை முடிந்ததும் ஒரு கம்ப்யூட்டர்
மையம் நடத்த இருக்கிறார்.
***
ஜல்லிக்கட்டுக்கு சப்பைக்கட்டு
ஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தபோது அந்த ஊர்களில்
வாழும் மக்கள் மட்டுமல்ல, அரசாங்கமே கொதித்தது. வீர விளையாட்டுக்குத் தடையா? என்று.
காளையை அடக்குவதற்குத் தனது உயிரைக்கூடப் பணயம் வைப்பதுதான் தமிழன் வீரம் என்று
விளையாட்டில் கலந்துகொண்ட வீரர் ஒருவர் சொன்னார். சாலமன் பாப்பையா கூறியதுபோல் ஒரு
காளையை ஐம்பது பேர் விரட்டுவதில் என்ன வீரமிருக்கிறது? மிரண்டு ஓடும் மாட்டின்
வாலைப் பிடித்து முறுக்குவதுதான் தமிழனின் வீரமா? இவர்கள் வீரத்தை மாட்டை
அடக்குவததற்கு பதில் நாட்டைக் காப்பதற்குப் பயன் படுத்தலாமே!
***
ஒரு வித்தியாசமான செய்தி:
பாகிஸ்தானத்தில் மதரசாக்களின் பதிவு மற்றும் அவற்றின்
சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வதற்கு ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்
அமர்லால் என்ற இந்து என்பதுதான் விசேஷம்.
***
புது வருஷ திரைப்படங்களின் நகைச்சுவைத் தொகுப்பளிப்பு ஒன்றை ஒரு தொலைக்காட்சி
சேனலில் பார்க்க “நேர்ந்தது”. (நல்ல விஷயங்களைத்தான் “வாய்த்தது” என்று சொல்ல
வேண்டும். இப்படிப் பட்ட விஷயங்களுக்கு “நேர்ந்தது” என்பதே சரியான வார்த்தை.)
நகைச்சுவை எப்படி அசிங்கமாக இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் வடிவேலு, விவேக்
சம்பந்தப் பட்ட காட்சிகள். உடம்பின் படக்கூடாத பகுதிகளில் அடிபடுவதெல்லாம் ஹாஸ்யமா?
இன்னொரு விஷயம். கருப்பாக இருப்பவர்களைக் கிண்டல் செய்து ரஜினியின் சிவாஜி தொடங்கி
இன்று வந்துள்ள புதுப்படங்கள் வரை பல காமெடி காட்சிகள் வந்துள்ளன. இது நிற
வெறியின்பாற் படுமா படாதா என்று தெரியவில்லை “கருப்பாய்ப் பிறந்தவர்கள் சங்கம்”
என்று ஒன்று ஆரம்பித்து இது குறித்துக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று
தோன்றுகிறது.
***
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகின்ற இந்தியர்களுக்கு மற்ற உலக நாடுகளில் பணி
புரிபவர்களை விட மிக அதிகமான ஊதிய உயர்வு 2008ல் கிடைக்குமாம். இந்த ஊதிய உயர்வு
உலகின் மற்ற நாடுகளில் பணிபுரிபவர்களின் உயர்வை விட 14 சதவிகிதம் அதிகமாக இருக்கும்.
பணியாளர்களை தக்க வைத்துகொள்ள வேண்டும் என்ற நிறுவனங்களின் ஆர்வமும், நிறுவனங்கள்
பெறும் அதிக லாபமும் பணவீக்கத்திற்கு ஈடுகட்டலுமே இந்த அபரிமித உயர்வுக்குக்
காரணங்களாம்.
***
2007ம் ஆண்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களைத் தேர்ந்தெடுக்க
என்.டி.டி.வி. நடத்திய நேயர் வாக்கெடுப்பின் அடிப்படையில் 2007ம் ஆண்டின் சிறந்த
தலைவராக பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த பொழுதுபோக்காளர்
விருது ரஜினிகாந்த்துக்கும், விளையாட்டு வீரர் விருது விஸ்வநாதன் ஆனந்த்துக்கும்,
சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கும் கிடைத்துள்ளன. கடந்த டிசம்பர்
மாதம் முழுவதும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நேயர்கள் கலந்து கொண்டனர் இந்த
தேர்ந்தெடுப்பில்.
***
ஒன்றாய் மரணித்த மூன்று சிங்குகள்:
பியாண்ட் சிங் என்ற ஒரே பெயரைக் கொண்ட மூன்று பேர் ஒரே நாளில் பஞ்சாப் மாநிலத்தில்
முக்ஸ்தார் என்ற மாவட்டத்தில் உள்ள கவுனி கிராம்த்தில் சிறிதுகால நோய்க்குப் பின்
இறந்திருக்கிறார்கள். நாலாவது பியாண்ட் சிங் ஒருவரும் கவலைக்கிடமான நிலையில்
இருக்கிறாராம்.
|