இது போன்ற மனமகிழ் கலைகள் இருப்பதே நமக்கு இது போன்ற விழாக்களின் மூலமும், குடியரசு, சுதந்திர தின விழாக்களின் போதும்தான் அறிய முடிகிறது.
ஹாய் ஃபிரெண்ட்ஸ்!
அருமையா இருக்கீங்கதானே?
சூரிய கிரகணமெல்லாம் பார்த்து என்ஜாய் பண்ணீங்களா? நாங்களும் பார்த்து ரசித்தோம். விருதுநகரில் முழுமையான கங்கண சூரிய கிரகணம் தெரிந்தது. இதோ நாங்கள் எடுத்த போட்டோக்கள்.
வழக்கத்திற்கு மாறாக அன்று சூரியன் சுள்ளென உறைத்துக் கொண்டிருந்தான். எக்ஸ்-ரே ஷீட்டுகளை உபயோகித்துப் பார்த்தோம். அவற்றை உபயோகிக்கக் கூடாதென்றும், கண்கள் கெட்டு விடும் என்று இணையத் தேடலின் போது பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் அப்படி ஒன்றும் ஆகவில்லையே!
நல்லவேளையாக, கிரகணத்தையெல்லாம் பார்த்து முடித்த பின்னர் அதை நெட்டில் தேடிப் பார்த்தேன்!! முதலிலேலேயே பார்த்திருந்தால் பயம் காரணமாய் அருமையான தருணங்களை அனுபவிக்காமலே விட்டிருந்திருப்போம். முழுமையான கிரகணத்தின் போது நல்ல குளிர்ச்சியை உணர்ந்தோம். சிலுசிலுவென குளிர் காற்று வீசியது அருமையான அனுபவம்!
எக்ஸ்-ரே ஷீட்டின் கருமை நிறப்பகுதி வழியே கிரகணத்தைப் பார்க்கலாம். அல்லது, இரண்டு நான்காக மடித்து வைத்துக் கூடப் பார்க்கலாம். மிகவும் குளுமையாகவே இருந்தது. அதிலும் MRI ஸ்கேன் ஷீட்டின் கருமை நிறப் பகுதி வழியே காணும்போது இன்னும் சிறப்பாகத் தெரிந்தது. மேலேயுள்ள படங்களில் முதல் படம் MRI ஸ்கேன் ஷீட்டின் வழியாகவும், இரண்டாம் படம் எக்ஸ்ரே ஷீட்டின் வழியாகவும் எடுக்கப்பட்டது.
நேரிடையாக சூரியனைப் பார்த்து கேமராவால் சுட்டால் கண் பார்வை அரோகராதான்! கேமராவின் லென்ஸ் சூரிய ஒளியைக் குவியச் செய்து, அதீத ஒளியினால் நம் கண் பார்வையை இழக்கச் செய்துவிடும்!
கிரகண நிகழ்வின் போது சாப்பிடத்தான் செய்தோம். நன்றாக ஜீரணம் ஆனது!! சாப்பிட்டால் பெரிய அளவில் உடல் பாதிப்பு இருக்கும் என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை!
இதற்கு முதல் நாள் இரவில் விருதுநகரில் கலைப்பொங்கல்-2012 விழா நடந்தது. சென்னை சங்கமம் போல அரசினால் பிரம்மாண்டமாய் நடத்தப்பட்டது. தென்னகத்து சங்கமம் என்று கூறுமளவிற்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் குவிந்து பார்வையாளர்களுக்கு விருந்தளித்தனர்.
தமிழ்நாட்டுக் கலைகள் மட்டுமல்லாது கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலக் கலைகளும் பிரம்மாண்ட மேடையில் அரங்கேறியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் எம்.பி. மாணிக்கத் தாகூர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிஜி தாமஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்கள் மோகமுள், கோலங்கள் புகழ் அபிஷேக் மற்றும் சரஸ்வதி. நகைச்சுவை ததும்பப் பேசியும், பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியும் நிகழ்ச்சியைக் களை கட்டச் செய்தனர். ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் என்று அறிவித்து விட்டு விஐபிக்களின் 'வழக்கமான' தாமத வருகையால் ஏழு மணிக்கு மேல் ஆரம்பித்தது. பதினோரு மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கலைகள், பிற மாநிலப் பாரம்பரிய நடனங்கள், கலைக் கூத்துகள், திரைக்கலைப் படைப்புகள், தவில் நாதஸ்வர இசை, தப்பிசை, சிலம்பாட்டம், பரதநாட்டியம் என அழகுற நடைபெற்றது கலைப் பொங்கல் விழா.
அபிஷேக் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தான் முதன் முதலாய் இயக்கும் 'கதை' என்னும் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டை மேடையிலேயே நிகழ்த்தினார். அமைச்சர் குறுந்தகடை வெளியிட, பிரபல இசைக் கலைஞர்கள் பங்கு பெறும் படத்தின் ஒரு பாடல் காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.
விழாவின் இறுதியில் அனைத்துக் கலைஞர்களும் மேடையில் ஏறி நடனமாடியது சங்கமம் திரைப்படத்தின் இறுதிக்காட்சியை நினைவுபடுத்தியது. அதிலும் குறிப்பாக, அமைச்சரும், மாவட்ட வருவாய் அலுவலரும் அந்நடனத்தில் பங்கு கொண்டு ஆடி கலைஞர்களை உற்சாகப்படுத்தியது கூடுதல் ரசிப்பைத் தந்தது. விழா முடிவில் 15 நிமிட பிரம்மாண்ட வாண வேடிக்கைகளும் களிப்புறச் செய்தன.
இது போன்ற மனமகிழ் கலைகள் இருப்பதே நமக்கு இது போன்ற விழாக்களின் மூலமும், குடியரசு, சுதந்திர தின விழாக்களின் போதும்தான் அறிய முடிகிறது. காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தங்களையும் வடிவமைத்துக் கொள்ளும் இன்றைய இளைய தலைமுறையிடம் இது போன்ற கலைகள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பதென்னவோ உண்மைதான்.
"கலைவிழான்னு சொன்ன உடனே 'மானாட மயிலாட' மாதிரி ஏதாவது டான்ஸ் நிகழ்ச்சியா இருக்கும்னு நெனச்சி வந்தேன்" என்று சில மாணவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்க முடிந்தது!
வெள்ளமென மக்கள் திரண்டிருந்த போதிலும் பாதிக் கூட்டம் இரவு பத்து மணிக்குள் காலாவதியானது வருத்தம் தரச் செய்தது! கலைஞர்களுக்கு விருதுகளை விட பெருந்திரளாய்த் திரண்டிருக்கும் மக்களின் கரவொலிதான் இதயத்தைக் குளிர்விக்கும் சாரல். தொடர்ந்து இது போன்ற விழாக்கள் நடைபெற்று நம் பழங்கலைகள் காக்கப்பட வேண்டும்.
நானும் ஒரு சில படங்களை எடுத்தேன் எங்கள் வீட்டு மாடியிலிருந்து. ஒன்றை மட்டும் என்னுடைய net log இல் போட்டுள்ளேன். கிரகணம் முடிந்தபின் குளித்துவிட்டு பின்னர் உண்ண வேண்டும் என்பது சம்பிரதாயம். அறிவியல் விளக்கம் அறியேன். பெரும்பாலான நமது சடங்கு, சம்பிரதாயங்களில் ஓரளவு அறிவியலின் அடிப்படை இருக்கும்.
எப்படியோ நீங்கள் பொங்கலை நல்லா கொண்டாடியிருக்கீங்கனு தெரியுது. கிராமங்களில் தான் சிறப்பாக கொண்டாடுகிறார்கள் இங்கே எல்லாம் அன்னைக்கு டிவியில் என்ன ப்ரோகிராம் என்றுதான் பார்க்கிறார்கள்.
வணக்கம் ரிஷி. நாங்களும் ஒரு நண்பர் சொன்னதின் பேரில் எக்ஸ்ரே வழியாக சூரிய கிரகணத்தை பார்த்தோக். அந்த நண்பருக்கு இந்த வேளையில் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்க வேண்டும். எங்களுக்கும் கண்கள் எதுவும் பாதிக்கவில்லை! நாங்களுக் நன்றாக அந்த வேளைகளில் சாப்பிட்டோம். இது வரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அப்புறம் உங்கள் ஊர் பொங்கல் திருவிழாவிற்கு எங்களையும் அழைத்திருக்கலாமே? நாங்களும் குடும்பத்துடன் வந்து விழாவை சிறப்பித்திருப்போமே!
வணக்கும் பாலு சார், பெரும்பாலான நம் நம்பிக்கைகளுக்கு ஓரளவு அறிவியல் அடிப்படை இருக்கக்கூடும் என்பது உண்மைதான். அது உடனடியாய் அனுபவத்தில் உணர முடியாததால் மூட நம்பிக்கையாய் இருக்குமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.
வாங்க பிரேம்ஸ். பொங்கல் விழாவிற்கு அழைத்திருக்கலாம்தான். இந்த யோசனை இல்லாமல் போய்விட்டது. நிச்சயம் அடுத்த முறை அழைக்கிறேன்.. விருதுநகரில் மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் பிரசித்தி பெற்றது. அது சமயம் மறக்காமல் ஊருக்கு வாங்களேன். மூன்று நாள் திருவிழா சிறப்பாக நடக்கும்.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X