 |
இதழ் 455 |
 |
பிப்ரவரி 08 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (46)
- ச.நாகராஜன் |
| | ''நான் ஆழ்ந்த பொருளும், சாரமும் உள்ள பாடல்களையே விரும்புகிறேன். பெயர், புகழை விட இசையே என்னைக் கவரும் விஷயம்'' என்ற இவர் கூறியதன் பொருள் இவரது பாடல்களை உற்றுக் கவனிப்போருக்கு நன்கு புரியும்!
 ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!
1971ம் ஆண்டு வெளி வந்த 'குட்டி' என்ற ஹிந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற 'போலோ ரே பப்பி ஹரா' என்ற பாடல் இந்திய நாடெங்கும் ஒலித்தது. பாடலைப் பாடிய வாணி ஜெயராம் ஒரே நாளில் பிரபலமானார்.
வெல்லூரில் பிறந்த வாணி ஜெயராம் கர்நாடக சங்கீதத்தை முறைப்படி பயின்றவர். அவரது ஆசை திரைப்படப் பாடல்கள் பாடும் பின்னணிப் பாடகியாக ஆக வேண்டும் என்பதுதான்! அதை வசந்த் தேசாய் ஏற்படுத்தித் தர, ஹிந்துஸ்தானி ராகமான மியன் மலஹாரில் வெளுத்துக் கட்டி விட்டார்.
சித்ரகுப்த், நௌஷாத், மதன் மோஹன், ஓ.பி.நய்யார், ஆர்.டி.பர்மன், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால், ஜெயதேவ் என்று எல்லா ஹிந்தி இசை அமைப்பாளர்களும் இவரை விரும்பி அழைத்தனர். 1979ல் வெளியான 'மீரா' படத்தில் பண்டிட் ரவி சங்கர் இவருக்கு பாட வாய்ப்பைத் தந்தார். பாடல்கள் இவருக்கு ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தன.
தமிழில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இவருக்கு 1973ல் வாய்ப்பைத் தர, பின்னர் ஏராளமான தமிழ்ப் படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. மும்பையிலிருந்து சென்னைக்கே வந்து குடி புகுந்தார். ராஷ்ட்ரபதியின் தேசிய விருதை 1975ல் பெற்றார். மீண்டும் ஒரு முறை இந்த விருதை 1980ல் பெற்றார்.
எம்.எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த 'அபூர்வ ராகங்கள்' படம் இவரது திறமையை நன்கு வெளிப்படுத்தியது. அதை விட ஒரு படி மேலே போய் கே.வி.மஹாதேவன் தனது சங்கராபரணத்தில் இவரைப் பாடச் சொல்ல, நாடெங்கும் வாணி ஜெயராம் அலை வீசியது! 'ருணானு பந்தாச்சய' என்ற இவரது மராத்தி பாடல் ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரான குமார கந்தர்வனுடன் இவரைச் சேர்த்துப் பாட வைத்தது!
''நான் ஆழ்ந்த பொருளும், சாரமும் உள்ள பாடல்களையே விரும்புகிறேன். பெயர், புகழை விட இசையே என்னைக் கவரும் விஷயம்'' என்ற இவர் கூறியதன் பொருள் இவரது பாடல்களை உற்றுக் கவனிப்போருக்கு நன்கு புரியும்!
1975ல் வெளியான 'அபூர்வ ராகங்கள்' பல விதங்களில் தனித்துவம் பெற்ற படம். இதன் கருவே சற்று மாறுபட்ட விமரிசனத்தை ஏற்படுத்தியது. விவகாரமான சலனத்தினால் ஏற்படும் உறவு பற்றிய கதை. இயக்குநர்: கே.பாலசந்தர். அவரது தனி பாணி பாடல்களில் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லி கதையை நகர்த்துவது! ஆகவே அவர் படப்பாடல்களில் கதை விளக்கம், கதைச் சுருக்கம், பாத்திரங்களின் தனித்தன்மை எல்லாம் அடங்கி இருக்கும். இப்படிப்பட்ட பாடலைத் திறம்பட எழுதுபவர்களுள் முதல் இடத்தைப் பிடிப்பவர் கவியரசர் கண்ணதாசன்தான்!
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முதன் முதலாக தமிழ்த் திரை உலகத்தில் பிரவேசித்தார். கமலஹாசனை பெரிய கதாநாயகனாக ஆக்கி புகழ் பெறச் செய்த படம் இது! இதில் இடம் பெற்ற பாடல்களுள் இரண்டை வாணி ஜெயராம் பாடினார். மேடையில் ஸ்ரீவித்யா பாடும் பாடல் அவருக்கு புகழ் ஈட்டித் தந்த பாடலாக அமைந்தது. பாடலைப் பார்ப்போம்: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி பதில் கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை பின்பு அடுத்தடுத்த நடப்பும், உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்தி விடு, மறைந்திடும் பாவம்
நாளை பொழுது உண்டு நமக்காக வாழ அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல
பந்துவராளி ராகத்தில் ஸ்வர ஏற்ற இறக்கங்களுக்கேற்ப சிறகடித்துப் பறந்த வாணி ஜெயராம் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துக் கொண்டார்.
தெலுங்குப் படமான 'சங்கராபரணம்' படத்தில் 'மானஸ ஸஞ்சரரே' என்ற கீர்த்தனைப் பாடலும் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. தனக்கென ஒரு பாதையைத் தானே வகுத்துக் கொண்டு அதில் தடம் பிறழாமல் சாஹித்திய நடனம் ஆடும் நாரீமணி வாணி ஜெயராம் என்றால் அது சாலப் பொருந்தும்!
பாடலை எழுதிய கண்ணதாசனும் அரிய உண்மைகளை பாடல் வரிகளில் சரமாரியாகப் பொழிந்து தள்ளி இருக்கிறார். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், அந்தப் பாடல்களில்தான் எத்தனை ராகம், எத்தனை அர்த்தம்!
இசைக்கடலின் அத்தனை துளிகளையும் பருகி விட நினைத்தாலும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் முடியுமா? சில ராகங்கள், சில பாடல்களைத்தானே சுவைக்க முடியும்! மென்மையான பாடல்கள் ஒரு வகை ரகம் என்றால் பழைய படங்களில் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம் பெறும் டான்ஸ் பாடல்கள் இன்னொரு ரகம்!
பம்பர பம்பர பம்பா பூம், ஜிம்பர ஜிம்பர ஜிம்பா பூம் என்று பாடலை உதிர்த்து ஆனந்த நடனத்தை மாறுவேஷத்தில் பெரிய கூட்டத்துடன் ஆடியவாறே கதாநாயகன் எதிரியின் கோட்டைக்கு வருவார். அங்கே திடீரென்று கூட்டத்தை விட்டு விட்டு நாயகி இருக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பார் அல்லது எதிரியின் நாசகார வேலைகளைக் கண்டு பிடிப்பார். இப்படிப்பட்ட பாடல்களில் ஏராளமான துணை நடிகர்களும் நடிகையரும் பங்கேற்பர்.பாடல் சுமாராக இருந்தாலும் நடனம் கூச்சலுடனும் அதிக வாத்திய இசையுடனும் இருக்கும். இந்த ஃபார்முலா பாடல்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் படங்களில் இடம் பெற்று வந்தன.
ஆனால் விசித்திரத்திலும் விசித்திரமாக, பின்னால் வந்த கமலஹாசன், ரஜினிகாந்த் படங்களிலும் கூட இது மாறவில்லை. முதலில் சரித்திரப் படங்களில் ஆரம்பித்த இந்த 'இசை வியாதி' சமுகப் படங்களுக்கும் பரவியது.
ஏராளமான துணை நடிக நடிகையருக்கு வாழ்வு அளிக்கும் காட்சிகள் இவை. இதில் கிடைக்கும் சொற்பப் பணம்தான் அவர்கள் வாழ்வின் ஜீவாதாரம்! ஆனால் இதை எடுக்க அதிக கஷ்டப்பட வேண்டும்!
பிரபல திரைப்பட இயக்குநரான சிசில் பி.டெமிலியை உலகம் நன்கு அறியும். இவரது டென் கமாண்ட்மென்ட்ஸ் படத்தைப் பார்க்காதவர் இருக்க முடியாது! பிரம்மாண்டமான செட்டுகளில் ஏராளமான துணை நடிகர்கள், நடிகையர்களை வைத்து உலகையே வியக்க வைக்கும் காட்சிகளை எடுப்பது இவரது வழக்கம்.
இவரைப் பற்றிய சம்பவங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் இரண்டைப் பார்த்தால் இத்தனை துணை நடிகர்களை வைத்து காட்சிகளை அமைக்கும் சிரமம் புரியும்!
(தொடரும்)
|
| | ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள்.
| திரைச்சாரல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|