தினந்தோறும் தீபாவளி
கொண்டாடுது எம்மனசு
வாணமாய் என்னவளிருக்கையில்..
உள்ளத்தைத் தொட்டுச்
செல்லுது தென்றல் காற்று
உற்றவளின் வருகை தூரத்தில்..
ஹாய் ஃபிரெண்ட்ஸ்!
வணக்கம். காதல் புரியும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!
நம்ம வாசகி பூர்ணசெல்வி ஒரு ஹைக்கூ அனுப்பியிருந்தாங்க. அழகாய் இருந்தது. இதோ அக்கவிதை :-
என்னைத் தெரியவில்லையா, உனக்கானவளின் கவனச்சிதறல்... தரையில் கிடந்த மலர்கள்
ஒரு ஹைக்கூ மட்டும் அனுப்பியிருந்ததால் தனியாக பப்ளிஷ் செய்ய முடியவில்லை. செல்வி! நிறைய எழுதுங்கள்; நிறைந்து எழுதுங்கள்; நிறைவாய் எழுதுங்கள்! பெயரிலேயே நிறைவை, முழுமையை வைத்துக் கொண்டு எங்களுக்கு கொஞ்சமாய்க் கொடுத்தால் எப்படி? நம்ம மாமதயானையைப் போல் வாரி வழங்குங்களேன் ஹைக்கூக்களை!
பஞ்ச பூதங்களை என் வசப்படுத்தி நான் தீட்டிய கவி மாலை இது! இயற்கையுடன் ஒன்றிணைந்து இயல்பாய் நான் வடித்த பொன் ஓலை இது. இது எப்படி இருக்கு? ரிஷி கலக்குறடா..!! (அப்படினு நீங்க சொல்றது எனக்குக் கேட்குது!)
காதலர்களுக்காக ஏதாவது பொதுச் சேவை செய்யணுமே! என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ இந்த ஐடியா வந்தது. ஒவ்வொரு மொழியிலும் காதலிப்பதை எப்படிச் சொல்வார்கள் என்று நாம் சொல்லலாமே என்று நினைத்தேன்.
நான் உன்னைக் காதலிக்கிறேன் - தமிழ் ஐ லவ் யூ சோ மச் - ஆங்கிலம் மெய்ன் தும்செ பியார் கர்த்தி ஹூன் - ஹிந்தி நெனு நின்னு ப்ரெமிஸ்துன்னானு - தெலுங்கு ஞான் நின்னே ஸ்நேஹிக்குன்னு - மலையாளம் நானு நின்னனு ப்ரீதிசுதெனெ - கன்னடம் முஜே தும்செ முஹபாத் ஹை - உருது
காதலர்களே! இப்படிச் சொல்லி உங்க துணையை அசத்துங்க. எல்லாம் 'ரிஷி உபயம்' என்று அப்படியே நம்மளையும் கோர்த்து விடுங்க.. ப்ளீஸ்!
அப்புறம், நிலாச்சாரல் பலருடைய மனதிற்கும் இனிமையாய், குளுமையாய் விளங்குவதாக அறியும்போது, உணரும்போது மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. மகிழ்ச்சிக்குக் காரணம், எழுத்தாளர் கே.எஸ்.இளமதி அவர்களை நமக்கு அறிமுகப்படுத்திய நமது நீண்ட கால வாசகர் எஸ்.எஸ்.மனோகரன் அவர்கள். அவரது அன்பிற்கு நம் தலை வணங்கல் உரித்தாகிறது.
இளமதி நமக்காக தம் படைப்புகளை அனுப்பித் தர இசைந்துள்ளார். என்னிடம் அரை மணி நேரம் தொலைபேசியில் கதைத்த அவர், ஆசிரியருக்கு எழுதிய மடலில் தெளிந்த நீரோடையாய், குளிர் சாரலாய் ரிஷி பேசியது மனதுக்கு இதமளித்தது என சிலாகித்திருந்தார் போலிருக்கிறது. ஆசிரியரிடமிருந்து தகவல் வந்தது. (வச்ச அந்த ஐஸில் பிடித்த ஜலதோஷம் இன்னும் தீரவில்லை!!!!)
இளமதி கிட்டத்தட்ட 16 நூல்களை வெளியிட்டிருக்கிறார். பெரும்பாலானவை ஆன்மிக, சுயமுன்னேற்ற வகைகளைச் சார்ந்தவை. நாவல்களும் எழுதியிருக்கிறார்.
இதெல்லாம் போக, இளமதி யோகாசனப் பயிற்சி நிபுணராகவும் இருக்கிறார். அழைத்தால் நம் வீட்டிற்கே வந்து, அருகில் இருந்து கவனித்து யோகா சொல்லிக் கொடுக்கிறார். அவரைப் போலவே அவரது மனைவியும் யோகாசனக் கலையில் நிபுணர். அவர்தம் சிறார்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லர். அவர்களும் குழந்தைப் பருவத்தினருக்கு ஆசனப் பயிற்சிகளை அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலாச்சாரலின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் இதைச் செய்திருக்கும் மனோகரன் போல இன்னும் பற்பல நல்லுள்ளங்களின் நேரடி, மறைமுக உதவிகள் தமிழ் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் பெரிதும் பயனளிக்கின்றன.
ஆசிரியர் இதைப் பற்றிப் பேசும்போது நான் காசு பணத்தை சம்பாதித்ததை விட, சொந்த பந்தங்களை சம்பாதித்ததை விட அதீத திருப்தி இந்த எழுத்தாள, வாசக உறவுகளை சம்பாதித்ததில்தான் என்று மகிழ்வுடன் கூறுகிறார்.
இத்திருப்தி ஆன்மாவை வருடிச் செல்லும் திருப்தி. நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பயணித்தாலும், ஓடிச் சம்பாதித்தாலும் உங்கள் ஆன்மா திருப்தியடையாவிடில் வாழ்ந்ததில் என்ன அர்த்தமிருக்கிறது? இது என் கருத்து. உங்கள் கருத்து என்னவோ?!
மனிதன் ஒரு சமுதாயப் பிராணி. நல்லதோ, தீயதோ ஒருவர் செய்யும் செயல் வேறோரிடத்தில் நிச்சயம் எதிரொலிக்கவே செய்கிறது. நல்லவை நேர்மறை அதிர்வுகளையும், தீயவை எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
ரத்தமும் சதையுமாய் உயிர்ப்புடன் விளங்கும் மனிதர்கள் நாம்! எவ்வகையிலும் யாருக்கும் பொல்லாங்கு நினையாமல் நம்மால் இயன்றவரை சமாதானமாய் நேர்மறை அலைகளை ஏற்படுத்துவோம். எதிர்ப்பகுதியில் பட்டு அவ்வலைகளே மீண்டும் நம் பக்கம் திரும்பி நம்மை ஆதூரமாய் வருடிச் செல்வதை அனுபவிப்போம்.
அய்யே! ஏம் பையா.. இம்புட்டு சீரியஸா போற... கொஞ்சம் ஜாலியா இரு கண்ணான்னு சொல்றவங்களுக்காக இப்படம்!
ஊருக்குள்ள பஞ்சாயத்து பேச நம்மளக் கூப்பிட்டாய்ங்க.. கெளம்பிட்டோம்ல...!! போயி உட்கார்ந்துட்டோம்ல...!! அட! ஆமப்பு.. வேஷ்டி கட்டினாத்தான் பெரிய மனுஷன்னு மதிக்கறாய்ங்க...!!!
இந்த அவய்ங்க, இவய்ங்க அப்படினு பேசற வழக்கு தெற்கே மதுரையைத் தாண்டியும், கோவில்பட்டிக்கு முன்னாடியும் இருக்கற சுத்துப்பட்டு பதினஞ்சு இருபது தாலுகாக்களில் இருக்கு மக்களே! தப்பா எடுத்துக்காதீங்க.. இங்க இயல்பா அது பேச்சு வழக்கில இருக்கு.
ஒரு தடவை கொடைக்கானலுக்கு நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து போயிருந்தோம். அது இருபது வயசு காலகட்டங்கள்ல. படகுத் துறைக்குப் போயிட்டு ரொம்ப நேரம் படகு வர்றதுக்காகக் காத்துக் கிடந்தோம். ஏரிக்குள்ள போயிருந்த படகுகள் வர கொஞ்சம் லேட் ஆச்சு.
இருந்தாலும் நாங்க நின்னுக்கிட்டிருந்த கரையோரம் சில படகுகள் சும்மா நிக்க.. நம்மாளு ஒருத்தன் "ஏண்டா.. இவய்ங்க இந்தப் படகையெலாம் எடுக்க மாட்டாய்ங்களா.. சும்மாதானே நிக்குது.. எடுத்தாத்தான் என்னவாம் இவிய்ங்களுக்கு!" என்று கூவினான் எங்களிடம்.
பக்கத்துல உட்கார்ந்திருந்த அந்த ஊர்க்காரப் பெருசு ஒண்ணு, நம்ம பையனுக்கு முன்னால் வந்து நின்னு, ஏற இறங்கப் பார்த்துச்சு! "தம்பிங்கள்லாம், சிவகாசி விருதுநகர் பக்கமா"ன்னு கேட்டுச்சு! "பார்த்துப் போயிச் சேருங்க, தம்பி. அப்படியெல்லாம் மரியாதையில்லாம இங்கப் பேசப் படாது..புரியுதா.." என்று ஏதோ காந்தாரியோ கல்யாணியோ அந்த ராகத்தில் பாட ஆரம்பித்து அட்வைஸ் மழையை பொழிந்து தள்ளி விட்டார். தண்ணிப் பக்கத்தில் நின்னுக்கிட்டு கண்ணில் தண்ணி வராத குறைதான் எங்களுக்கு!
'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி'ன்ன கதையா... 'சும்மா கெடந்த பெருசைக் கூப்பிட்டு இப்படி ராகம் பாட வச்சிட்டானே'ன்னு அப்புறம் படகு சவாரியில் இறங்கிய பின் அந்த நண்பனை நாங்க பொளந்து கட்டினோம்!
இப்படித்தான் ஊருக்குள்ள சில நேரங்கள்ல நமக்கு ரெஸ்பெக்டே போயிடுது!! (நந்தா கருணாஸை எல்லாம் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டாம்!!) அதனால் இப்போல்லாம் எந்த ஊருக்குப் போனாலும் சரி.. நம்ம ஊரு வாசனை தெரியாம பேச்சை சாதூரியமா பார்த்துப் பார்த்துப் பேசறது பழகிடுச்சு! ஊருக்குள்ள 'அண்ணே அண்ணே'ன்னு கூப்பிட்டு விட்டு, திருச்சிக்குப் போனா.. 'அண்ணா அண்ணா'ன்னு கூப்பிட வேண்டியிருக்கு.
ஆனாலும்.. என்னதான் சொல்லுங்க! திருச்சியில இருந்து திரும்பி வரும்போது மதுரையில விருதுநகரோ.. இல்ல சிவகாசி பஸ்ஸையோப் புடிச்சி கண்டக்டர்கிட்ட "அண்ணே! விருதுநகர் ஒன்னுண்ணே!"ன்னு பத்து ரூவாயைத் தூக்கிக் கொடுக்கறதுல இருக்கற சுகம் இருக்கே.. அப்பப்பா!!
வணக்கம்! ரிஷி. கவிதையில் கலக்குறீங்க. இந்த மொழிகளில் நீங்கள் எந்த மொழியை பயன்படுத்துனீங்க? மதுரை தமிழில் பேசுவது என்றால் அது ஒரு சுகம்தான். நாங்களும் மதுரை பக்கங்தேன். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியாக்கும். வாக்கப்பட்டு வந்த இடம்தான் கோவையாக்கும். மரியாதைக்கு பெயர் போன ஊராக்கும். அதனால் அண்ணே, அண்ணா எல்லாவற்றிலும் நாங்களும் இடத்திற்குத் தகுந்தாற்போல் மாறிக்குவோம்ல. எழுத்தாளர் கே.எஸ். இளமதிக்கு நன்றி எங்கள் சார்பில் சொல்லிவிடவும். உங்கள் எழுத்துக்கள் போன்றே உங்களின் பேச்சும் சுவராஸ்யமாய் இருக்குமோ, பார்க்கலாம் நம் சாட்டிங்கில். (இருந்தாலும் கொஞ்சம் ஐஸ் ஓவர்தான்.)
பாலு சார் படிப்பிற்குப் பின் தமிழை விட்டு ஒதுங்கியே இருந்த எனக்கு நிலாச்சாரல் அறிமுகம் இன்ப அனுபவம்தான்! தினந்தோறும் தமிழ் எழுத எழுத, சொற்களைக் கையாளக் கையாள பரவசமேற்படுவது என்னவோ உண்மைதான், அது தமிழின் எந்த வடிவமாயினும்!
வணக்கம் பிரேம்ஸ்! அப்படியே பேச்சுவாக்கில கோர்த்து வாங்கக்கூடாது. நாங்க அலர்ட் ஆறுமுகம்ல!! இளமதிக்கு உங்கள் சார்பில் நன்றி சொல்லிவிடுகிறேன். நானும் உங்களைப்போல வாழ்க்கைப் பயணத்தை நகர்த்திச் செல்லும் சக பயணிதான்! சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமா என்ன! அப்பப்போ கேப்புல இந்த பரமக்குடி, கோவை புராணம் பாடறீங்களே! வீட்டுல அண்ணனை ரொம்பக் கேட்டதாச் சொல்லவும்!
வணக்கம் ரிஷி! விருதுநகர், சிவகாசி புராணத்தைவிடவா நான் எங்கள் ஊர் புராணம் பாடிட்டேன்...? பெண்கள் எப்பொழுதுமே பிறந்த இடத்தையும், புகுந்த இடத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாதுல. நாங்கல்லாம் ரொம்ப நல்ல.....பொண்ணுங்களாக்கும். கண்டிப்பா உங்கள் அண்ணனை கேட்டதா சொல்றேன்.
பிரேம்ஸ்! //பெண்கள் எப்பொழுதுமே பிறந்த இடத்தையும், புகுந்த இடத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாதுல. நாங்கல்லாம் ரொம்ப நல்ல.....பொண்ணுங்களாக்கும். // உங்களை நெனச்சா எனக்குப் பெருமை..பெருமையா இருக்கு..! இனிமையான வாழ்க்கை என்றும் தொடர வாழ்த்துக்கள்!
கவிதா என்னதான் இலைக்குள்ள காயை மறைச்சாலும் காய்க்குள்ள இலையை மறச்சாலும் உண்மைக்குள்ள பொய்யை வைக்க முடியாது பொய்க்குள்ள உண்மைய வைக்க முடியாது..! வச்சாலும் எடுக்க முடியாது.. எடுத்தாலும் வைக்க முடியாது.. (அப்பாடி நம்மளால முடிஞ்ச அளவுக்குக் குழப்பியாச்சு!!! இனிமே இந்தக் கேள்வி கேட்க மாட்டாங்க..)
ஆக மொத்தத்துல நான் எழுதினதை கவிதைன்னு நீங்கள்லாம் கன்ஃபர்ம் பண்ணதே எனக்குப் பெரிய விஷயம்தான்! :-)
கவிதா, ரிஷி காதல் வலையில் விழுந்துவிட்டது அவங்க எழுதியிருக்கிற முதல் வரியிலேயே தெரியலயா.......? ("கவிதைகளையே அதிகம் வாசித்திராத, அதிகம் விரும்பியிராத நான் சமீப காலமாய் நிறைய வாசித்து மகிழ்கிறேன். என்ன ஆச்சு எனக்கு?!")
கவிதா தேவிகா எல்லோருக்கும் ஒண்ணு சொல்றேன்.... நான் பல வாரங்களுக்கு முன்பே அதைக் கண்டுபிடிச்சுட்டேன். யாரும் அதைக் கண்டுகிட்ட மாதிரியே தெரியலை... நம்ம ரிஷியும் கழுவுற மீன்ல நழுவுற மீன் மாதிரி போறாப்ல. இந்த ரிஷிங்கற பேர்தான்(அப்பப்போ ஓவரா தத்துவம் வேற எழுதறாப்ல) பிரச்சனையோ? நம்ம எல்லோரும் வேணா ஒரு நல்ல பேரா வெச்சுருவோம்.
என்னங்க இங்கே நடக்குது? எல்லோரும் சேர்ந்து ஏன் எங்கள் தலைவரை இப்படி கலாய்க்குறீர்கள்? இந்த கொ.ப.செ இருக்கும் வரை எங்கள் தலைவரை அசைக்க முடியாது! நண்பர் பாலசுந்தர் அவர்களே! அது என்ன தனி குழு அமைக்கப் போகுறீர்கள்? எங்கள் தலைவரின் தம்பியாக இருந்து கொண்டு நீங்களே இப்படி அண்ணனை கண்காணிக்க குழு ஏற்பாடு செய்யலாமா? முடியலை...அழுதுருவேன்... கவிதா! யார் என்னை எப்படி கவனித்தாலும் எங்கள் தலைவருக்கு எங்கள் அணி துரோகம் செய்யாது. :-))))