Home  
இதழ் 455

பிப்ரவரி 08 2010


www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
chiranjeevi
7th Sense
Home>>தொடர்

உறுதுணை தேடுமின் (9)
- அமர்நாத்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

திங்கள் வேலைக்குச் சென்றபோது பெரியசாமி அவளுடைய பார்வையில் படாமல் நழுவியதுபோல் தோன்றியது. அச்சமா, இல்லை கோபமா என்று தெரியவில்லை.

சனிகாலை எட்டுமணியைத் தாண்டியபோது சென்ட்ரல் அபார்ட்மென்ட் தொகுப்பிலிருந்து வெளியே வருமிடத்தில், ஆன்டர்சன் தெருவின் ஓரத்தில் சரவணப்ரியா காத்திருந்தாள். சாமி பயன்படுத்தும் பழைய நிஸான் காரின் கண்ணாடி ஜன்னல்கள் கறுப்பாக இருக்குமென்று அதை ஓட்டிவந்தாள். சனிக்கிழமைகளில் வேலைக்கு வருவது அவளுக்குப் பிடித்தமானதல்ல. இந்தியாவில் அரைநாள் என்றுபெயர். வீட்டிற்கு வரும்போது பிற்பகல் மூன்றுமணி ஆகிவிடும். விடுமுறை உணர்வே வராது. அதனால் யூ.எஸ். வந்தபிறகு சனிக்கிழமைகளில் வேலை செய்யும் வழக்கத்தை வைத்ததில்லை.

அந்த வேளையில் அங்கிருந்த எல்லாக் கட்டடங்களும் அமைதி காத்தன. எட்டரை வரையில் அவளைத் தாண்டிச் சென்ற ஊர்திகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணலாம். பிறகுதான் கரும் பச்சை டொயோடா கொரோல்லா கண்ணில் பட்டது. அது வளாகத்திலிருந்து வெளியே வந்து தெருவில் வலது புறமாகத் திரும்பிய பிறகுதான் சரவணப்ரியா தன் காரை வேகமாகக் கிளப்பினாள். கொரோல்லா எர்வின் தெருவில் இடப்பக்கம் திரும்பக் காத்திருந்த போது அதைப் பிடித்து விட்டாள். அங்கே திரும்பிய பிறகு அது வெகுதூரம் சென்று விடவில்லை. இரண்டு விளக்குகள் தாண்டிய பிறகு ட்யூக்கின் ரிசர்ச் சாலை. அதில் திரும்பிய பிறகு அது மிகமிக மெதுவாகச் சென்று பயலாஜிகல் கெமிஸ்ட்ரியைச் சேர்ந்தவர்கள் காரை நிறுத்தும் 'பார்க்கிங் லாட்'டில் சென்று நின்றது. அவன் கண்ணில் படாமல் சரவணப்ரியாவும் காரின் வேகத்தைக் குறைத்து வேறொரு வழியாக அதில் நுழைந்தாள். காரிலிருந்து இறங்கிய பெரியசாமி சுற்றிலுமொருமுறை பார்த்து விட்டு நெடுக நடந்து ஆராய்ச்சிக் கட்டடத்திற்குள் சென்றான். சனி காலையாதலால் நிறைய காலி இடங்கள். பெரியசாமியின் காரிலிருந்து சற்றுத் தள்ளி தன்னுடைய காரை நிறுத்திவிட்டு சரவணப்ரியா அதிலேயே உட்கார்ந்திருந்தாள்.

அவன் எதையாவது மறந்துவிட்டு மாமூல் பிரயாணத்தைத் தொடர்வான் என்று காத்திருந்தாள். ஒருவேளை ஆசை நாயகி அங்கே இருந்தால் அவளையும் அழைத்துக் கொண்டு எங்காவது செல்லலாம். பதினைந்து நிமிடங்களாகியும் அவன் வெளியே வராததால் காரைப் பூட்டி விட்டு கார் நிற்குமிடத்தைக் கடந்து கட்டடத்தில் நுழைந்தாள். மூன்றாவது மாடியில் அவளுடைய இடத்திற்கு மின்தூக்கியைப் பயன்படுத்தினால் டாக்டர் வில்சனின் ஆராய்ச்சி அறைகளைத் தாண்டித் தான் செல்லவேண்டும். ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே சென்றாள். கடைசி அறையில் மட்டும் ஒரு ஃப்யூம் ஹூட் இருக்கும். அங்கே விளக்கெரிந்தது. அதன் கதவு திறந்திருந்தது. அந்த அறையில் பெரியசாமி. அங்கே அவன் வேலைசெய்து அவள் பார்த்ததில்லை. அறையின் கதவருகில் நின்றாள்.

"ஹாய் பெர்ரி!" அவன் தோற்றத்திலிருந்து உடனே கிளம்புகிறவன் போலத் தெரியவில்லை. அழுக்கடைந்த வெள்ளை கோட், பாதுகாப்புக் கண்ணாடி, முகத்தில் ஆழ்ந்த கவனம். இன்று ரகசிய சந்திப்பு இல்லை போலிருக்கிறது.

"ஹாய் சாரா!" என்று திரும்பிய அவன் முகத்தில் திகைப்பு.

'பயாலஜிலே பிஎச்.டி. வாங்கின உங்களுக்குக் கெமிக்கல் ரியாக்ஷன்கூட செய்யத் தெரியுமா?' என்று சரவணப்ரியா கேட்க நினைத்தபோது அவள் பார்வை மேஜையில் மின்-தராசிற்கு அருகிலிருந்த பாட்டிலின் மேல் விழுந்தது. அவன் மெல்ல நகர்ந்து அதை அவளிடமிருந்து மறைக்க முயன்றதுபோல் தோன்றியது. அதற்கு அவசியமென்ன? அதன் பெயரைப் படிக்க முயற்சித்தாள். பெர்ரிமேசன் என்று கொட்டை எழுத்துக்களில் போட்டு விட்டு நாவலின் பெயரைப் பொடியெழுத்தில் போடுவதுபோல் ஆல்ட்ரிச் கம்பெனியின் அடையாளமான பெரிய ‘ஏ’ தெரிந்தது. இரசாயனப்பொருளின் பெயர் குட்டி எழுத்துக்களில், அதுவும் ஆரம்பம்தான், 'என்-மெதில்'. காடலாக் எண்ணிலும் முதல் மூன்று இலக்கங்கள் மட்டும், 130. மற்றவை அவன் முதுகுக்குப் பின்னால்.
பெரியசாமிக்கு சந்தேகம் எழாமலிருக்க பார்வையை அவன்மேல் கொணர்ந்தாள்.

"தொந்தரவு செய்யலை, உங்களைப் பாத்ததும் நின்னேன்."

"நீங்க சனிக்கிழமை வேலைக்கு வர்றதுண்டா?" என்று அவனே கேட்டான்.

"எப்பவாவது. அடிக்கடி வந்தா ஏன் போனவாரம் வரலைன்னு கேப்பாங்க. நேத்து எல்சியை (லிக்விட் க்ரோமடோக்ராஃப்) அணைச்சேனான்னு சந்தேகம். யாரையாவது செக் பண்ணச் சொல்லலாம்னு கூப்பிட்டா யாரும் எடுக்கலை. அதுதான் வந்தேன். நீங்க?"

"எல்லா சனியும் வர்றது வழக்கம். வில்சன் கிட்ட நல்ல பேர் வாங்கணுமில்லையா" என்று சிரித்தான்.

அவனிடம் சொன்னதற்காகத் தன்னறையின் கதவைத் திறந்து உள்ளே சென்று எல்சி அணைந்திருக்கிறதா என்று பார்த்தாள். பிறகு தன்னிடத்தில் அமர்ந்து அலமாரியில் வைத்திருக்கும் அல்ட்ரிச் புத்தகத்தை எடுத்து அதில் தேடினாள். காடலாக் எண் 130 என்று தொடங்கும் இரசாயனப் பொருட்கள் ஆறு கிடைத்தன. அவற்றின் பெயர்களை ஆராய்ந்தபோது ஒன்று மட்டும் என்-மெதில் என்று ஆரம்பித்தது. அதைப் பற்றி சாமியிடம் கேட்க, அதன் பெயரையும், கெமிக்கல் அப்ஸ்ட்ராக்ட் எண்ணையும் ஒரு காகிதத் துண்டில் எழுதிக் கொண்டாள்.

மேஜைமேல் முந்தைய நாளின் ட்யூக் செய்தித்தாள் கிடந்தது. அதன் கடைசிப் பக்கத்தில் குழந்தைகளைப் பகலில் கவனித்துக் கொள்ள விருப்பமுள்ள ஒரு பெண்ணின் வரி விளம்பரம். பெயரிலிருந்து வடஇந்தியப் பெண்ணாக இருக்கலாமென்று ஊகம். அதில் தரப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்தாள். அந்தப் பெண்ணின் உச்சரிப்பிலிருந்து அவள் ஊகம் சரியெனத் தோன்றியது.

"எங்களுடைய பையனைத் தினம் பார்த்துக் கொள்ள வேண்டும்."

"என்ன வயது?"

"இருபது மாதங்கள்."

"முடியும். வாரத்திற்கு எழுபத்தைந்து டாலர்." சரவணப்ரியாவுக்கு அந்தத் தொகை மிகக் குறைவாகத் தோன்றியது. "இப்போதே இடமிருக்கிறது" என்றாள் அந்தப் பெண் ஆர்வத்துடன்.

"வீடு எங்கே இருக்கிறது?"

"ட்யூக்கிற்கு அருகிலேயே, பைன்-ட்ரீ அபார்ட்மென்ட்ஸ்."

சரவணப்ரியாவுக்கு அவை சுத்தமாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று சக ஊழியர்கள் சொன்னதாக நினைவு. அதனால்தான் எழுபத்தைந்து டாலர் போல.  அவளை நேரடியாக மறுக்க என்னவோபோலிருந்தது. "எங்களுக்கு ஜனவரியில்தான் வேண்டும். டிசம்பர் கடைசியில் கூப்பிடுகிறேன். பை!"

பெரியசாமியிடம் சொன்னதற்காகத் தேவையான நேரம் எடுத்தாகிவிட்டது. காருக்குத் திரும்பிச் சென்றபோது தொலைவிலேயே நின்று, "பை பெர்ரி!" என்றாள்.

"எனக்கு வேலைமுடிய ரொம்ப நேரமாகும். பை சாரா!"

வீட்டிற்குத் திரும்பியவுடன் காகிதத் துண்டை சாமியிடம் தந்து, "பெரியசாமி என்-மெதில்-4-பிப்பெரிடினோன் வச்சு எதோ செய்யறார். அது எதுக்கு பயன்படும்?" என்று கேட்டாள்.

அவனுக்கும் பெரியசாமியின் இரசாயனவேலை வியப்பை அளித்தது. "அதை வச்சு எவ்வளவோ ரியாக்ஷன் செய்யலாம். அவன் பண்ணறதுலே ஒரு ஸ்டெப்தான் இருக்குன்னு என்ன நிச்சயம்?"

"சனிக்கிழமை ரகசியமா செய்யறதினால யாருக்கோ செஞ்சு தனியா பணம் சம்பாதிக்கிறாரோன்னு ஒரு சந்தேகம். வெளிலே உறவு வச்சிருக்கும்போது அதுக்கு டாலர் வேண்டாமா?"

"கெமிகல் அப்ஸ்ட்ராக்ட்ஸிலே தேடினா விவரம் கிடைக்கும்."

"முடிஞ்சப்போ கண்டுபிடிச்சு சொல்லு! ஒண்ணும் அவசரமில்லை."

திங்கள் வேலைக்குச் சென்றபோது பெரியசாமி அவளுடைய பார்வையில் படாமல் நழுவியதுபோல் தோன்றியது. அச்சமா, இல்லை கோபமா என்று தெரியவில்லை. அவனைத் தவிர்ப்பதற்காக சரவணப்ரியாவும் மின்தூக்கிக்குப் பதிலாக அவள் ஆராய்ச்சி அறைக்கு அருகிலிருக்கும் மாடிப்படியில் ஏறியிறங்கினாள்.

சனிக்கிழமை முயற்சி தோல்வியானதால் செவ்வாய்மாலை, சூரன் கவனிக்காதபோது சரவணப்ரியா வீட்டின் பின்கதவு வழியாக வெளியேறினாள். இருட்டி விட்டதால் பெரியசாமி இருக்கும் கட்டடத்திற்கு அருகிலேயே அவன் கார் தென்படுமிடத்தில் காத்திருந்தாள். அவள் எதிர்பார்த்தபடி ஆறேமுக்காலுக்கு பெரியசாமி கொரோல்லாவில் ஏறி அதைக் கிளப்பினான். அவன் கடந்து சென்றவுடன் சரவணப்ரியா நிஸான் காரை அவனுக்குப் பின்னால் செலுத்தினாள்.

அந்நேரம் இருட்டிவிட்டதால் அவனைத் தவறவிடாதிருக்க அவன் காருக்கு மிக அருகிலேயே சென்றாள். இந்தமுறை அது ட்யூக்கில் திரும்பாமல் அதையும் தாண்டிச் சென்றது. கேமரன் புலெவார்டில் இடது பக்கம் திரும்பியது. 'நல்லவேளை வலதுபுறம் திரும்பி நெடுஞ்சாலைக்குச் சென்றிருந்தால் இருட்டில் பின்தொடர்வது கடினமாக இருந்திருக்கும்' என்று எண்ணியபடி சரவணப்ரியாவும் திரும்பினாள். பிறகு, மூன்று மைல்கள் மரங்களடர்ந்த சாலையில் அதிக ஊர்திகளில்லை, அவர்கள் மட்டும்தான். பாதை முடியுமிடத்தில் மிக மெதுவாகச் சென்று, போக்குவரத்து விளக்கு மஞ்சளாக மாறியபோது குறுக்காக வந்த இன்னொரு தெருவில் பெரியசாமி வேகமாக இடப்புறம் திரும்பினான். பின்னால்வந்த சரவணப்ரியா சிவப்புவிளக்கிற்கு மரியாதைதந்து, பச்சை வரும்வரை காத்திருந்து திரும்பியபோது இருட்டில் பெரியசாமியின் கார் எந்த திசையில் சென்றதெனத் தெரியவில்லை. இருளில் தேடலைக் கைவிட்டு வீட்டிற்குத் திரும்பினாள்.

சாமியிடம், "பாதி வெற்றின்னு சொல்லலாம். க்ரூப் மீட்டிங்னு குமாரிகிட்ட பொய் சொல்லிட்டு அவர் வேறெங்கேயோ போறார், அதுமட்டும் நிச்சயம்" என்று பின் தொடர்ந்ததை விவரித்தாள்.

அவன், "நீ தவறவிட்ட இடத்திலேர்ந்து அவன் ஹோப் வால்லிக்குத்தான் போயிருக்கணும்" என்று ட்யூக் தொலைபேசிப் புத்தகத்தில் தேடினான். சந்தேகத்திற்குரிய பெண்கள் அனைவருமே அந்தப் பகுதியில் இருந்தனர்.

"குமாரியைக் கூப்பிட்டுச் சொல்லிடலாமா?" என்று சரவணப்ரியா அவசரப்பட்டாள்.

"வேண்டாம்."

"ஏன்?"

"வர்ற சனி இருக்கு. அதைவிட்டா உங்க டிபார்ட்மென்ட்லே எல்லோரும் திங்கள், செவ்வாய் ரெண்டுநாளும் வில்மிங்டன்லே ரிட்ரீட்டுக்குப் போறீங்க. அங்கே குமாரி இல்லாம பெரியசாமி அந்தப் பெண்ணோட நெருக்கமா இருப்பான். அப்போ அவ யாருன்னு நிச்சயமாத் தெரிஞ்சப்புறம் சொன்னாப் போறது. என்ன அவசரம்?"

(தொடரும்)

அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள். தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
                         
Your Comments
Comment
உங்கள் கருத்து
பெயர் :
மின் அஞ்சல் :
சுட்டி :

Comment In:

Tamil English
(Type here in Thanglish and see tamil text in bottom. Tamil conversion powered by : www.suratha.com)
NOTE : Please do not use single quote in your comments. You can use double quote in place.
(English / தமிழில் - யூனிகோட்)
What you see in this box gets posted as feedback.

Cunard Cruise Lines
Hot properties in India

ஜோதிடம் கேளுங்கள் பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கட்டண சேவை பெற இங்கே சுட்டவும்.

 

 


 

 


About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, Cunard Cruise Lines, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide