கண்ணின் மையப்பகுதியில் கண்மணி அல்லது பாவை (pupil) கருமை நிறத்தில் அமைந்துள்ளது.
கண் நமது உடலில் எவ்வாறு அமைந்துள்ளது?
நமது உடலில் உள்ள கண் பெருமளவுக்கு ஒளிப்படக் கருவி போல் (camera) அமைந்துள்ளது எனலாம். ஒளியை உள்ளே விடுவதற்கேற்ப சரிப்படுத்தக்கூடிய (adjustable) கண்மணி அல்லது பாப்பா அல்லது பாவை (pupil), உருவ (image) அமைவுக்கு ஏற்ப ஒளியைக் குவி மையப்படுத்தும் (focus) விழிவில்லை (lens), உருவம் பதிவு செய்யப்படுவதற்காக மென்மையான படலம் (film) போன்ற விழித்திரை (retina) ஆகியவை கண்ணில் அமைந்துள்ளன.
மனிதரின் கண் ஒவ்வொன்றிலும் ஒளியுணர்வு கொண்ட சுமார் 130 மில்லியன் உயிரணுக்கள் (cells) உள்ளன. இவ்வுயிரணுக்கள் ஒவ்வொன்றின் மீது ஒளி விழும் போதும், ஒரு வேதியியல் மாற்றம் நிகழ்கிறது. இம்மாற்றத்தால் கண் இழையில் (eye fibre) ஒரு தூண்டு விசை ஏற்பட்டு, ஒளி நரம்பு (optical nerve) வழியே மூளையின் ‘பார்வை’ பகுதிக்கு ஒரு செய்தி அனுப்பப்படுகிறது. இச்செய்தியை மூளை அறிந்து கொண்டு நாம் காண்பது என்ன என்பது அறியப்படுகிறது.
முன்பக்கம் சற்று புடைப்புடன் கூடிய பந்து போன்று, கண் அமைந்துள்ளது. கண்ணின் மையப்பகுதியில் கண்மணி அல்லது பாவை (pupil) கருமை நிறத்தில் அமைந்துள்ளது. ஒளியானது பாவை வழியே ஒளிவில்லையைச் சென்றடைகிறது. இவ்வில்லை ஒளியைக் குவிமையப்படுத்தி நாம் காணும் உருவத்தை அமைத்துத் தருகிறது.
நாம் நிறங்களை எவ்வாறு பார்க்க முடிகிறது?
விழித்திரையில் (retina) கண் நுண்கம்பிகள் மற்றும் கூம்புகள் (rods and cones) எனப்படும் நுண்ணிய உயிரணுக்களாலான (cells) பாளம் (layer) போன்ற அமைப்பு உள்ளது. இவ்வுயிரணுக்களில் வண்ணப் பொருட்கள் உள்ளன; அவற்றின் மீது ஒளி விழும்போது திடீரென ஒரு நரம்புத் தூண்டல் (nerve impulse) நிகழ்கிறது.
நுண்கம்பி உயிரணுக்கள் மிக மிக மெல்லியவை; கருப்பு வெள்ளை நிறத்தை நாம் காண்பதற்கு அவையே காரணம். ஒளி மிகக் குறைவாக இருப்பினும், பொருட்களை நிழல் போன்று சாம்பல் நிறத்தில் காணும் வகையில் அவை செயல்படுகின்றன. கூம்பு உயிரணுக்கள் நாம் நிறங்களைப் பார்க்க வழி வகுப்பவை. பல்வேறு வகைப்பட்ட ஒளிக் கூருணர்வுப் பொருட்கள் அவற்றில் உள்ளன; இதனால் சிகப்பு, மஞ்சள் - பச்சை அல்லது ஊதா – கருநீல நிறங்களைக் காண இயலுகிறது. கம்பி வடிவ உயிரணுக்கள் சாம்பல் நிற உருவங்களை உற்பத்தி செய்வது போன்று, கூம்பு வடிவ உயிரணுக்கள் வண்ண உருவங்களை நாம் காணச் செய்கின்றன.
கூம்புகள் மிகவும் ஒளியுள்ள நிலையில் மட்டுமே செயல்படுபவை; எனவேதான் மங்கிய ஒளியில் நம்மால் நிறங்களைக் காண முடிவதில்லை. ஒவ்வொரு கண்ணிலும் 125 மில்லியன் கம்பி வடிவ உயிரணுக்களும் 7 மில்லியன் கூம்பு வடிவ உயிரணுக்களும் உள்ளன.
கம்பி வடிவ மற்றும் கூம்பு வடிவ உயிரணு ஏற்பிகள் விழித்திரையில் பதிந்துள்ளதோடு, அவை நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன; இதனால் அவற்றின் மீது ஒளி விழும்போது அத்தகவலை அவற்றால் அனுப்பி வைக்க முடிகிறது. கம்பி மற்றும் கூம்பு வடிவ உயிரணுக்கள் மின்கம்பி வலையமைப்பு (electrical wire network) போல் நம் கண்களில் ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ளன.
We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X