பி.சுசீலாவுடன் அவர் இணைந்து லவகுச படத்திற்காகப் பாடிய 'ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே' பாடலை இன்றும் அனைவரும் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது!
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே!
மேதைகளும் நிபுணர்களும் சங்கமித்த ஒரு படம் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' என்று சொல்லலாம். படத்தை எடுத்தவரோ பிரம்மாண்டம், நேர்த்தி ஆகியவற்றின் மறு உருவமான ஜெமினி எஸ்.எஸ். வாசன். பாடலை எழுதியவரோ கொத்தமங்கலம் சுப்பு. நடிகர், கதாசிரியர், கலைகளை ரசிக்கத் தெரிந்த மஹா ரசிகர், பாடல் ஆசிரியர். தில்லானா மோகனாம்பாளை அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதியபோது வாராவாரம் விகடனுக்காக ஏங்கியவர் பலர்.
அதே போல ஜெமினி கணேசன், பி.எஸ்.வீரப்பா, பத்மினி, வைஜயந்தி மாலா என்று சிறந்த கலைஞர்கள் வேறு இதில் இணைந்தனர். இசையை அமைத்தவர் அனார்கலி புகழ் சி.ராமச்சந்திரா. இந்தப் புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்கள் ஜிக்கியும் பி.லீலாவும் ஆவர்.
அடக்கமும் மென்மையுமாக மிளிர்ந்த பத்மினிக்கு ஜிக்கி குரல் கொடுக்க படபடப்பும் ஆவேசமுமாக ஒளிர்ந்த வைஜயந்திமாலாவுக்கு லீலா குரல் கொடுத்தார். 'கலகலகலகலவென்று ஜோராய்' என்று இரட்டைக்கிளவியும் பரபரப்பும் கலந்த வார்த்தைகளை வைஜயந்திக்கும், 'காதலி என்றென்னையே கொஞ்சி அழைத்தார்' என்று மென்மையான வார்த்தைகளை பத்மினிக்கும் அமைத்த கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டாதவர் இல்லை. காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டு வடிவமாக தமிழ் நாடெங்கும் கொண்டு சென்று பரப்பிய காந்தியவாதி அவர்.
"சபாஷ்! சரியான போட்டி" என்ற பி.எஸ்.வீரப்பாவின் வசனம் பத்மினி-வைஜயந்திக்குப் பொருந்தியது போலவே ஜிக்கி-லீலாவுக்கும் பொருந்தியது. பாடலும் படமும் வெற்றிகரமாகப் பேசப்பட்டன.
பி.லீலா ஐம்பதுகளில் வெகுவாகப் பேசப்பட்ட பின்னணிப் பாடகி! 1934ல் கேரளாவில் உள்ள பாலக்காட்டுக்கு அருகில் இருக்கும் சித்தூரில் பிறந்தவர். தந்தை குஞ்ஜன் மேனனும் தாய் மீனாட்சி குட்டியும் இயற்கையிலேயே நல்ல குரல் வளம் வாய்ந்த லீலாவிற்கு நன்கு ஊக்கம் கொடுத்து இசையைப் பயிற்றுவித்தனர்.
நாற்பதுகளில் தமிழ் திரைப்படங்களில் பின்னணி இசை தீவிரமானது, திறமைசாலிகளைத் தேடியது. இசையமைப்பாளர் பத்மநாப சாஸ்திரி லீலாவை பின்னணி பாட அழைத்தார். 1948ல் கங்கணம் என்ற படத்தில் பாடி லீலா திரை இசை உலகில் பிரவேசித்தார். ஏராளமான படங்களில் பாட வாய்ப்புகள் வந்து குவிந்தன. எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைந்து எல்லாம் இன்பமயம் பாட்டில் ராகமாலிகாவில் ராகத்திற்கு ராகமாகப் பாடி பெரும் புகழைப் பெற்றார்.
ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து மிஸ்ஸியம்மாவில் 'வாராயோ வெண்ணிலாவே', டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து தங்கப்பதுமையில் 'முகத்தில் முகம் பார்க்கலாம்', இரும்புத்திரையில் 'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்', பாகப்பிரிவினையில் 'தாழையாம் பூ முடிஞ்சு', சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து நல்லவன் வாழ்வானில் 'குற்றால அருவியிலே குளிச்சது போலிருக்குதா' போன்ற பாடல்களை பாடினார். பல்லாயிரக்கணக்கான நேயர்கள் நேயர் விருப்பம் பகுதியில் திரும்பத் திரும்ப இவற்றை ஒலிபரப்பச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தனர்.
கண்டசாலா, ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன், கே.வி.மஹாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ராஜேஸ்வர ராவ், சி.ராமச்சந்திரா, விஸ்வநாதன் ராமமூர்த்தி என எல்லா இசையமைப்பாளர்களும் இவரது திறமையை முழு அளவில் பயன்படுத்தித் தாமும் புகழ் பெற்றனர்; இவரையும் புகழ் பெறச் செய்தனர்! தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், வங்காளம் என பல மொழிகளிலும் பாடியதும் இவரது தனி சிறப்பு! 5000 பாடல்களுக்கு மேலாகப் பாடியுள்ளார் லீலா. தமிழ் பாடல்கள் ஆயிரத்திற்கும் மேலாக இருக்கும் என்பது ரசிகர்களின் கணிப்பு!
சோலோவாகப் பாடியும் ஏராளமான ஹிட்டுகளை அள்ளித் தந்தார் லீலா. உத்தமபுத்திரனில் காத்திருப்பான் கமலக்கண்ணன் மிகவும் பிரசித்தமான பாடல். ஜி.ராமநாதன் அமைத்த ராகமாலிகா பாடலில் ராகத்திற்கு ராகம் தனக்கே உரித்தான பாணியில் அவர் சஞ்சாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது! 'நீயே கதி ஈஸ்வரி' என்ற பாடலை அவர் சாருகேசி ராகத்தில் பாடியதை அன்னையின் ஆணை இசையமைப்பாளரான எஸ்.எம்.சுப்பையா நாயுடு வெகுவாகப் பாராட்டினார். கொஞ்சும் சலங்கையில் 'கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு' பாடலைப் பாடவும் வாய்ப்புத் தந்தார்.
அதே படத்தில் 'சிங்கார வேலனே' பாடலைப் பாட அவரை அழைத்த போது அந்தப் பாடலைத் தன்னை விட ஜானகி நன்றாகப் பாடுவார் என்று பரிந்துரை செய்து அவரைப் பாட வைத்தார். இதிலிருந்தே அவரது உள்ளத்தின் மேன்மையைப் புரிந்து கொள்ளலாம்!
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - கப்பலோட்டிய தமிழன் மாயமே நானறியேன் - மிஸ்ஸியம்மா என்னையாளும் மேரி மாதா - மிஸ்ஸியம்மா வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வா வா - வஞ்சிக்கோட்டை வாலிபன் என இவரின் புகழ் பெற்ற பாடல்களைப் பட்டியலிட்டால் அது வெகு நீண்ட ஒன்றாகத் திகழும்!
பி.சுசீலாவுடன் அவர் இணைந்து லவகுச படத்திற்காகப் பாடிய 'ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே' பாடலை இன்றும் அனைவரும் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது!
லீலாவின் திறமையை தமிழ் உலகம் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பதே வரலாறு கூறும் உண்மை. ஆனால் இதையெல்லாம் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் பின்னாளில் திரை இசையிலிருந்து ஒதுங்கி பக்திப் பாடல்களில் தன்னை ஆழ்த்தி ஏராளமான பக்தி கீதங்களை இசைத்தார். குருவாயூர் கோவிலில் இன்றும் நிர்மால்ய தரிசனத்தின் போது இவரது பக்தி கீதம் இசைக்கப்படுவது அவருக்கென்று என்றும் உள்ள பெருமையாக ஆகிறது. 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி தனது 71ம் வயதில் சென்னையில் லீலா காலமானார்.
அவர் பாடிய பாடல்களிலேயே 28 டேக்குகள் எடுத்த ஒரு பாடல் மாயாபஜார் என்ற அருமையான படத்திற்காக பதிவு செய்யப்பட்டது. இறுதியில் ஐந்தாம் டேக் ஓகே செய்யப்பட்டது. இந்தப் பாடலை மறக்கவே முடியாது என்று ஒரு பேட்டியில் அவர் கூறினார்.
1958ம் ஆண்டு வெளியான தமிழ் மாயாபஜார் படத்தில் கண்டசாலா வெங்கடேஸ்வரா ராவ் இசையமைப்பில் தஞ்சை ராமையாதாஸ் பாடலை எழுத லீலாவும் கண்டசாலாவும் பாடிய ஒரு அற்புதமான மறக்க முடியாத இன்பப் பாடலைப் பார்ப்போம்:
தாரா சந்த்ரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் நடைதனிலே.. சுவைதனிலே தாரா சந்த்ரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் நடைதனிலே தேன் மலர் மதுவை சிந்திடும் வேளை தென்றல் பாடுது தாலேலோ (ஆஹா)
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே.. காலத்திலே அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே.. காலத்திலே கலை வான் மதி போல் காதல் படகிலே காணும் இன்ப அநுராகத்திலே (ஆஹா)
கிருஷ்ணரும் ருக்மிணியும் :
ராஸக்ரீடையில் இன்புற ஜகமே தன்னை மறந்திடும் நிலைதனிலே.. நிலவினிலே ஆசையினால் மனம் அமைதி காணுதே அன்பே ப்ரேமை ப்ரவாகத்திலே
மிகச் சிறிய பாடல்தான்! இசையும் வார்த்தைகளும் கண்டசாலா - லீலா ஆகியோரின் தேன் மலர் குரலில் மலர்ந்து அலைகள் மீது மிதந்து ஆடும் படகைப் போல ஆடி ஆடி நம்மை இன்ப உலகுக்கு ஏற்றிச் செல்கின்றன!
படத்தின் காட்சி அமைப்பு மிக அருமையாக அமைக்கப்பட்டதும் இந்தப் பாட்டின் இணையற்ற வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்! ஜெமினிகணேசனும் சாவித்திரியும் (அபிமன்யு-வத்ஸலா) படகிலே ஆனந்தமாகப் பாடி உலா வரும் போது அவசரமாக கிருஷ்ணர் (என்.டி.ராமாராவ்) ருக்மிணியை அழைத்துக் கொண்டு அபிமன்யுவிடம் வந்து அவர்களைக் கரையேறச் சொல்லி விட்டுப் பாடலைத் தொடர்கிறார்.
ருக்மிணியின் தமக்கையும் அரசரும் அபிமன்யு - வத்ஸலாதான் படகில் செல்கின்றனரா என்பதைப் பார்க்க அங்கு வர கிருஷ்ணர் - ருக்மிணியைப் பார்த்து விட்டு ஏமாறுகின்றனர்! தாங்களும் படகில் அமர்ந்து பாடலைத் தொடர்கின்றனர்! ருக்மிணி தன் தமக்கை படகில் செல்வதை பரிஹாஸம் செய்ய கிருஷ்ணர் “குதூகல நேரத்தில் குதர்க்கம் கூடாது” என்று சொல்வார். பார்த்துப் பார்த்து ரசிக்க வேண்டிய காட்சியாக இது அமைந்தது! (இசைத்தட்டு வடிவத்தில் கிருஷ்ணர்-ருக்மிணியின் சரணம் இடம் பெறவில்லை. ஆனால் படத்தில் இடம் பெறுகிறது!)
ஆஹா இன்ப நிலாவினிலே பாடலின் இசைக்கும், வார்த்தைகள் தரும் இன்பக் கருத்துக்களுக்கும் ஈடு இணை உண்டா என்ன?