தள்ளிவைக்கப்படுகின்றன சில தற்கொலைகள்,
தயாராகின்றன சில!
ஏனென்று தெரியவில்லையென்று காரணம் சொல்லப்படும் துவக்கங்களின் பின்னே ஏதோவொரு தூண்டுதல் மறைந்தே இருக்கிறது. துல்லியமாய் வரையறுக்கவியலாதபடி பற்பலவுருக்களில்!!
தோள் நனைக்கும் ஒரு கண்ணீர்த்துளியாகவோ... வாயில்கடக்குமுன் எழும் மெல்லிய விசும்பலாகவோ.... முன்னிருக்கையிலிருந்து பின்னே தாவும் மழலைமுறுவலாகவோ.... நடுக்கத்துடன் தலைதடவி ஆசிவழங்குமொரு வயோதிகக்கரமாகவோ....
இதமான அணைப்பாகவோ... இறுக்கமான இதழ்பிணைப்பாகவோ..... இசையாகவோ... இச்சையாகவோ... இன்னும் பலவாகவும் இருக்கும் அதன் பேரிலேயே ஆற்றப்படுகின்றன சில காரியங்கள், கைவிடப்படுகின்றன சில!
தள்ளிவைக்கப்படுகின்றன சில தற்கொலைகள், தயாராகின்றன சில!
நிறைவேற்றப்படுகின்றன சில சபதங்கள், உறுதியிழக்கின்றன சில!
அணைக்கப்படுகின்றன சில உறவுகள், விலக்கப்படுகின்றன சில!
விதைக்கப்படுகின்றன சில விரோதங்கள், மன்னிக்கப்படுகின்றன சில துரோகங்கள்!
எந்தவொரு நிகழ்வுக்கும் பின்னே ஏதோவொரு காரணமிருப்பதுபோல்... எந்தவொரு துவக்கத்தின் பின்னும் ஏதோவொரு தூண்டுதல் எந்நாளும் மறைந்தே இருக்கிறது, துல்லியமாய் வரையறுக்கவியலாதபடி!