அடடா இது என்ன கண்ணா, நீ அந்தர லோகத்துப் பெண்ணா' என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் சாவித்திரியின் கண்ணழகை அவர் புகழ்ந்ததாகவே அன்றும் இன்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்!
தமிழ்த் திரை உலகம் அனைத்து மொழிகளையும் வெறுக்காமல் தன்னுடன் அணைத்துக் கொண்ட பொன்னுலகம்! அதே போலவே உலகளாவிய இசை வெள்ளத்தையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட பெரும் இசை உலகம்! இந்த வகையில் மேலை நாட்டு நடன வகைகளும், அந்த நடனங்களில் இசைக்கப்பட்ட பாடல்களும் தமிழுக்கு இறக்குமதி ஆயின. அத்துடன் ஹிந்துஸ்தானி, பஞ்சாபி உள்ளிட்ட ஏராளமான இசை வகைகளும் தமிழ்ப் பாடல்களில் ஐக்கியமாயின.
முகலாயரின் காலத்தில் இசைக்கப்பட்ட கவ்வாலி பாடல் வகை இதில் முக்கியமானது. தெற்கு ஆசியாவில் சூஃபிக்களின் பக்திப் பாடலாக இருந்த கவ்வாலி, பாகிஸ்தானின் தெற்குப் பகுதியிலும் வட இந்தியாவிலும் வெகுவாகப் பாடப்பட்டு வந்தது. 700 வருட பாரம்பரியம் கொண்ட கவ்வாலி பாடல்கள் மெதுவாக ஹிந்தி திரையுலகிலும் வந்து நுழைந்தன. 'கவ்வால்' என்றால் திருப்பித் திருப்பிப் பாடுவது என்பது பொதுவான பொருளாகும்.
இவற்றில் பிரதான பாடகர் பாடப் பாட பின்னால் பாடுவோர் கோரஸாக அதே வரிகளைத் திருப்பிப் பாடுவது பழக்கமானது. இந்தப் பாடல்கள் பெரும்பாலும் பஞ்சாபி மொழியிலோ அல்லது உருதுவிலோதான் இருக்கும். கவ்வாலி பாடல்களின் முக்கிய 'தீம்' அல்லது கரு காதல், பக்தி மற்றும் ஏங்குதல் (இறைவனுக்காக ஏங்குவது).. இதில் பல ரகங்களும் உண்டு. இதில் முக்கியமானது கஜல்.
அராபிய மொழியிலே கஜல் என்றால் காதல் பாடல் என்று பொருள். இந்த கஜலிலும் மது அருந்தி இன்பத்தில் ஆழ்ந்திருப்பது, விரும்பிய மாதை அடைய முடியாமல் விரக தாபத்தில் தவிப்பது என்று பல வகைகள் உண்டு. கஜலுக்கென்றே தனியாக இசை வடிவம் ஒன்றும் உருவானது. ஆத்ம தாகத்தை வெளிப்பாடு செய்யும் பாடல்களாக பெரும்பாலும் இவை அமைந்தன. பாடல்களின் வார்த்தைகளுக்கு உள்ளர்த்தமும் இருக்கும்!
கவ்வாலி குழுவில் எட்டு அல்லது ஒன்பது பேர் பொதுவாக இருப்பர். ஒன்று அல்லது இரண்டு ஹார்மோனியமும் முக்கிய பங்கு வகிக்கும். தலைமைப் பாடகர்கள் இந்த ஹார்மோனியத்தை இசைப்பர். தபலா, டோலக் போன்ற வாத்தியங்களும் இசைக்கப்படும். பாடலின் முக்கிய வரிகளை அல்லது வார்த்தைகளை கோரஸாக குழுவில் பின்னிருந்து பாடுவோர் பாடுவர்.
பொதுவாக, கால்களைக் கீழே பரப்பி தரையில் உட்கார்ந்து பாடகர்கள் பாடுவர். தலைமைப் பாடகர், கூட இருந்து பாடுபவர், ஹார்மோனியம் இசைப்பவர் முதல் வரிசையிலும், கோரஸாக பாடும் குழுவினர் பின் வரிசையிலும் இருக்கப் பாடல் ஆரம்பமாகும். கைகளால் தட்டியவாறே லயமான தாளம் அமைய பாடல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இரு கோஷ்டிகளாக கவ்வாலி பாடல்கள் பாடப்படுவதும் உண்டு.
பொதுவாக பெண்கள் கவ்வாலியில் பங்கு கொள்வதில்லை என்றாலும் கூட, அபிதா பர்வீன் உள்ளிட்ட பிரபல பாடகிகள் வந்த பின்னர் கவ்வாலியில் பெண்களின் பங்கும் முக்கிய அங்கம் வகிக்க ஆரம்பித்தது.
கவ்வாலி பாடல்களைப் பாட பாரம்பரியமான முறையும் உண்டு. ஹார்மோனியத்தில் முதலில் பாடலின் முக்கிய தீம் இசைக்கப்படும். பின்னர் ஒரு சின்ன ஆலாபனை. அடுத்து பிரதான பாடகர் பாடலின் ஆரம்ப வரியை எடுத்து விடுவார். இதை அவர் அருகில் இருக்கும் துணைப் பாடகர் இசைப்பார். பிறகு பிரதான பாடல் ஆரம்பிக்கும். முதலில் மெதுவாக ஆரம்பிக்கும் பாடல் போகப் போக உரத்த குரலில் வலிமையுடன் குழுவினர் பின்னால் பாடப் பாட கன ஜோராகப் போகும். 15 முதல் முப்பது நிமிடம் வரை ஒரு பாடல் நீடிக்கும். ஆனால் ஒரு கவ்வாலி 115 நிமிடம் கூட இசைக்கப்பட்டதுண்டு! இசை வாத்தியங்கள் ஒலிக்க, முக்கிய வரிகளை கோரஸாக குழுவினர் சேர்ந்து இசைக்க ஒரு தனிச் சுவையை கவ்வாலி தந்து விடும். இதை ஹிந்தி சினிமா உலகம் நன்கு பயன்படுத்த ஆரம்பித்தது. கவ்வாலி அல்லது கஜல் பாடல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஹிந்தியில் திரைப் பாடல்களாக மலரவே வெகு ஜன ஆதரவு பெருகியது.
தமிழ்த் திரை உலகிலும் இதைப் பயன்படுத்தும் ஆசை எழுந்தது. அறுபதுகளில் கவ்வாலி தமிழ் திரையுலகில் பெரும் புகழைப் பெற்றது. அந்தச் சமயம் 'முகலே ஆஜம்' என்ற பிரம்மாண்டமான ஹிந்திப் படம் இந்தியாவையே கலக்கியது. அது 'அக்பர்' என்ற பெயரில் தமிழில் எடுக்கப்பட்டது. ஹிந்தியில் எடுக்கப்பட்ட அனார்கலி - சலீம் கதையைச் சித்தரிக்கும் முகலே ஆஜம் மூன்று வருட காலம் ஓடி வசூலில் மகத்தான சாதனை படைத்தது. தமிழ் அக்பரோ பெட்டிக்குள் சுருண்டது.
முகலே ஆஜம் படத்தின் உருவாக்கம் ஒரு தனிக் கதை. சுமார் பத்து வருட காலம் இந்தப் படத் தயாரிப்பு நீண்டது. இதே கால கட்டத்தில், அறுபதுகளில் வந்த 'வல்லவனுக்கு வல்லவன்' என்ற தமிழ்த் திரைப்படத்தில் இப்படிப்பட்ட ஒரு பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.கண்ணதாசன் பாடலை இயற்றினார்.
வேடிக்கையான வரிகளைக் கொண்ட இந்தப் பாடலை 'நான்சென்ஸ் லிரிக்' என்று சிலர் விமரிசிக்க, நான்சென்ஸில் உள்ள நல்ல சென்ஸை மக்கள் ரசித்தனர். சீர்காழி கோவிந்தராஜனும், டி.எம்.சௌந்தரராஜனும், பி.சுசீலாவும் பாடலைப் பாடினர். வேதா இசை அமைத்தார். பாடல் பெரிய ஹிட்டானது. இன்றும் இது விரும்பிக் கேட்கப்படுகிறது.
படத்தில் இந்தப் பாடலைப் பாடுபவர்கள் அசோகன், மனோஹர் மற்றும் சாவித்திரி. சாவித்திரியின் படம் பெரிதாகப் போடப்பட்டு விளம்பரப்படுத்தப்படவே அவர்தான் கதாநாயகி என்று ஏராளமாகக் கூட்டம் குவிந்தது. ஆனால் அவர் வந்ததோ சுமார் பத்து நிமிடமே நீடிக்கும் கெஸ்ட் ரோல்! என்றாலும் அந்த பத்து நிமிடத்துக்குள் அவர் நடித்த அனாயாசமான அழகிய நடிப்பு, படம் பார்ப்பவரை மீண்டும் மீண்டும் ஈர்த்தது!
மாடர்ன் தியேட்டர்ஸின் நூறாவது படம் இது என்பது குறிப்பிடத் தக்கது. 'அடடா இது என்ன கண்ணா, நீ அந்தர லோகத்துப் பெண்ணா' என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் சாவித்திரியின் கண்ணழகை அவர் புகழ்ந்ததாகவே அன்றும் இன்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சாவித்திரிக்காகவே கண்ணதாசன் அமைத்த பல பாடல் வரிகளில் இந்த வரிகள் குறிப்பிடத்தகுந்தவை! படத்தில் காட்சி அமைப்போடு பாடலைக் கேட்டால் கவ்வாலியின் பாரம்பரியமும் தெரிய வரும்.
பாரடி கண்ணே கொஞ்சம் பாடலைப் பார்ப்போம்:
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம் தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம் (பாரடி)
பைத்தியமே கொஞ்சம் நில்லு வைத்தியரிடம் போய் சொல்லு நெருங்காதே இது முள்ளு தருவதை வாங்கிக் கொள்ளு (பைத்தியமே)
அடடா இது என்ன கண்ணா நீ அந்தர லோகத்து பெண்ணா ஓ அந்தர லோகத்து பெண்ணா
உடையைப் பார்த்தவுடன் மனது பாதி கெட்டு இடையைப் பார்த்தவுடன் இருந்த மீதி கெட்டு .. மீதி கெட்டு ஆ மனிதனான என்னை மடையனாக்கி விட்டு மறைத்து மூடி விட்டு முறைத்துப் பார்ப்பதென்ன.. பார்ப்பதென்ன ஆ உதட்டின் மீது ரெண்டு பழத்தை ஆடவிட்டு ஆ உலக இன்பந்தன்னை உருகி ஓடவிட்டு.. ஓடவிட்டு ஆ துடிக்கும் ஏழை நெஞ்சை அடக்கித் தூங்க விட்டு ஆ நடிப்பதென்ன.. கொஞ்சம் நடந்து வாடி சிட்டு அடி வாடி என் சிட்டு
அடடா இது என்ன கண்ணா நீ அந்தர லோகத்து பெண்ணா ஓ அந்தர லோகத்து பெண்ணா அந்தர லோகத்து பெண்ணா
அழகுக்கு ஏனடி வஞ்சம் அடி அழகுக்கு ஏனடி வஞ்சம் அடைந்து விட்டோமடி தஞ்சம் தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம் ஹேய் (பாரடி)
அறுபதாக இவர் அழகு தோன்றுதடி.. தோன்றுதடி இருபதாக இவர் மனது மாறுதடி.. மாறுதடி ஒருவராக வர வீரம் இல்லையடி.. இல்லையடி ஆ இருவராக வன்ந்து ஏய்க்கப் பார்க்குதடி.. பார்க்குதடி ஆண்களாக இவர் தோன்றவில்லையடி.. இல்லையடி ஆசைக்கேற்றபடி ஆளு இல்லையடி.. இல்லையடி பெண்கள் கையில் தினம் பூசை வாங்குவதை பெருமையாக கருதும் வீரரடி
மாப்பிள்ளை ராஜா நில்லு என் வார்த்தைக்கு பதில் சொல்லு நெருங்காதே இது முள்ளு தருவதை வாங்கி கொள்ளு (பைத்தியமே) (பாரடி)
பாடலில் வரும் வரிகள் சற்று நகைச்சுவை கலந்த ரகம். 'அழகிலே ஆனா சிங்கம்' என்பது அசிங்கம் என்ற வார்த்தையைச் சுட்டுகிறது. பாடல் வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்தப் பாடலையும் அக்பரில் வரும் 'உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே ராஜாவே நானும் பார்த்தேனே' என்ற பாடலையும் கேட்டால் கவ்வாலி பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.