 |
இதழ் 460 |
 |
மார்ச் 15 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (51)
- ச.நாகராஜன் |
| | அதற்கு உடனே சாமி சான் பதில் கூறினார். ''இரண்டும் இல்லை, முதலில் வருவது ஃபோன் கால்தான்!''
 ஆற்றின் கரைதனிலே, கண்ணன் என்னை கேலி செய்தானே!
ஒரு சமயம் ஹாலிவுட்டில் பிரபல ஆங்கில பாடலாசிரியரான சாமி சானை ஒருவர் கேட்டார்:-''முதலில் வருவது இசையமைப்பா அல்லது பாடலா?''
அதற்கு உடனே சாமி சான் பதில் கூறினார். ''இரண்டும் இல்லை, முதலில் வருவது ஃபோன் கால்தான்!''
உண்மைதான்! வாய்ப்பு வந்தால்தான் எல்லாமே - அது இசையோ, நடிப்போ, திரைப்பாடலோ எதுவாக இருந்தாலும் சரி, அது கை கூடும்! இயக்குநரிடமிருந்தோ அல்லது தயாரிப்பாளரிடமிருந்தோ அழைப்பு வர வேண்டும்! இந்த அழைப்பு எத்தனை பேரை உயரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது! ஆனால் இந்த வாய்ப்பு வந்தும் சோபிக்காமல் ஒதுக்கப்பட்டவர்களும் திரை சரித்திரத்தில் உண்டு!
மனித உணர்வுகளின் நுட்பத்தை அறிந்தவர்களே அத்தகைய வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி திரைத்துறையில் வெற்றி பெற முடிந்தது!
மனிதப் பிறப்பில் உடலுக்குரிய குற்றங்களாக பதினெட்டு குற்றங்களை பிங்கலந்தை கூறுகிறது. அந்தப் பதினெட்டு குற்றங்கள் இவைதான்:- பசி, நீர் வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய்ப்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையுறவு.
தமிழ்த் திரை உலகைப் பொறுத்தவரை இன்பம், அதிசயம், பயம், உவகை ஆகியவை காதல் என்ற மூன்றெழுத்தைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து எத்தனை விதமாக சித்தரிக்கப்பட முடியுமோ அத்தனை விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளன! உறக்கம் என்பதை எடுத்துக் கொண்டால் கனவுக் காட்சி எத்தனை படங்களில் இடம் பெற்றுள்ளது. இப்படி ஒவ்வொரு யாக்கையின் குற்றத்தை எடுத்து ஒவ்வொரு திரைப்படத்திலும் பொருத்திப் பார்த்தால் இந்த பதினெட்டையும் தாண்டி கூடுதலாக ஒன்றும் இல்லை என்பது தெரிய வரும்!
இதே போல நுட்பமான சில கதைகள், இதிஹாஸ நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் இந்திய நாடெங்கும் இந்திய மக்கள் அனைவருடனும் ஒன்றி இருப்பதையும் நாம் நினைவு கூர வேண்டும். இந்த வகையில் மாபெரும் சரித்திர புருஷனாகத் திகழும் கண்ணனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாடல்கள், காட்சிகள் எத்தனை, எத்தனையோ!
அந்தப் பாத்திரத்தை மையப்படுத்தினாலே அதில் வெற்றிக்கான வித்து இருக்கும்; அதற்கும் மேலாக கற்பனை, படக்காட்சி, பாடல், இசை அமைப்பு சேர்த்தால் அந்த வெற்றி நூற்றுக்கு நூறு ரசிகர்களை இழுத்து விடும்!
ஷெல்லியின் கவிதைகளில் மனதைப் பறி கொடுத்து பாரதியார் ஷெல்லிதாசன் ஆனார்; கம்பனில் மனதைப் பறி கொடுத்தவர் கம்பதாசன் ஆனார்; கண்ணனை நேசித்தவர் கண்ணதாசன் ஆனார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் 'அர்த்தமுள்ள இந்து மதம்' வழி காட்ட, அவரது பாடல்களில் இதிஹாஸ புருஷனான கண்ணன் இடம் பெற ஆரம்பித்தான். ஆனால் அவர் மட்டுமல்ல, திரை இசை தோன்றிய காலம் தொட்டே எல்லா கவிஞர்களும் எல்லா இந்திய மொழிகளிலும் கண்ணனைத் தங்கள் படைப்பில் கொண்டு வந்து வெற்றி பெற்று வந்துள்ளனர்.
வெண்ணிற ஆடை படத்தில் கண்ணதாசன் எழுதி இடம் பெற்ற 'கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல' என்ற பாடல் வரிகள் கண்ணனை பாடலில் கொண்டு வந்ததாலேயே ஒரு பெரிய இதிஹாஸ நாயகனைத் தன்னுள் அடக்கி ஆழ்ந்த பொருள் உடையதாக ஆகி விட்டது!
மிஸ்ஸியம்மாவில் 'பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கும் பொது சொந்தமன்றோ' என்று காரணம் சொல்லி, கண்ணனின் உன்னத லீலையை நினைந்தால் உள்ளமே ஜில்லென துள்ளாதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மீரா படத்தில் காற்றினிலே வரும் கீதத்தைத் தொடர்ந்து இசைக்கப்படும் புல்லாங்குழல் தரும் மதுர நாதம் உள்ளத்தையும் ஆன்மாவையும் பரவசப்படுத்துகிறது. அந்த நாளும் வந்திடாதோ என்று பாடல் வரி இசைக்கப்பட்டு நம்மை ஏக்கத்திற்கு ஆளாக்கும் போது நந்தகுமாரன் ஆயர் பாடியில் செய்த ஆனந்த லீலைகளும் அதற்குப் பாத்திரமான கோபியரின் பக்தியும் நம் நெஞ்சை உருக்குகின்றன.
தளபதி படத்தில் வாலி எழுதிய 'யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடுதான் ஆட' போன்ற பாடல்கள் யமுனை ஆறு, கண்ணன் என்ற வார்த்தைகளால் மக்கள் மனதில் ஒரு தனி இடத்தைப் பெறுகின்றன! இந்தக் கண்ணன் பாடல்களைத் தனியாகத் தொகுத்துப் பார்த்தால் அதிலே ஒரு தனிச் சுவை மிளிர்கிறது!
அக்பர் படத்தில் வரும் ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம். அக்பரின் படத்தில் ராதையும் கிருஷ்ணனும் எப்படி இடம் பெற முடியும் என்ற குழப்பம் முகலே ஆஜம் படத் தயாரிப்பில் பலருக்கும் இருந்தது, ஆனால் அக்பரின் மனைவி ஜோத்பாய் கிருஷ்ணனை ஜன்மாஷ்டமி அன்று கொண்டாடி வழிபடுவதில் எந்த விதத் தவறும் இல்லை என்று நௌஷாத் வாதிட்டு 'மோஹோ பங்கத் பே நந்தலால்' என்ற பாடலை இடம் பெறச் செய்தார். ஆகவே, அந்தப் படத்தில் அழகான காட்சி இடம் பெற்றது. ராதை, கிருஷ்ணனின் குறும்புத்தனமான லீலைகளைப் பற்றிக் குறை சொல்லுவது போன்ற இந்தக் காட்சியை ரசிக்காதவர்கள் இருக்க முடியாதே!
தமிழில் பாடல் வரிகளை ஹிந்தி டியூனுக்குப் பொருத்தமான வகையில் கம்பதாசன் எழுதினார். அக்பர் படத்தில் அவர் எழுதிய அனைத்துப் பாடல்களும் அவரது ஹிந்தி-தமிழ் மொழி மாற்றத் திறமையையும், கவிதைத் திறனையும் நன்கு காட்டுகின்றன! பி.சுசீலா தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆற்றின் கரைதனிலே பாடலைப் பாடினார்.
அருமையான அந்தப் பாடலைப் பார்ப்போம்:
ஆஆஆ ஆற்றின் கரைதனிலே கண்ணன் என்னைக் கேலி செய்தானே ஆற்றின் கரைதனிலே .. ஆ ஆ ஆ தாவிக் கை பிடித்தே என் வளையல்தான் உடைத்தானே தாவிக் கை பிடித்தே என் வளையல் தான் உடைத்தானே குழுவினர்: ஓ ஓ ஆற்றின் கரைதனிலே கண்ணன் என்னை கேலி செய்தானே.. ஆற்றின் கரைதனிலே சுசீலா : நீலக் கல்லை வீசினானே நின் பானை வீழ்த்தினானே குழுவினர் : ஆ ஆ ஆ நின் பானை வீழ்த்தினானே சுசீலா : ஓ ஓ ஓ நின் பானை வீழ்த்தினானே ஆ ஆ ஆ சேலை நீரை வீணாக சிங்காரம் செய்தானே சேலை நீராக வீணாக சிங்காரம் செய்தானே ஆற்றின் கரைதனிலே.. குழுவினர் : ஓ ஓ ஓ ஆற்றின் கரைதனிலே கண்ணன் என்னைக் கேலி செய்தானே ஆற்றின் கரைதனிலே .. சுசீலா : கண்களால் சூன்யமிட்டான் நெஞ்சத்தை மாற்றி விட்டான் குழுவினர் ஆ ஆ நெஞ்சத்தை மாற்றி விட்டான் சுசீலா: கண்களால் சூன்யமிட்டான் நெஞ்சத்தை மாற்றி விட்டான் குழுவினர் : ஆ ஆ நெஞ்சத்தை மாற்றி விட்டான் சுசீலா : ஓ ஓ நெஞ்சத்தை மாற்றி விட்டான் ஓ ஓ ஓ என்னை ஊராரே வசை சொல்ல ஏச செய்தானே என்னை ஊராரே வசை சொல்ல ஏச செய்தானே ஆற்றின் கரைதனிலே யமுனா ஆற்றின் கரைதனிலே குழுவினர் : ஓ ஓ ஆற்றின்கரை தனிலே கண்ணன் என்னை கேலி செய்தானே ஆற்றின் கரைதனிலே
சுசீலா பாட கோரஸ் குழுவினர் பாடல் வரிகளைத் திருப்பிப் பாட நல்ல ஒரு பாடலைக் கேட்ட மகிழ்ச்சியும் கண்ணனின் லீலையில் நனைந்த திருப்தியும் அனைவருக்கும் கிடைத்தது.இந்தப் பாடலைப் போல கண்ணனை மையமாகக் கொண்ட பாடல்கள் அனைத்தும் தமிழில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத் தகுந்த சுவையான விஷயம்!
ஆனந்தமான கண்ணனின் பாடல் நம் நெஞ்சை நிறைத்து மென்மையாக்க இந்த நீண்ட தொடரை முடிவுரையுடன் முடித்துக் கொள்வோம்!
(அடுத்த இதழில் முடியும்)
|
| | ச.நாகராஜன் அவர்களின் இதர படைப்புகள்.
| திரைச்சாரல் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|