 |
இதழ் 460 |
 |
மார்ச் 15 2010
|

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Your Advertisement Here
|
| |
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
|
|
| உறுதுணை தேடுமின் -14
- அமர்நாத் |
| | 'திரும்பிப்போனபிறகு முதல் காரியமாக எவ்வளவு என்று பேசி முடிவுசெய்யலாம். இப்போதைக்கு பை!' பதிலுக்குக் காத்திராமல் விருந்திற்குத் திரும்பிச் சென்றாள்.
 செவன்த் இன்னின் முன்கூடத்தில் ஒன்றிரண்டு பேர்கள்தான். அங்கே ஒரு தூணுக்கருகில் பெட்டியை நிறுத்திவிட்டு அம்பிகா, 'ஒரு நிமிஷம், பெர்ரி! ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்' என்று அகன்றாள். அவர்களைப் பின்தொடர்ந்த மரியா அந்தத் தருணத்திற்குக் காத்திருந்ததுபோல் பெரியசாமியின் அருகில் வந்தாள். தன் தடுமாற்றத்தை அவளிடமிருந்து மறைப்பது அவனுக்கு எளிதாக இல்லை.
'பெர்ரி! இங்கே வந்ததிலிருந்து நீ என்னைத் தவிர்க்கப் பார்க்கிறாயோ என்று சந்தேகம்' என்று குற்றம் சாட்டினாள்.
'அப்படியெல்லாமில்லை, மரியா! அந்தப் பெண்ணைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறேன். பேசப் பல விஷயங்கள்.'
'குட்! எனக்கும் நம்மைப் பற்றி யோசிக்க நேரம் தேவைப்பட்டது. இனி நீ மருந்து தயாரிப்பதற்கு நான் பணமும் தருவதுதான் நியாயம்' என்றாள் வியாபாரக் குரலில். 'திரும்பிப்போனபிறகு முதல் காரியமாக எவ்வளவு என்று பேசி முடிவுசெய்யலாம். இப்போதைக்கு பை!' பதிலுக்குக் காத்திராமல் விருந்திற்குத் திரும்பிச் சென்றாள். பணம் என்றதும் மரியாவின் கார் வெளியிலேயே நிறுத்தப்பட்டு கராஜினுள் என்ன நடக்கிறதென்று பெரியசாமிக்குத் தெரிந்துவிட்டது. நீர்ச் சுழலுக்குள் சிக்கியதாகவே நினைத்தான். அவன் எம்பிபிபி தயாரித்தது வெளிப்பட்டால் என்ன நடக்குமென கற்பனை விரிந்தது. ட்யூக்கிலிருந்து உடனே விலக்கப்படுவான். சிறைக்குப் போகாவிட்டாலும் விஞ்ஞான உலகில் எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதைப்பற்றி சஞ்சிகைகளில் கட்டுரைகள் எழுதப்படும். விசா உடனே ரத்து செய்யப்பட்டு அவமானத்துடன் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவான். அப்படி நடந்தால் மோகனின் எதிர்காலம். அதை நினைக்கக்கூட முடியவில்லை. பெரியசாமி அச்சத்தில் நிலை மறந்து நின்றான்.
அம்பிகா, 'என்ன ஆச்சு உனக்கு?' என்று கேட்டபோதுதான் உணர்வு திரும்பினான்.
'அங்கே போய் சொல்றேன்.'
போர்ட் சிடி ஸ்போர்ட்ஸ் பார். நடுவிலிருந்த கடற்கரைச் சாலையை பெரியசாமியும், பெட்டியை இழுத்துக்கொண்டு நடந்த அம்பிகாவும் நிதானமாகக் கடந்தார்கள். இன்னும் கும்பல் சேரவில்லை. பெரிய தொலைக்காட்சியில் தாங்க்ஸ் - கிவிங்கிற்காக வியாழன் நடக்கவிருக்கும் அமெரிக்க கால்பந்து ஆட்டங்களைப்பற்றி இப்போதிருந்தே ஒரு சூடான விவாதம். ஒருவன் டல்லஸ்தான் ஜெயிக்கும் என்றான். இன்னொருவன் அவர்கள் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்றான். திரும்பத் திரும்ப இதே பேச்சு. அதைப் பார்த்து ரசிக்கவும் நாலுபேர். அந்த சத்தத்திலிருந்து ஒதுங்கியிருந்த வட்ட மேஜையை நோக்கி அம்பிகா நடந்தாள். பெரியசாமி பானங்கள் வழங்கும் உயர்மேஜைக்குச் சென்று, 'நல்ல நார்த் கரோலைனா ஒயின் வேண்டும்' என்றான். பார்டென்டர் குனிந்து ஒரு புட்டியை எடுத்துத் திறந்து இரண்டு கண்ணாடி கோப்பைகளில் ஊற்றினான்.
'இந்த அமெரிக்கன் போர்ட் ஒயின் மிக நன்றாக இருக்கும். பத்து வருஷத்திற்கு முந்தியது.'
'தாங்க்ஸ்.' பெரியசாமி அவற்றை எடுத்து வந்து மேஜைமேல் வைத்துவிட்டு அவள் முன்னால் அமர்ந்தான். இருவரும் மெல்ல அருந்தினார்கள்.
'அம்பிகா! எனக்குத் தெரிஞ்சு நம்ம காலேஜ்லே படிச்சவங்களிலே நீதான் உசந்த நிலைலே இருக்கே. பெரிய கம்பெனிலே பொறுப்பான வேலை, சொந்தவீடு. க்ரீன்கார்ட் வாங்கியிருக்கே.' மனம் நிறைந்த பாராட்டு, அதில் பொறாமை துளியுமில்லை. 'தொழில்லே நீ சொல்றது உண்மைதான், பெர்ரி! ஆனா, என் சொந்த வாழ்க்கையிலே ரொம்ப ஏமாற்றம்' என்று வருத்தத்தோடு சொன்னாள்.
'கல்லூரி நாட்களில் ஜானையும் உன்னையும் சேர்ந்தாப்பல அடிக்கடி பார்த்திருக்கிறேனே' என்று நினைவு கூர்ந்தான்.
'வேடிக்கையா பேசுவோம். அது வெறும் நட்புதான்னு நினைச்சேன். படிப்பை முடிச்சு எனக்குக் கல்யாணம் நிச்சயமானப்போ அவனே என்னைக் கூப்பிட்டு என் அம்மாவுக்கு உன்னை மாதிரி நன்னா படிச்ச பெண்ணுன்னா ரொம்பப் பிடிக்கும், வந்து பேசச் சொல்லுன்னு கெஞ்சினான். முன்பின்தெரியாத யாரோ ஒரு ஆள்கிட்ட தலையைக் குடுக்கறதுக்குப் பதிலா ஓரளவு தெரிஞ்சவனையே கல்யாணம் பண்ணிப்போமேன்னு தோணித்து. வீட்டிலே சொன்னேன். உடனே என் அப்பா போய்ப் பாத்தப்போ, அவனோட அம்மா மதிப்பு கொடுத்துப் பேசலை. அப்பாவுக்கு ஒரே அவமானம். ஏற்கனவே ஏற்பாடு பண்ணின கல்யாணமும் நின்னு போயிடுத்து. அம்மாவுக்கு என்மேலே அடங்காத கோபம். ரெண்டு அண்ணாக்களும் நான்தான் ஏதோ தப்புப் பண்ணிட்டதா அப்புறம் கல்யாணப் பேச்சையே எடுக்கலை. வீட்டிலே எல்லாருக்கும் வேண்டாதவளாப் போயிட்டேன். குடும்பவாழ்க்கை என் ஜாதகத்திலே இல்லை போலிருக்குன்னு ட்யூக்குக்கு வந்து எம்பிஏ பண்ணிட்டு கரீயர்லே கவனம் வச்சுட்டேன்.'
அவள் ஏமாற்றத்தைப் பெரியசாமி பொறுமையுடன் கேட்டான்.
'இப்ப, உன்னோட ப்ராப்ளம் என்னன்னு சொல்லு!'
'அம்பிகா! நான் தெரியாத்தனமா ஒருபெரிய சிக்கல்லே மாட்டிகிட்டேன். ஒருவாரமா இதே கவலை. அதுவும் இந்த ரெண்டுநாளா ஒரே இடத்திலே உக்காந்து ஒண்ணும் செய்யாம இருக்கும்போது மனசு என்னவெல்லாமோ நினைச்சு அடிச்சிக்குது. யார்கிட்ட அறிவுரை கேக்கறதுன்னு தெரியலை.'
'என்கிட்டதான் சொல்லேன்!'
பெரியசாமி தன் கையிலிருந்த குறுகலான கோப்பையை உற்றுப்பார்த்து அதில் தெரிந்ததை விவரிப்பது போலப் பேசினான். 'எங்கள் ஆராய்ச்சிக்குழு மிகப் பெரிது. இருபது பேருக்கும் மேலே. அதற்கு மரியா மிலாடோவிச் மேனேஜர் மாதிரி. இன்று காலையில் நீ பேசி முடித்ததும் நிறைய கேள்விகள் கேட்டாளே, அவள்தான். ஆராய்ச்சிக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது, ஒவ்வொருவர் வேலையும் எப்படிப் போகிறது என்று கணக்குவைப்பது, எல்லாம் அவள் வேலை. தனிக்கட்டையாக இருப்பதால் சோதனைச் சாலையில் தான் எப்போதும் இருப்பாள். டாக்டர் வில்சனுக்குப் பாதிநாள் வெளியூரில் வாசம். அவள் மூலமாகத்தான் அவருக்கு எல்லோரையும் தெரியும். லேபர் சர்டிஃபிகேட்டிற்கு அவருடைய தயவு வேண்டும். அதைக் கேட்பதற்கு முன் மரியாவிடம் நல்லபெயர் வாங்கலாமென்று தோன்றியது. சென்ற தாங்க்ஸ்-கிவிங்கிற்குமுன் ஒரு காம்பௌன்டைத் தயாரிக்கும் விவரம் கொடுத்து செய்ய முடியுமா என்று கேட்டாள். எங்கள் குழுவின் ஆராய்ச்சிக்கு என்று நினைத்தேன். அப்போது அது எம்பிபிபி என்கிற போதைப்பொருள் என்று அடையாளம் கண்டுபிடிக்கிற அளவுக்கு எனக்கு கெமிஸ்ட்ரி தெரியாது. தெரிந்திருந்தால் அப்பொழுதே மறுத்திருப்பேன். கவனமெடுத்து நான்செய்து அவளிடம் கொடுத்தபோதுதான் அது அவளுடைய சொந்த உபயோகத்திற்கு என்று தெரிந்தது. ஏதோ ஒருத்தி நாமெல்லாம் நல்ல ஒயினைக் குடிப்பதுபோல் எம்பிபிபியை அனுபவிக்கட்டுமே என்று விட்டுவிட்டேன். நான் தெருவில் எடுத்துச்சென்று அதைக் கொள்ளைப் பணத்துக்கு விற்கவில்லையே, எதற்குப் பயப்பட வேண்டும்? அப்போது நான் தயாரித்தது ஒரு வருஷத்துக்குப் போதுமென்று அவள் சொன்னாள்.'
அவன் பிரச்சினையை நடுவில் குறுக்கிடாமல் அம்பிகா கவனமாகக் கேட்டாள்.
'விஷயம் அத்தோடு முடிஞ்சுபோயிரும்னு நினைச்சேன்' என்று இழுத்தான் பெரியசாமி.
'எவ்வளவு தடவை எம்பிபிபி பண்ணியிருக்கே?
'அலபாமால ஒருவாட்டி. இங்கே வந்தவுடனே ஜூலைலே ஒரு தடவை. பத்துநாளைக்கு முன்னால ரெண்டுமடங்கு ஸ்கேல்லே தொடங்கினது பாதிலே நிக்கிது. யாருமில்லாத நேரத்திலதான் அதைச் செய்யறேன். அப்பகூட விஷயம் வெளியே பரவும்போல தெரியுது.'
'ஏன் அப்படிச் சொல்றே?'
'அவ மத்தவங்களுக்கு அதைத் தரலாம்னு நினைக்கிறேன். ஒருத்திக்கி எவ்வளவு வேணும்?'
'ஒருவேளை எம்பிபிபிக்கு அடிமையாயிட்டாளோ என்னவோ!'
'அப்படி இருக்கமுடியாது. யூ.எஸ். வர்றதுக்கு முன்னாலேயே பல வருஷமா அதை பொழுதுபோக்குக்காக பயன்படுத்தினதா சொல்லியிருக்கா.'
'நீ வேற இடம் போயிட்டா... நம்பிக்கையான நீ இருக்கும்போதே பண்ணச்சொல்லி சேத்து வச்சுக்கலாம்.'
'அதுக்கும் இன்னும் ஆறுமாசத்துக்குமேலே இருக்கே.'
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுதான் அம்பிகாவின் திறமை. தேன் நிறத்திலிருந்த மீதி பானத்தை ஒரே மடக்கில் குடித்தாள். மூளைக்கு சூடேறியது. அவன் கொடுத்த விவரங்களை ஒன்றுசேரப் பார்த்தாள். கம்யூனிச நாட்டின் அடக்குமுறையில் பழக்கப்பட்ட ஒருத்தி சாமர்த்தியமாக அரைகுறை கெமிஸ்ட்ரி தெரிந்த, வெளிநாட்டிலிருந்து தற்காலிக விசாவில் வந்து நிரந்தரமாகத் தங்குவதற்கு வழிதேடும் ஒருவனைத் தன்தேவைக்குப் பயன்படுத்தியது சுவாரசியமாக இருந்தது.
'லாப்லே யாருக்கெல்லாம் இது தெரியும்?' என்று ஆரம்பித்தாள்.
'இப்போதைக்கு மரியா ஒருத்திதான்.' சரவணப்ரியாவை அவனுக்கு ஓரளவு தெரியும். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பவள். அவள் யாரிடமும் வாய்விடமாட்டாள் என்பது நிச்சயம்.
'குமாரிக்கு?'
'இன்னும் சொல்லலை.'
'உன்னையே நம்பியிருக்கிற அவளுக்குத் தெரியாததே நல்லது. மரியாதான் எம்பிபிபிக்கு வேணுங்கற சாமான்களை ஆர்டர் பண்ணினாளா?
'ஆமாம்.'
'கெமிகல்ஸெல்லாம் என்ன விலை?
'என்ன, எல்லாம் சேர்ந்து நாப்பது டாலர் இருந்தா அதிகம்.'
'அவ்வளவுதானா? ஆடிட்லே எதுக்கு அதெல்லாம் வாங்கினதுன்னு கேள்வி வராது.'
'அதுவரைக்கும் தாங்க்ஸ்.'
'மரியா எதுக்கு உன்னை காட்டிக்கொடுக்கணும்?'
'அவ செய்யாட்டியும் யாராவது பாத்து சந்தேகப்பட்டா... அலபாமாலே எங்க லாப் தனியா ஒரு மூலைலே இருந்தது. இங்கே அப்படியில்லை.'
'அவ எப்போ ட்யுரம் திரும்பிப் போறா?'
'எங்க எல்லாருக்குமே நாளை காலைவரை ரிசர்வேஷன் இருக்கு.'
'உங்க க்ரூப்லே ஓபியம் சம்பத்தப்பட்ட ரிசர்ச் நடக்கறதா?'
'இல்லை. நாங்க செய்யறதெல்லாமே செல் கல்சர், இல்லாட்டி சி. எலிகான்ஸ் புழு, இந்தமாதிரி விவகாரம்தான். அதுதான் கவலையா இருக்கு.'
நியாயமான கவலை. அம்பிகா சிலநிமிடங்கள் யோசித்துவிட்டு முடிவெடுத்தாள். எம்பிபிபி செய்வதை பெரியசாமி உடனே நிறுத்தினால் மட்டும் போதாது, ஏற்கனவே செய்ததற்கு எந்தவிதமான தடயமும் இருப்பது நல்லதல்ல என்று நினைத்தாள். மதுக்கடையின் முன்புறம் சென்று விமான நிலையத்தை அழைத்து ஃப்ளைட் தாமதமானதால் அவளுடைய டிக்கெட்டை ரத்துசெய்யச் சொன்னாள்.
திரும்பி வந்து அவன் முதுகில் தட்டி, 'பெர்ரி! எழுந்திரு! நாம ட்யுரம் வழியா ஷார்லெட் போறோம், உன் கார்லே' என்றாள்.
காலி கண்ணாடி தம்ளர்களுக்கடியில் இரண்டு இருபது டாலர் நோட்டுகளை நுழைத்துவிட்டு அம்பிகா பெட்டியோடு நடந்தாள். பெரியசாமி எதுவும் கேட்காமல் பொம்மை போல் அவளைப் பின்தொடர்ந்தான்.
பெரியசாமியின் காருக்குப் பின்னால் அம்பிகாவின் பெட்டியோடு, அவனுடைய அறையைக் காலி செய்து எடுத்து வந்த சாமான்களும் புகுந்தன.
(தொடரும்)
|
| | அமர்நாத் அவர்களின் இதர படைப்புகள்.
| தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
|
|
|
|
|
|