''அபார்ட்மென்டா? ஹோட்டலா?'' என்றபடி அவளை நோக்கித் திரும்பியவன் அவள் முகத்தில் தெரிந்த வேதனையைக் கண்டு ''ஆர் யூ ஆல்ரைட்?'' என்றான் கரிசனமாய்.
முதலில் அதனை சாதாரணமாய் நினைத்தாலும் வலி நிலைத்து நின்றதில் மனதுக்குள் குழந்தைக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ என்ற பெரும் கலக்கம் தோன்றியது. அந்த எண்ணம் அவளுக்குள் தங்கவொணா வேதனையை ஏற்படுத்திற்று. அடிவயிற்றிலிருந்து எழுந்த கேவலை தொண்டைக்குள் அடக்கினாள். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தாலும் அவனிடம் சொல்ல ஏனோ தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
''அபார்ட்மென்டா? ஹோட்டலா?'' என்றபடி அவளை நோக்கித் திரும்பியவன் அவள் முகத்தில் தெரிந்த வேதனையைக் கண்டு ''ஆர் யூ ஆல்ரைட்?'' என்றான் கரிசனமாய்.
மருத்துமனையில் சோதனைகளுக்காகக் காத்திருந்த ஒவ்வொரு கணமும் வெகு துக்கமாய் இருந்தது புவனாவுக்கு. பிறக்காத தன் குழந்தையின் மேல் எங்கிருந்து இத்தனை பாசம் வந்தது என்று தெரியாவிட்டாலும் குழந்தையை இழந்துவிட அவள் தயாராக இல்லை . முதன் முதலாய் மனசு துணை தேடிற்று. யார் தோளிலாவது சாய்ந்து சற்று அழவேண்டும் போலிருந்தது. தலையைக் கைகளில் தாங்கிக் கொண்டாள்.
''ரொம்ப வலிக்குதா?'' என்றான் அவள் தோளில் கைவத்து. ''குழந்தைக்கு ஏதாவது ஆகியிருக்குமோன்னு...'' முடிக்கமுடியாமல் உதடுகளை அழுந்தக் கடித்தபடி அவள் திணற அவன் அவள் அனுமதிக்குக் காத்திருக்காமல் அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டான். அதற்காகவே காத்திருந்தது போல கண்களில் வெள்ளம் மடை திறந்தது. ஹரி அவளை இறுக்கமாய் அணைத்தபடி, ''ஒண்ணும் ஆகாதும்மா'' என்றான் அவள் காதோரத்தில் இதழ் பதித்து.
அவளை சோதனைக்காக அழைத்துச் சென்றபின் ஹரிக்கு அவளின் பதற்றம் தொற்றிக்கொண்டது அவனுக்கே வியப்பாயிருந்தது. குழந்தைக்கும் அவளுக்கும் ஒன்றும் நேர்ந்துவிடக்கூடாது என்ற கவலை அவனை அரித்துத் தின்றது. இது மனிதாபிமானத்தையும் மீறிய ஒரு உணர்வு என்பதை அவன் உணர்ந்தபோது சற்று பயமாகக் கூட இருந்தது.
அவன் நிலைகொள்ளாமல் முன்னும் பின்னுமாய் நடந்து கொண்டிருந்தான். வயதான நர்ஸ் அவனை உள்ளே அழைத்தார். ''எனி ப்ராப்ளம்?'' என்று அவன் பதற்றமாய்க் கேட்டதும், ''நோ. நோ. உன் குழந்தையின் இதயத் துடிப்பைக் கேள்'' என்று கம்ப்யூட்டர் ஸ்கீரீனைக் காட்டினார்.
புவனாவின் தலைமாட்டில் நின்று திரையில் தெரிந்த உருவத்தையும் பெரிதாக்கப்பட்ட இதயத் துடிப்பையும் கேட்டபோது அவனுக்குள் ஒரு பெரிய மாறுதல் ஏற்படுவதை உணர்ந்தான் ஹரி. இது தான் உருவாக்கிய உயிர், தனது இரத்தம் என்கிற நிதர்சனம் முதன் முறையாக அவன் உயிரைத் தொட்டது.
அவனறியாமல் கண்கள் பனித்தன. புவனாவின் விரல்களை இறுக்கமாய்ப் பற்றி அவள் நெற்றியில் உணர்ச்சிபூர்வமாய் முத்தமிட்டான். புவனாவுக்கு இதமாய் இருந்தது. தனக்குத் துணை தேவையில்லை என்கிற வைராக்கியம் சற்றே ஆட்டம் கண்டது. அவன் துணை சுகமாய் இருக்கிறது. இந்தப் பகிர்தல் இதமாய் இருக்கிறது. இது நிலைக்காதா என்று மனதுக்குள் எழுந்த ஏக்கத்தை முளையிலேயே நசுக்கிப் போட முனைகிறாள் புவனா.
***
அவன் மௌனமாகவே காரைக் கிளப்பினான். புவனாவுக்கு மனதை அழுத்திய பாரம் விலகினதில் ஆயாசமாய் இருந்தது. அவன் மௌனம் சௌகர்யமாய் இருக்க மெல்ல கண்ணை மூடியவள் நிம்மதியான உறக்கத்தில் ஆழந்தாள்.
இரண்டு மணி நேரம் கழித்து காரை அவன் தன் அபார்ட்மென்ட் முன் நிறுத்திவிட்டு அசந்து தூங்குபவளை எழுப்ப மனம் இல்லாமல் பார்த்தான். 'பாவம், ரொம்ப பயந்துவிட்டாள். நான் இல்லாவிட்டால் என்ன செய்திருப்பாள்' என்று நினைத்தபடியே அவள் தலையை மெல்ல வருடினான். அவள் திடுக்கிட்டுக் கண்விழித்து அனிச்சையாய் அவன் கைகளைத் தட்டிவிட்டாள். முகத்தில் பயத்தின் சாயல் தெரிந்தது
அவன், ''இட்ஸ் ஒகே... நான்தான்'' என்று மலங்க மலங்க விழித்தவளை சமாதானப்படுத்தினான்.
சுற்று முற்றும் பார்த்து, ''ஹோட்டலா?'' என்றாள்.
''இல்லை... என் அபார்ட்மென்ட்''
''ஏன்?'' கண்ணில் தூக்கத்தோடு குழப்பமும் கலந்தது.
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ''கமான்'' என்று கையை நீட்டினான்
புவனாவுக்கு யோசிக்க முடியவில்லை. பலவீனமாய் இருந்தது. மீண்டும் தூங்கிப் போனாள்
இதற்கு முன் இப்படிப்பட்ட இக்கட்டில் இருந்ததில்லை ஹரி. ஒரு வேளை சினிமா கதாநாயகன் போல தூக்கிக் கொண்டு போக வேண்டுமோ என்றெழுந்த யோசனையை 'சில்லி' என்று ஒதுக்கினான். சற்று நேரம் முடிவெடுக்க முடியாமல் காரைச் சுற்றி வந்தான். குளிராயிருந்தது.
''புவனா, வீட்ல போய் தூங்கலாம், கமான்'' என்றான் அருகில் குனிந்து
'ம்ம்...' தூக்கக் கலக்கத்தோடே எழுந்து நடந்தாள்.
அபார்ட்மெண்டில் லிண்டாவைக் காணாததில் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது புவனாவுக்கு.
''கெஸ்ட் ரூமில ஷீட்ஸ் எல்லாம் புதுசுதான். படுத்துக்கறியா? வேற ஏதாவது வேணுமா?'' அனுசரணையாய்க் கேட்டான்.
''ஓ... நோ ப்ராப்ளம். பாத்ரூம் இங்கேருக்கு'' அவன் குரலில் படபடப்பிருந்தது. அவளை வசதியாய் வைத்திருக்க வேண்டும் என்ற கரிசனம் இருந்தது. அவசரமாய்ப் புத்தம் புது துண்டு எடுத்துக் கொண்டு வந்தான்.
அவள் தயங்கியதைப் பார்த்தவன், ''மாத்திக்கறதுக்கு ட்ரெஸ் இல்லையா? வெயிட் பண்றியா? ஒரு அரை மணி நேரத்தில வாங்கிட்டு வந்திர்றேன்'' என்று கிளம்ப ஆயத்தமானான்.
அந்த நேரத்தில் அவனுக்குத் தொந்தரவு வேண்டாமென ''இல்லை, வேண்டாம். நான் மேனேஜ் பண்ணிக்கறேன்'' என்று அவசரமாய் மறுத்தாள்
''ஒண்ணும் கஷ்டமில்லை. சைஸ் சொல்லு''
அவளுக்கு சங்கோஜமாய் இருந்தது. ''இல்லை வேண்டாம்''
''ரைட்... அப்போ நீயும் வா. வாங்கிட்டு வரலாம்''
அவளுக்கு சக்தி இல்லை. குளித்துவிட்டுப் படுத்துக்கொண்டால் தேவலாம் என்றிருந்தது.
அவள் யோசிப்பதைப் பார்த்து ''ஒன் மினிட்'' என்றுவிட்டு அவன் ரூமுக்குள் சென்று திரும்பிவந்தான்
''இது புது பைஜாமா. டெம்பரரியா இதைப் போட்டுக்கோ. நைட்டியை லாண்டரில போட்டா ஒரு மணி நேரத்தில ட்ரை ஆகியே வந்துரும்'' என்று உறையைப் பிரித்து பைஜாமாவை நீட்டினான்.
அவள் குளித்துவிட்டு வந்ததும் மறக்காமல் நைட்டியை வாங்கி வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, ''குட்நைட்'' என்றான்.
ஹரி உறக்கம் பிடிக்காமல் வெகு நேரம் புரண்டு கொண்டிருந்துவிட்டுக் கடைசியாய் நித்திரையில் ஆழந்த போது புவனா மறுநாளைத் துவக்கத் தயாராகிவிட்டிருந்தாள்.
எழுந்து கொள்ளும் போதே பசி உலுக்கியது. வெட்கம் பாராமல் ஃபிரிஜிலிருந்து பாலெடுத்து சீரியலில் ஊற்றி சாப்பிட்டாள். பின் சும்மா இருக்கப் பிடிக்காமல், பாத்திரம் கழுவி அடுக்கினாள். சமையலறையையும் ஃபிரிஜையும் சுத்தம் செய்தாள். மணி ஒன்பதாகியிருந்தாலும் அவன் எழுந்து கொள்ளாமலிருக்க, பாலும் முட்டையும் சேர்த்து ஃப்ரெஞ்ச் டோஸ்ட் செய்து வைத்து விட்டு அவனை எழுப்பினாள்.
அறைக்கதவு மெலிதாய்த் தட்டப்பட்டதும் அவசரமாய் எழுந்து கொண்ட ஹரி மணியைப் பார்த்ததும் தன்னைக் கடிந்து கொண்டான். புவனா வெளியில் பிரகாசமாய் நின்றிருந்தாள். காலையில் எழுந்ததும் அவளைப் பார்ப்பதில்தான் தனக்கு எத்தனை மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டே, ''ஸாரி... நல்லா தூங்கிட்டேன்'' என்றான்.
அவன் சாப்பிடும் வரை பொறுத்திருந்துவிட்டு, ''போலாமா?'' என்றாள் புவனா. ஹரி விழித்தான். ''எங்கே?'' ''வீட்டுக்குத்தான்'' ''ஏன்? நாளைக்கு ஈவினிங் போலாமே?'' ''ஏன்?'' ''அங்கே தனியாதானே இருக்கணும்?'' ''எப்பவும் தனியாதானே இருக்கேன்?''
ஹரிக்கு எரிச்சல் வந்தது. அவளை மடக்கும் பொருட்டு, ''நேத்து நான் இல்லைன்னா என்ன பண்ணியிருப்பே?'' என்றான்.
''இத்தனை வருஷமா என்ன பண்ணினேனோ அதான் பண்ணி இருப்பேன்''
ஹரிக்கு சலிப்பாக இருந்தது. என்ன பெண் இவள்! எதற்கு இத்தனை அகம்பாவம்?
''ரைட், உனக்கு யாரும் தேவையில்லை. பட் எனக்கு உன்னை இந்த நிலைமைல தனியா விட விருப்பம் இல்லை. ஒகே?'' குரல் உயர்ந்தது.
''திடீர்னு ஏன் இத்தனை அக்கறை?'' அவள் குரலிலிருந்த பரிகாசம் அவனுக்குப் பிடிக்கவில்லை.
''ஏன் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கணுமா?''
பேச்சை திசை திருப்ப எண்ணி, ''நாளைக்கே லிண்டா வந்து நின்னா என்ன பதில் சொல்வீங்க?'' என்றாள்.
''அவ வரமாட்டா. பிரிஞ்சிட்டோம்''
''ஓ... வெரி ஸாரி'' என்றாள் சற்றே கேலியுடன்.
ஹரி அவளை நிதானமாய் ஒரு முறை பார்த்துவிட்டு, ''ஷாப்பிங் போறேன். உனக்கு என்ன பிடிக்கும்?'' என்றான்.
''ஆங்?'' இந்தக் கேள்வியை இதுவரை யாரும் அவளிடம் கேட்டிராததால் அவளுக்குப் பதில் தெரியவில்லை.
''என்ன பிடிக்கும்னு கேட்டேன்''
''அப்படி எதுவும் இல்லை'' என்றதும்,''என்னை வெறுப்பேத்தற முடிவோட இருக்கே. பரவாயில்லை. கீப் அட் அப்'' எரிச்சலுடன் சொல்லிவிட்டு அவன் வெளியேறிப் போக புவனாவுக்கு அவன் தன்னைப் புரிந்து கொள்ளாதது வருத்தத்தைத் தந்தது.
இத்தனை வருஷமாய் அம்மாவுக்கும் தங்கைகளுக்குமான தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்கிற சிந்தனையிலேயே வாழ்க்கை கழிந்துவிட்டதில் தனக்கு என்ன பிடிக்கும் என்கிற பிரக்ஞை கூட இல்லாமல் போய்விட்டது இப்போதுதான் புலப்படுகிறது. அவனது கேள்விக்கு விடை கண்டு பிடித்தே தீருவது என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்
சின்ன வயதிலிருந்தே இயற்கை பிடிக்கும்... அதுவும் ஓடுகிற நீர் மிகவும் பிடிக்கும். அதனால்தான் இந்த நதிக்கரை வீடு அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறதோ என்னவோ?
அப்புறம்...? சமைக்கப் பிடிக்கும். கோலம் போடப் பிடிக்கும். பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் பிடிக்கும்
சாப்பிட என்ன பிடிக்கும்? ப்ளம் கேக் பிடிக்கும்... அதுவும் கருவுற்ற பின் கேக் மீதும் ஐஸ்க்ரீம் மீதும் ஆசை அதிகமாகத்தானிருக்கிறது
புதுச் சேலை பிடிக்கும்... ஆனால் என்னவோ எப்போது புடவை வாங்கினாலும் தங்கைகளைக் கட்ட வைத்துப் பின் தான் கட்டுவது வழக்கமாகி விட்டது.
பவள மல்லிப் பூ பிடிக்கும்...
புதுப் புத்தகம் பிடிக்கும்... 'அட எனக்கு இவ்வளவு ஆசைகளா?'