இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் குழந்தைகளின் உரிமைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது என்பதோடு பெற்றோருக்குக் குழந்தைகளின் மீது ஏகபோக உரிமையும் உண்டென்பதால், பிரிட்டனில் வசிக்கும் ஆசியப் பெற்றோருக்கு இங்குள்ள குழந்தைகள் நலத் திட்டங்கள் வாயிலாகக் காட்டப்படும் அதீத பாதுகாப்புணர்வு கொஞ்சம் சவாலாக அமைந்துவிடுவதைக் காண முடிகிறது.
ஒன்றரை வயது 'பேபி பீ'யின் மரணம் சில மாதங்களாக பிரிட்டனைப் பரபரப்புக்குள்ளாக்கி மக்களின் இதயங்களைக் கலங்க வைத்துவிட்டது. 2007 ஆகஸ்டு மாதம் 3ம் தேதி, இந்தக் குழந்தை தனது படுக்கையில் இறந்து கிடந்த போது அதன் 8 விலா எலும்புகளும் கழுத்தும் முறிந்திருந்தன. உதட்டிலும் முகத்திலும் காயங்களிருந்தன. இது நடந்து இரு வருடங்களுக்குப் பின் இந்தக் குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக அதன் தாய் மற்றும் அவரது சிநேகிதர்கள் இருவருக்கு பிரிட்டன் நீதிமன்றம் கடுமையான சிறைத் தண்டனைகளை விதித்திருக்கிறது.
குழந்தைகளின் பாதுகாப்புக்கு மேலைநாடுகளில் அதீத முக்கியத்துவம் உண்டு. குழந்தை பிறந்த உடனேயே அது சமூக சேவை அமைப்பில் பதிவாகிவிடும். ஆரம்ப காலங்களில் செவிலியர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் குழந்தையின் வீட்டுக்குச் சென்று அதன் உடல் நலம் மற்றும் அதன் சூழல் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கைகளைச் சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கைகளின் அடிப்படையில் சமூக சேவை அமைப்பு மேலும் விசாரணைகளை நடத்தி குழந்தையின் நலம் சரியாகப் பேணப்படவில்லை என்று கருதினால், குழந்தையைப் பெற்றோரிடமிருந்து பிரித்து தனது பராமரிப்பில் ஏற்றுக் கொள்ள்ளும்.
தவிர, குழந்தைகளின் உடலில் காயங்களைக் கண்டாலோ அல்லது அவர்களது மனப்போக்கில் கரிசனத்துக்குரிய மாறுதலைக் கவனித்தாலோ, மருத்துவர், ஆசிரியர் போன்ற சம்பந்தப்பட்ட துறையினர் சமூக நலச் சேவை அமைப்புக்குத் தெரிவிக்க வேண்டியது கடமை. இவ்வளவு கவனிப்பு இருந்தும் பேபி பி 17 மாதங்கள் தொடர்ந்து கொடுமைப் படுத்தப்பட்டு பலத்த காயங்களால் இறந்தது எப்படி என்பதுதான் பிரிட்டன் மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.
குழந்தைகளை தடம் ஏற்படும் அளவுக்கு அடிக்கும் பெற்றோருக்கு 5 வருடம் வரை சிறைத் தண்டனை தருவதற்கான சட்டம் இங்கு அமலில் இருக்கிறது. குழந்தைகளை நெறிப்படுத்துவதற்காக அவர்களை மென்மையாக அடிக்கும் சலுகையை இந்த சட்டம் பெற்றோருக்கு வழங்கி இருக்கிறது. இச்சட்டத்தின்படி குழந்தைகளை வீக்கமோ, சிராய்ப்போ, வெட்டுக் காயமோ, அல்லது வேறெந்த விதமான அடையாளமோ ஏற்படும்படி தண்டிக்கும் பெற்றொர்களின் மேல் நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த சட்டம் 2005-ல் அமல்படுத்தப்பட்ட போது 'குழந்தைகளுக்கு எது நல்லதென்று பெற்றோர்களுக்குத் தெரியும்; அரசாங்கம் எங்களுக்கு சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை' என்று பெற்றோர்கள் கொடிபிடித்தார்கள். ஆனால் கல்வித் துறை இந்த சட்டத்தை உள்ளபடியே வரவேற்றது. இந்த சட்டம் குழந்தைகளின் நலத்தையும் பெற்றோரின் உரிமையையும் ஒரு சேர பாதுகாப்பதாக உள்ளது என்றது இத்துறை. எனினும் குழந்தைகளை அடிப்பதை முற்றிலும் தடை செய்ய சட்டம் கொண்டுவரவேண்டும் என்று தொடர்ந்து ஒரு சாரார் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். வயது வந்த ஒருவரை அடிப்பது எப்படி சட்டப்படி குற்றமோ அது போல குழந்தைகளை அடிப்பதும் குற்றமாகக் காணப்படவேண்டும் என்பது இவர்கள் வாதம்.
குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள்; விபரமறியாதவர்கள்; பலவீனமானவர்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் கடமை என்பதில் மேலைச் சமூகம் தெளிவாக இருக்கிறது. குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்கும் நலத்துக்கும் அரசு மற்றும் அரசு சாரா சேவை நிறுவனங்கள் மூலமாக தகுந்த கவனிப்பு கிடைக்கிறது. இவை ஏற்படுத்தும் விழிப்புணர்வு காரணமாக இங்குள்ள பெரும்பாலான பெற்றோர்களுக்கு குழந்தைகளின் எதிரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.
ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் குழந்தைகளின் உரிமைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது என்பதோடு பெற்றோருக்குக் குழந்தைகளின் மீது ஏகபோக உரிமையும் உண்டென்பதால், பிரிட்டனில் வசிக்கும் ஆசியப் பெற்றோருக்கு இங்குள்ள குழந்தைகள் நலத் திட்டங்கள் வாயிலாகக் காட்டப்படும் அதீத பாதுகாப்புணர்வு கொஞ்சம் சவாலாக அமைந்துவிடுவதைக் காண முடிகிறது. தனது மகனுக்குக் கறிவேப்பிலை பிடிக்கவில்லை என்பதற்காக அதனை சிறு சிறு துண்டுகளாகக் கத்தரித்து உணவில் சேர்த்த பிரியாவுக்கு, ஏன் குழந்தைக்குப் பிடிக்காத உணவைக் கட்டாயப்படுத்திக் கொடுக்கிறீர்கள் என்று பள்ளியின் சமூக சேவை அமைப்பிலிருந்து கேள்வி எழுப்பப் பட்டபோது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். 'உதைப்பேன்' என்று விளையாட்டாய் மனைவியிடம் சொன்ன நண்பர் ஒருவரின் மகன் அதனை அப்படியே பள்ளியில் ஒப்புவிக்க, மறுநாள் அவரது மனைவியிடம் கணவரின் நடத்தை பற்றிய விசாரணை நடந்தது.
இதையெல்லாம் விட, சமீபத்தில் பணி நிமித்தம் பிரிட்டனில் குடியேறிய இந்தியர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் வேதனைக்குரியது. அவரது இரண்டு வயதுக் குழந்தை தெரியாமல் வீட்டை வெப்பப்படுத்தும் ரேடியேட்டரில் கை வைத்துவிட, பதறிப்போய் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். காயத்துக்கான காரணம் கேட்கப்பட்டபோது, தாங்கள் கவனிக்காத நேரத்தில் குழந்தை ரேடியேட்டரில் கைவத்து விட்டதாக அவர்கள் தெரிவித்ததும், உடனடியாக சமூக சேவை அமைப்புக்குத் தகவல் சென்றது. பெற்றோர் எவ்வளவோ விளக்கியும் மன்றாடியும் குழந்தை சமூக சேவையின் பராமரிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. தனது பணி, உடைமைகள் எதையுமே கருத்தில் கொள்ளாது குழந்தையோடு இந்தியாவுக்கு விமானமேற அவர்கள் பட்டபாட்டினைக் கேள்விப்பட்டபோது, அவர்களின் மீது மிகுந்த பரிதாபம் ஏற்பட்டதோடு, மிகவும் சிக்கலான இந்தப் பிரச்சினைக்கு எளிதான தீர்வொன்றுமில்லை என்ற எண்ணமும் வலுப்பெற்றது.
குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளிலும் குழந்தைகள் எந்த விதத்திலெல்லாம் பாதிக்கப்படலாம் என்பதற்கான விளக்கங்களும், வழிகாட்டிகளும், செயல் முறைகளும் அவற்றில் தகுந்த பயிற்சியும் பணியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், பிரச்சினைகளை அடையாளம் காண்பதில் அதிகாரிகளின் கணிப்பு சம்பந்தப்பட்டிருப்பதாலும், கணிப்பு மனிதருக்கு மனிதர் வேறுபடும் என்பதாலும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒரே சீராக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. சற்று கவனம் பிசகினாலும் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது; அதீத கவனமாக இருந்தாலோ பெற்றோர்களின் மன நிம்மதி குலைந்துவிடுகிறது. இந்த இரண்டுக்குமான எல்லைக் கோட்டினை வரையறுத்து சீராக செயல்படுத்துவதென்பது இயலாத காரியம். ஆசிரியையாகப் பணியாற்றும் லஷ்மி தனது பணியில் எப்போதும் கத்தி மேல் நடப்பது போலக் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் பதற்றத்தைத் தருவதாகக் குறிப்பிடுகிறார்.
பேபி பீ வழக்குக்குப் பின், குழந்தைகள் நலம் குறித்த புகார்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பும், ஆனால் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பங்களில் பெருத்த சரிவும் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குழந்தையின் மரணம் குறித்த விசாரணை அறிக்கை, மருத்துவர்களும், செவிலிகளும், சமூக சேவகர்களும் இந்தக் குழந்தையை அறுபது முறை பார்வையிட்டும், தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்தக் கொடூரம் நிகழ்ந்ததற்கான காரணம் சிரத்தையான, நுணுக்கமான செயல்பாடின்மையே என்று தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஏற்பட்ட கவனக் குறைவுக்காக குழந்தையின் மருத்துவரும் சமூக சேவகர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இதற்குப் பொறுப்பேற்று உள்ளூர் நகராட்சியில் குழந்தைகள் நலப் பொறுப்பில் இருந்தவர்கள், அமைச்சர் என்று பலர் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.
கடந்த சில மாதங்கள் வரை பேபி பீ என்று குறிப்புப் பெயராலேயே அறியப்பட்ட குழந்தை பீட்டர் கனாலியின் முழுப்பெயர் அவனது சகோதர சகோதரிகளுக்கு முழு பாதுகாப்பு கிடைத்த பின்னர் சமீபத்தில்தான் வெளியானது. தங்க நிற சுருள் முடி, நீல நிறக் கண்கள், அந்தச் சின்ன உடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கொண்டிருந்த போதும் உதட்டிலிருந்த புன்னகை - பீட்டர் தனது அகால மரணத்தின் மூலம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றுவிட்டான்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்படித் தவறுகள் நேர்ந்தாலும், சுமார் 6 இலட்சம் பரிந்துரைகளை விசாரிக்கும் குழந்தைகள் நல அமைப்பின் மூலம் பல குழந்தைகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தற்சமயம் தேவையான அளவு சமூக சேவகர்களில்லாத காரணத்தால், இருக்கும் பணியாளர்கள் விடுமுறை நாட்களிலும் கூட நீண்ட நேரம் வேலை செய்ய நேரிடுகிறது. விரும்பியே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் பணிச்சுமையினால் பிசகுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பது இவர்களுக்கு பெரும் நெருக்கடியையையும் மனச் சோர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது மென்மேலும் தவறுகள் ஏற்பட வழி வகுக்கும் என்பதால் இந்தப் பிரச்சினைக்கு அவசரத் தீர்வு தேவை என்பதை உணர்ந்து அரசு விசேஷ நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. எப்போதாவது நடக்கும் இத்தகைய தவறுகளின் மூலம் பாடம் கற்றுக் கொண்டு குழந்தைகள் நலத் திட்டங்களையும் சட்டங்களையும் இச்சமூகம் மேலும் மெருகேற்றி வருவது பாராட்டுக்குரியது.
இந்த சூழலிலிருந்து உலகின் வெவ்வேறு பகுதிகளில் வறுமையாலும் வன்முறையாலும் மடியும், போராளிகளாய் பயன்படுத்தப்படும், அகதிகளாய் அவதிப்படும், கடும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளைக் காண்கையில் 'இது நியாயமில்லை' என்கிற ஆதங்கம் ஆக்ரோஷமாய் எழுகிறது.