"அநியாயமாய்ப் பேசாதே" என்பதை விடுத்து "நியாயமில்லை உங்கள் பேச்சில்" என்று சொல்லப் பழக வேண்டும், நாகரிக சமுதாயமாகிய நாம் என்பார் நண்பர் ராம்குமார்.
ஹாய் ஃபிரெண்ட்ஸ்!
என் மீதான உங்கள் கருத்துச் சுதந்திரம் என்பது எது வரை?
காதல் கோட்டை படத்தில் அஜீத் கரணிடம் சொல்வார். ''உன் சுதந்திரம் என்பது என் மூக்கு நுனி வரை மட்டும்தான். அதைத் தாண்டி என் பர்சனல் விஷயங்களில் தலையிடாதே'' என்பார் அவர்.
ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட அளவில் இந்த அளவுகோல் மாறுபடுகிறது. பொது என்று வரும்போது அதற்கேற்ற வகையில் நடந்து கொள்வதுதான் தர்மம் (Ethics) என்று சொல்லப்படுகிறது.
Peak Point என்ற ஒன்று சொல்வார்கள். பல அப்ளிகேஷன்களிலும் இந்த Peak point-ன் தேவை என்பது இருக்கும். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி! இயற்பியலோ, வேதியியலோ, பொறியியலோ... எதுவாயினும் சரி. ஒரு செயல்பாட்டின் மதிப்பு என்பது அதன் உச்சத்தை எட்டிவிட்டால், அதன் மதிப்பு கீழிறங்க ஆரம்பித்து விடும்.
செய்தி ஊடகங்களின் வெளிப்படையான, சுதந்திரமான செயல்பாடுகளும் அது போன்றதொரு உச்சத்தை எட்டிவிட்டனவோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ''செய்தி ஊடகங்கள்'' என்று இதைப் பொதுமைப்படுத்துவது கூடத் தவறுதான். ''ஒரு சில செய்தி ஊடகங்கள்'' என்று வட்டத்தைச் சுருக்கலாம்.
ஆனால், அந்த ''ஒரு சில செய்தி ஊடகங்கள்'' விஷ ஆக்டோபஸைப் போல விரிந்து பரந்திருக்கும்போது நல்லனவற்றையும் கபளீகரம் பண்ணிவிடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது.
ஊடகங்களின் அளப்பரிய வளர்ச்சியும், தகவல் தொழில்நுட்பத்தின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சியும் வேறொரு தளத்தினை நோக்கி மனித செயல்பாடுகளை நகர்த்திக் கொண்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். எனது தனிப்பட்ட கருத்து.
கருத்துச் சுதந்திரத்தின் எல்லை மீறல்கள் அபாயகரமானவை. சாமானியனையும் வெகுண்டெழச் செய்யும் வாய்ப்பிருக்கிறது. உணர்ச்சி வசப்படுதல்கள் நிறைந்த சமுதாயத்தில் அதைக் கிளறி விட்டுக் ''காசு'' பார்க்கும் கடைந்தெடுத்த நஞ்சுக்கள் உலவும் சமுதாயம் இது. எந்தப் பிரச்சினை மரத்தைத் தொட்டாலும் அதன் மூல வேராக பணம்தான் இருக்கிறது!!
உணர்ச்சி வசப்படுதல்களைத் தவிர்த்து உண்மையை உணர்வுப் பூர்வமாக அறிவதென்பதே பகுத்தறிவு. அந்தப் பகுத்தறிவு என்னும் நல்ல வார்த்தையையே சீரழித்து சின்னாபின்னமாக்கிவிட்டனர்.
எப்போதுமே மந்தமாகிப் போகாத வியாபார மார்க்கெட்டைக் கொண்டது செக்ஸ். உயிர்கள் உருவான காலத்திலிருந்து இக்கணம் வரைக்கும் அந்த மார்க்கெட்டில் மட்டும்தான் வியாபாரமும், லாபமும் பிய்த்துக் கொண்டு ஓடுகின்றன.
சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதெல்லாம் அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவதை ஒரு சில ஊடக வியாபாரிகள் வெளிப்படையாகவே செய்து வருகின்றனர். சமீபத்தில் அதன் உச்சத்தை நாம் கண்டோம்.
ஆட்சியாளர்கள் பொறுப்பற்ற முறையில் நடக்கும் போது, நாட்டின் நான்காவது தூண் எனும் பத்திரிகைத் துறை (அச்சு, மின்னணு.. எதுவாயினும் சரி) அதை வெளிச்சம் போட்டுக் காட்டி, உண்மைகளை உறைக்கச் சொல்லி, மக்களுக்குப் புரிய வைக்கும் பெரும் பணியை செய்து வந்தன. இப்போது அதன் அடுத்த பரிணாமத்திற்கு செய்தி ஊடகம் சென்றிருப்பது ஆச்சரியமேதும் அளிக்கவில்லை.
ஆம்! ஊழல், முறைகேடு, லஞ்சம்... போன்ற வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு மக்களுக்குப் புளித்துப் போய்விட்டது. ஒரு அரசியல்வாதியின் தகுதியில் இதெல்லாம் ஒரு அங்கம் என்பது எழுதப்படாத விதியாகவே ஆகிவிட்டது. அதனால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதெல்லாம் தற்போது காசு பெயராத வியாபாரமாகிவிட்டபடியால், செக்ஸ் பக்கம் டார்ச் அடிக்கின்றன ஊடகங்கள்!
''அநியாயமாய்ப் பேசாதே'' என்பதை விடுத்து ''நியாயமில்லை உங்கள் பேச்சில்'' என்று சொல்லப் பழக வேண்டும், நாகரிக சமுதாயமாகிய நாம் என்பார் நண்பர் ராம்குமார். ஒரு வாக்கியத்தில் இருக்கும் சொற்களின் வீரியம் அப்படி!
Investigative journalism எனும் அடிப்படையில் உண்மைகளை ஆய்ந்தறிந்து அதைப் பகிரங்கப்படுத்துவதெல்லாம் சரிதான்! ஆனால் எந்த வகையில் அதை வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் ''ஊடகங்களின் தர்மம்'' என்பது அடங்கியிருக்கிறது. ''அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார்'' என்றுதான் சொல்ல முடியும். அச்சில் ஏற்ற முடியாத, முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளை அப்படியே போட்டு, இப்படியெல்லாம் திட்டினார் என்று சொல்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
சென்ற வாரங்களில் வந்த செய்திகளின் தரம் அப்படித்தான் இருந்தது. குப்பை! கேடு கெட்ட குப்பை!! வெகுஜனங்கள் வாங்கிப் படிக்கும் பத்திரிகைகளின் தரம் அப்படி! நானும் என் தங்கையும் அமர்ந்து ஒன்றாய் பேப்பரை விரித்துப் படிக்கும்போது, முழுப் பக்கத்தில் ஒருவரின் அந்தரங்க லீலைகளை (அது யாராயினும் சரி.. மாயாண்டியாய் இருந்தால் என்ன, மந்திரி குமாரனாய் இருந்தால் என்ன..!!) ஒவ்வொரு நிலையிலும் இது இது இப்படி இப்படி என்று படத்தின் கீழே கேப்ஷன்கள் போட்டு விளக்கி மக்களுக்கு உண்மைகளைப் ''புரிய வைத்த'' - ''இப்படிச் சொன்னால்தான்'' மக்களுக்குப் புரியும் என்று மக்களை மாக்களாக நினைத்து செய்தி வெளியிட்ட - அறிவுஜீவி களை என்னவென்று அழைப்பது?
ஒரு செய்தி ஊடகத்தில் இதன் உச்சத்திலும் உச்சமாய், ''நீங்கள் பார்த்தது டிரெயிலர்தான்.. முழுமையான வீடியோவைப் பார்க்க எங்களுக்கு சந்தா செலுத்துங்கள்'' என்று சொன்னது நீலப் படங்களை விற்கும் அண்டர்கிரவுண்ட் இணையதளங்களுக்கும், ஜனரஞ்சகப் பத்திரிகையின் இணையதளத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டது!!
ஊன்றி கவனித்தால் இவர்களின் இந்தத் தரத்திற்குப் பின்னால் பல்வேறு சிக்கலான வலைப் பின்னல்களைக் காண முடியும். அந்த வலைப் பின்னல்களில் சிக்காத ''பெரிய மனுஷனுங்களே'' இல்லை எனுமளவிற்கு பூதாகரமாக விரியக் கூடும். இதைப் பொதுஜனம் தங்களளவில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஊடகங்களின் போக்கை விமர்சிக்கிறாயென்றால் ஆன்மிகவாதிகளின் போக்கை சரியென்று சொல்கிறாயா என்ற கேள்வி வரக் கூடும். இங்கு நாம் பேசியது கருத்து சுதந்திரம், ஊடக தர்ம நியாயங்களைப் பற்றி மட்டும்தான். இதைத் தாண்டிய கேள்விகளுக்குள் எல்லாம் உட்புகுந்தால் ஆயிரம் பக்கத்தில் குற்றப் பத்திரிகை வாசிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
ஹும்.. ரொம்ப கனமா பேசியாச்சு.. அதனால் அடுத்த வாரம் சந்திக்கலாம்.
இதில் ஊடகங்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. தனி மனிதர்களும் நிறையவே இந்தத் தவறைச் செய்கிறார்கள். அப்துல் கலாம் சொன்ன செய்தியோடு இது குறித்து நானும் நிறைய ஒரு கட்டுரையில் அலசியிருக்கிறேன். அதை நீங்கள் இந்த லின்க் மூலமாக வாசிக்கலாம். http://enganeshan.blogspot.com/2008/10/blog-post.html
நல்லா எழுதியிருக்கீங்க ரிஷி, என்னை மாதிரி எத்தனையோ பேரோட மனக் குமுறல்கள்தான் உங்கள் எழுத்தாக இங்கே வந்திருக்கிறது. செய்திகளைப் படிக்கும் ஆர்வமோ, பார்க்கும் ஆர்வமோ இந்த மாதிரியான உண்மை உரைத்தல்களால் குறைந்து வருகிறது. அவரவர்களுக்கு ஒரு ஊடகம் என்று வைத்துக்கொண்டும், தங்களின் வீரதீரப் பிரதாபங்களை அள்ளி வீசிக் கொண்டும், வெளிப்படையாக ஒருவரை ஒருவர் ஊடகங்கள் வாயிலாக தரக்குறைவாகப் பேசிக்கொண்டும் இருக்கும் நேரத்தில் மக்களுக்கு என்ன செய்யலாம் என யோசித்திருந்தால் குறைந்தபட்ச நல்ல திட்டங்களாவது மக்களுக்குக் கிடைத்திருக்கும்!
[[இதில் ஊடகங்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. தனி மனிதர்களும் நிறையவே இந்தத் தவறைச் செய்கிறார்கள். அப்துல் கலாம் சொன்ன செய்தியோடு இது குறித்து நானும் நிறைய ஒரு கட்டுரையில் அலசியிருக்கிறேன்.]]
உண்மைதான் கணேசன். நாம் மெல்லுவதற்கு அவல் கேட்பதால்தானே, அதைக் கொடுக்கிறார்கள். நாம் மெல்லுவதை முதலில் நிறுத்த வேண்டும். அந்தப் பக்குவம் எத்தனை பேருக்கு வரும்! நாமும் மாற வேண்டும். ஊடகங்களும் மாற வேண்டும். Transformation என்பது ஒரே தருணத்தில் பல தளங்களிலும் நிகழ்ந்தால்தான் அது முழுமை பெறும்!!
[[ நல்லா எழுதியிருக்கீங்க ரிஷி, என்னை மாதிரி எத்தனையோ பேரோட மனக் குமுறல்கள்தான் உங்கள் எழுத்தாக இங்கே வந்திருக்கிறது. செய்திகளைப் படிக்கும் ஆர்வமோ, பார்க்கும் ஆர்வமோ இந்த மாதிரியான உண்மை உரைத்தல்களால் குறைந்து வருகிறது. தங்களின் வீரதீரப் பிரதாபங்களை அள்ளி வீசிக் கொண்டும், வெளிப்படையாக ஒருவரை ஒருவர் ஊடகங்கள் வாயிலாக தரக்குறைவாகப் பேசிக்கொண்டும் இருக்கும் நேரத்தி......... ]]
வாங்க தேவி. "நான் சொல்வது உண்மை" என்பதை விடுத்து "நான் சொல்வது மட்டுமே உண்மை" என்பதுதான் பல ஊடகங்கள், அரசியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆரோக்கியமான மாற்றுக் கருத்துக்களை வரவேற்க வேண்டும் என்ற நன்நெஞ்சம் பலருக்கு இல்லை. தாங்கள் தோல்வி அடைந்தது தெரிந்தால், தங்களது தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். அதனால் கல்லாவின் மதிப்பு குறைந்து விடுமே என்ற கவலை அவர்களுக்கு அந்தப் பக்குவத்தைத் தராது. அதனால்தான் இது போன்ற "உண்மை உரைத்தல்கள்" வெளிவருகின்றன. நாமும் கணேசன் அவர்கள் கூறியபடி, முடிந்தவரை நல்ல செய்திகளின்பால் மட்டும் அதிக கவனம் செலுத்த முயற்சிப்போம்.
[[ Kஅவcஇ தன் உலகம் நு ஒடுமொத மக்கலிஉம் நினப்பதல் பட்ரிக்கை உலகம் அப்டி செஇடி வெலிஎடுது,,,, அதை நம் தடி கெஅடல்...அப்ப மடும் கர்து சுதனிரம் நு வரின்cஇகட்டிடு நம்படையெஅ சன்டைக்கு வருவஙாஆ .... மும்ம்ம்ம்... 10 இல் 1 ருதரவது இப்ப்டி நினைக்கொமெஆஅ நு நமை நமெஅ எஅமடிக்க வெஅன்டியது தன்.. ]]
வாருங்கள் ராதா. நம்மளவில் நாம் சரியாக இருக்கிறோமா என்று மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அந்த அளவில் அதை ஏமாற்றம் என்று சொல்லத் தேவையில்லை. நம்மைப் பற்றிய திருப்தி நமக்கு இருந்தால் போதும். இருந்தாலும் பொது ஜனத்தின் கருத்து இதுதான் என்பது போல விஷ ஆக்டோபஸ்கள் தங்கள் கருத்தைத் திணிக்கும்போது சமுதாயத்தின் ஒரு பகுதி அதை அப்படியே ஏற்றுக் கொள்வது நல்ல விஷயமாகப் படவில்லை என்பதே நம் ஆதங்கம். "செவிடன் காதில் ஊதிய சங்கு"தான்!!
வணக்கம் ரிஷி! ஊடகங்களின் உளரல்களை பொருட்படுத்தாமல் இருந்தால் அதுவே போதும். சுய நலத்துடன் வியாபார நோக்குடன் செயல் படும் இந்த ஊடகச் சிதறல்களை மக்கள் புறந்தள்ளினால்தான் இந்த ஊடகங்களும் மாறும். சரியான நேரத்தில் சரியான கட்டுரையை வெளியிட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.
ரிஷி, நல்லா எழுதிருக்கீங்க. மனிதனுக்கு எப்பவுமே இரண்டு மனசு. ஒன்னு நல்லதா நினைக்கும். ஒன்னு வக்கிரமா நினைக்கும். இந்த வக்கிர மனசைக் கிளறிவிட்டுக் காசு பார்க்கிறவங்களாயிடுச்சு பத்திரிக்கை/செய்தித் துறை. மக்களோட ஒரு மனசு இதெல்லாம் தப்புன்னு உரக்கப் பேசினாலும், இன்னொரு பக்கம் இந்த மாதிரிச் செய்திகளுக்கு ஆசைப்படுது. போன வாரம் வந்த இந்த ஒளிபரப்பைப் பத்தி எனக்குத் தெரிந்த அத்தனை பேரும் திட்டினாங்க. ஆனால் முதல் நாள் ஒளிபரப்பியதை அடுத்த நாளும் ஒளிபரப்பினப்போ திரும்ப உட்கார்ந்து பார்த்துட்டு மறுநாளும் விலாவரியா விமரிச்சாங்க. தப்புன்னு சொல்றவங்க இந்த செய்தியை ஒதுக்கித் தள்ளலை. இப்படித் தான் 100க்கு 90 பேர் இருக்காங்க. இதனால நம்மளை மாதிரி 10 சதவீதம் பேரை தொலைக்காட்சியினர் ஒதுக்கித் தள்ளிடுறாங்க. திட்டிட்டு திட்டிட்டு அதே செய்தியைப் படிக்கிறோம் பார்த்தீங்களா, அது கூடாது. அந்தப் பத்திரிக்கை, சேனல் இவற்றைப் பார்க்கறதைத் தொடர்ந்து தவிர்க்க ஆரம்பிக்கணும்.எப்ப 100க்கு 50 பேராவது இந்த மாதிரி ஒளிபரப்புகளுக்கும், பத்திரிக்கை செய்திகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிக்கிறாங்களோ, அன்னைக்கு தான் திருப்பம் வரும். தனிமனித மாற்றம் முதல்ல வரணும். அப்புறம் தான் சமூக மாற்றம் வரும்.
வணக்கம் பிரேம்ஸ். வாழ்த்துக்களுக்கு நன்றி. இதற்கு மதிப்புக் கொடுத்து எழுத வேண்டுமா என்று தான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் எல்லா விஷயங்களிலும் மனதில் பட்டதைச் சொல்லும்போது இதை மட்டும் விடுவதா என்று எழுதிவிட்டேன்...
உண்மைதான் ஜோ. அதனால்தான் மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி காசு பார்க்கிறார்கள். நம்மளவில் நாம் மாறிக்கொண்டாலே போதும். ஒரே நாளில் சமூக மாற்றம் வந்து விடாது. அது மெல்லக் கனிந்து புதுப் பரிமாணம் எடுக்கும்வரை காத்திருப்போம், நாம் நம்பிக்கையிழக்காமலே.
நாட்டின் இன்றைய அவலநிலையை அப்படியே எழுத்தில் வார்த்துள்ளீர்கள். என் போன்றவர்களின் உள்ளக்குமுறல் உங்கள் வாயிலாய் வெளிப்பட்டுள்ளது. இனியும் இது போன்ற கேலிக்கூத்துகள் தொடராமலிருக்க பொதுஜனமாகிய நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை அறிவுபூர்வமாக யோசித்துச் செயல்படவேண்டியதுதான் இப்போதைக்குத் தேவையான ஒன்று. எனவே மீண்டும் மீண்டும் இது போன்ற செய்திகளுக்குக் காது கொடுக்காமல் மற்ற வேலைகளை கவனிப்போம்.
ரிஷி, ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. தாமதத்திற்க்கு மன்னிக்கவும். நீங்க எழுதியிருக்கிற அனைத்தும் மிக சரி. எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு. பார்க்கலாம். தனி மனிதனாக நாம் எதையும் சீர் செய்ய முடியாது. மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்.